வியாழன், 5 ஏப்ரல், 2012

போயஸ் கார்டனுக்கு சசிகலா அழைத்துச் செல்ல விரும்பிய இளவரசர்!


Viruvirupu



மூன்று மாதங்கள் முன்னாள் சகோதரியாக இருந்த சசிகலாவை, மீண்டும் இன்னாள் சகோதரியாக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அந்த அம்னிஸ்டி எக்ஸ்டென்ஷனை முன்னாள் வளர்ப்பு மகன் விஷயத்தில் கொடுப்பதாக இல்லை. அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. “மு.வ.மகன் மீது கடும் கோபத்தில் உள்ளார் அம்மா” என்கிறார்கள் கார்டன் வட்டாரங்களில்.
பெங்களூருவில் சசிகலா தடம் மாறிச் சென்றதற்கு, சுதாகரனின் சமீபகால சினேகிதமும் ஒரு காரணம் என்று ஜெயலலிதா நினைக்கிறார் என்கிறார்கள், இவர்களது உள்விவகாரம் அறிந்தவர்கள்.
சமீப காலங்களில் சொத்துக் குவிப்பு வழக்குக்கான ஆஜராகும் போதெல்லாம், சசிகலா அதிகம் பேசிக் கொண்டது சுதாகரனுடன்தான் என்று இவர்களது நடவடிக்கைகளை ரிப்போர்ட் செய்ய சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது.

கோர்ட் ரூமிலும், சுதாகரன் ‘ஸ்டைல்’ என்று செய்யும் அங்க சேஷ்டைகளை பார்த்து ரசித்து சிரித்துக் கொண்டிருந்த சசிகலா பற்றியும் சென்னைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
‘அக்காவுக்கு வாழ்க்கையை அர்ப்பணித்த அறிக்கை’ வெளியிட்ட அன்று இரவுகூட வழக்கு விசாரணைக்காக பெங்களூரு சென்றிருந்தார் சசிகலா. அந்த அறிக்கை, கார்டனின் மேற்பார்வையில் வெளியானது என்ற விஷயத்தை புரியாத பாமரர்கள் யாரும் இல்லை என்பதால், மறுநாள் கோர்ட்டில் சசிகலாவுக்கு ஏக செல்வாக்கு. ஜெயலலிதாவின் வக்கீல்களே சசிகலாவுக்கு முன்னால், நுனிக்காலின் நின்றனர்.
இனி அம்மாவுடன் ஐக்கியம் என்பது உறுதியாகிவிட்ட நிலையில், சசிகலாவின் நடவடிக்கைகள் பலராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டன.
அப்போதுகூட அவர் சுதாகரனுடன்தான் உற்சாகமாக ஏதோ பேசிக்கொண்டு இருந்தார். குற்றவாளிக் கூண்டில் அமர்ந்திருந்த நிலையிலும், சசிகலாவும் சுதாகரனும் கைக்குட்டையால் முகத்தை மறைத்தவாறு, தமக்குள்ளே ஏதோ பேசிச் சிரித்துக் கொண்டு இருந்தனர். இந்த விவகாரமும் சென்னைக்கு தகவலாக போய்ச் சேர்ந்தது.
மன்னார்குடி குடும்பத்துடன் பரிச்சயமுள்ள ஒருவர், “சசிகலா கார்டனுக்கு போவது உறுதி என்று தெரிந்தவுடன், மீண்டும் சுதாகரனுக்கும் பாலம் அமைத்துக் கொடுக்க நினைக்கிறார் என்று தெரிகிறது. மீண்டும் கார்டனில் வலம்வரும்போது, அங்கே இளவரசி இருப்பதைவிட, இளவரசர் (சுதாகரன்) இருப்பதையே சசிகலா விரும்புகிறார். ஆனால், ஜெயலலிதா அதை அனுமதிப்பாரா என்பதுதான் தெரியவில்லை” என்றார்.
சசிகலா இப்படி ஒரு ட்ரை போட்டதை ஜெயலலிதாவும் புரிந்து கொண்டார் என்கிறார்கள்.
சசிகலா கார்டனுக்கு வந்த மறுநாள் காலை, கார்டனுக்கு நான்கு அமைச்சர்களை வரச்சொல்லி சந்தித்திருக்கிறார் ஜெயலலிதா. அப்போது சசிகலாவும் கார்டனின் வேறு ஒரு பகுதியில் இருந்திருக்கிறார்.
அந்த அமைச்சர்களிடம், “சசியை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொண்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்” என்றாராம் ஜெ.
கட்சியில் சேர்த்துக் கொண்டது மட்டுமென்ன, சசிகலா தாம் அமர்ந்துள்ள பில்டிங்கில் வேறு ஒரு ரூமில் இருப்பதுகூட தெரிந்திருந்த அந்த அமைச்சர்கள் நால்வரும் என்ன சொல்வது என்று தெரியாமல், மையமாக தலையை ஆட்டியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஜெயலலிதா அடுத்து சொன்ன வாக்கியம்தான், முக்கியமானது.
“மீண்டும் சேர்த்துக் கொண்டது சசியை மட்டும்தான். சுதாகரன் உட்பட வேறு யாரையும் அல்ல” என்றாராம், ‘சுதாகரன்’ என்பதற்கு அழுத்தம் கொடுத்து.
முன்னாள் வளர்ப்பு மகனைக் கண்டால், சல்யூட் அடிப்பதா, இல்லையா என்ற குழப்பத்துடன் கார்டனை விட்டு வெளியேறிய அந்த நான்கு அமைச்சர்களும், வெளியேயுள்ள தமது சகாக்களிடம் தமது குழப்பத்தை கூறி புலம்பியிருக்கிறார்கள்.
பாவம் அவர்களும் என்ன செய்வார்கள்? சசிகலா சின்டிகேட் ஆட்கள் ஏதோ ஒருவர், இருவர் என்றால், அவர்கள் தலை தெரியும்போது இவர்கள் ஒழிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக