திங்கள், 2 ஏப்ரல், 2012

ஜெயா – சசி / அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சி சுரண்டிச் சேர்த்த சொத்து

ஜெயா-சசிகலாஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம்.
கேடி நம்பர் 1 - சீசன் 2 முடிந்தது
கிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.
கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்த நாடகம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இதை முற்றிலும் நாடகம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த இதே போன்றொதொரு பிரிவு – சேர்க்கையிலிருந்து இந்த 2011-12 எபிசோடு அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது.
சசிகலாவின் சேர்க்கைதான் ஜெயாவின் ஊழலுக்கு காரணமென்று அவரது நீக்கத்தை போற்றிப் பாடிய பார்ப்பன ஊடகங்களின் திரித்தலை மறுத்து அப்போது ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஜெயா – சசி கும்பலின் ஊழல், அதிகார முறைகேடுகள், பார்ப்பனிய பக்தி, பாசிச ஆட்சி அனைத்திற்கும் ஜெயாவே பிரதானமான காரணமென்று அதில் சுட்டியிருந்தோம்.

பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் போதான நீதிபதியின் நேர்காணலுக்கு பதிலளித்த சசிகலா, சொத்து சேர்ப்பு குறித்த விவகாரம் எதிலும் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் பலர் ஜெயவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டது தனக்கு தெரியாது, ஒருபோதும் தான் அக்காவிற்கு துரோகம் செய்ய நினைத்ததில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை முக்கியத்துவம் கொடுத்து காட்டிய ஜெயா டி.வி அடுத்த நாளே அவர் மீதான நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜெயா அறிவித்ததைக் காட்டியது. சகோதரிகள் மீண்டு சேர்ந்ததாக ஊடகங்களும் அறிவித்தன.
ஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம். எனினும் இந்த சொத்துப் பேரரசின் கடிவாளம் யாரிடம் இருக்க வேண்டுமென்பது இருவரிடையே எற்பட்டிருக்கும் முரண்பாடு. இந்த முரண்பாடு நட்பு முரண்பாடா, பகை முரண்பாடா என்றால் நிச்சயம் இது பகை முரண்பாடாக போக முடியாத அளவுக்கு சொத்துரிமை விவகாரங்கள் தடுக்கின்றன. மீறிப் போனால் அது இருவருக்குமே பிரச்சினை.
ஜெயா-சசி கும்பல் கடந்த ஆட்சிக்காலங்களில் முழு தமிழகத்தையுமே மொட்டையடித்து சுரண்டிச் சேர்த்த சொத்துக்களின் வலிமையில்தான் அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சியை கட்டி மேய்ப்பதோடு ஆட்சியையும் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் எதை துறந்தாலும் அதன் விளைவு மற்றதை பாதிக்கும். அந்த பயம்தான் இருவரின் சேர்க்கைக்கும் நிபந்தனை. இதைத் தாண்டி இருவரும் சண்டை போட முடியாது.
எனினும் இப்போது கடிவாளம் ஜெயாவிடமே இருக்க வேண்டும் என்பதை இந்த 2012 எபிசோடு காண்பித்திருக்கிறது. மன்னார்குடி கும்பலில் சசிகலாவைத் தவிர அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்து தனது நாட்டாண்மையை ஜெ தெரிவித்திருக்கிறார். கைது வரை போகுமா என்று நினைத்திருந்த மன்னார்குடி கும்பல் இப்போது சிறையிலிருந்தவாறு சமாதான வழிகளைத் தேடி வருகிறது. சேர்ந்தே ஊழல் செய்திருந்தாலும் அதை விசாரணை செய்யும் உரிமையை ஜெயாவே வைத்துக் கொண்டதை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. காரணம் அவர் மீதான பார்ப்பன ஊடகங்களின் பக்தி.
ஆக மன்னார்குடி கும்பல் இனி  அடக்கி வாசிக்க வேண்டுமென்பதாக இந்த பிரிவு நாடகம் முடிந்திருக்கிறது. கூடவே சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் சசிகலாவின் “அக்கா மேல எந்த தப்புமில்லை” எனும் வாக்குமூலமும் கூட இதில் பங்காற்றியிருக்கக் கூடும். அல்லது இது பேசி வைத்துக் கொண்டதாக இருக்குமென்று சிலர் கூறினாலும் அது முற்றிலும் அப்படி மட்டும் நடந்திருக்க முடியாது. ஏனெனில் மன்னார்குடி கும்பலின் சொத்துரிமையின் மேலாண்மை இப்போது மாறியிருக்கிறது என்பதால் பெங்களூரு வழக்கில் சசிகலா வாக்குமூலம் என்பது தொடர் விளைவுதான். நாடகத்தின் மையக் கதை அல்ல.
அடுத்து ஜெயா ஆட்சிக்கு வந்த எல்லா சமயங்களிலும் அவர் எடுத்த மக்கள் விரோத முடிவுகள், பார்ப்பன பாசிச அடக்குமுறைகள் அனைத்தும் அவரது வர்க்க நலன் சார்ந்து எடுக்கப்பட்ட ஒன்றுதான். அதற்கும் சசிகலாவுக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் விசேசமான தொடர்புமில்லை. தேவர் சாதிவெறியின் மேலாண்மை மட்டும் மன்னார்குடி கும்பலின் தனிச்சிறப்பு என்றாலும் இதுவும் பார்ப்பன பாசிசத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். தற்போது “ராமர் பாலம்” எனும் புராணப் புளுகைக்கூட தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதிலிருந்தும் ஜெயாவின் பார்ப்பன விசுவாசத்தை புரிந்து கொள்ளலாம்.
சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை தள்ளி மிரட்டும் பிரச்சினையில் ஜெயா திமிராக அறிவித்தது நினைவிருக்கிறதா? அதாவது பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெறுவேன் என்று அவர் அடித்துச் சொன்னது வெறுமனே தேர்தல் வெற்றி சார்ந்த ஒன்றல்ல. அது அவரது பாசிச திமிரை காட்டுகிறது.
மேலும் ஜெயாவின் ஆட்சி என்பது போலிசு மற்றும் அதிகார வர்க்கத்தினரை மட்டும் நம்பி நடத்தப்படும் சிறு கும்லது ஆட்சி. அவர்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி போன்றதொரு அமைப்பில் நடத்தப்படும் ஆட்சி. இது ஜெயாவின் தனிப்பட்ட பண்பு என்பதோடு, பொதுவில் பாசிஸ்ட்டுகள் அனைவருக்கும் உள்ள பொதுப்பண்பும் ஆகும். அந்த வகையில்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது ஜெயாவின் கிச்சன் கேபினட்டாக அமர்ந்திருக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்கும் இத்தகைய கட்டுக்கோப்பான ஆட்சிகளைத்தான் தற்போது முதலாளிகள் விரும்புகின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைப் பிரச்சினைகள் மக்களிடையே அமைப்பு ரீதியான எதிர்ப்பாக எழும் போது அதற்கு ஜெயா பாணியிலானா போலிசு ஆட்சிதான் தீர்வு என்பது ஆளும் வர்க்கத்தின் முடிவு.
பரமக்குடி துப்பாக்கி சூடாக இருக்கட்டும், இல்லை கூடங்குளம் மக்கள் மீதான அடக்குமுறையாக இருக்கட்டும் இவையெல்லாம் ஜெயாவின் பேயாட்சி என்பதோடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகவும் இருப்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்ந்தே இருக்கின்றன. அத்தகைய போக்கின் அடையாளமாகத்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது அம்மாவை சீராட்டி பாராட்டி வளர்த்து வருகின்றன. இதனால் ஜெயாவின் தனிப்பண்புக்கு இடமில்லை என்பதல்ல. இருவரும் தன்னளவில் ஒரே பார்வை உடையவர்கள். ஒருவேளை மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் ஜெயா அவர்களது அபிலாஷைகளை அவர்கள் சொல்லாமலேயே நிறைவேற்றும் ஆளுமை கொண்டவர். அதே போன்று மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் பார்ப்பன ஊடகங்கள் ஜெயாவை எந்த தருணத்திலும் கை கழுவியது இல்லை.
ஊரறிந்த அவரது திமிரான நடவடிக்கைகள் கூட பார்ப்பன ஊடகங்களில் விமரிசிக்கப்படுவதில்லை. தினமணி வைத்தி மாமாவின் ஜால்ரா தலையங்கங்களே அதற்கு சான்று. ஆனால் இதே சலுகை கருணாநிதிக்கு இல்லை என்பதோடு அவரை தொட்டதுக்கெல்லாம் குத்தி காட்டுவதும் பார்ப்பன ஊடகங்களில் சாதாரணம். இது அரசியலிலும் இருக்கிறது. பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என்றாலும் அத்வானி, மோடி போன்றோர் போயஸ் தோட்டத்தில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே வந்து போகும் உரிமை உள்ளவர்கள். அதே போன்று பா.ஜ.கவின் கொள்கைகளை கூட்டணி இல்லாமலே ஆதரிக்கும் பண்பு ஜெயாவிடம் உண்டு.
மன்னார்குடி கும்பலுக்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை வெளியே தெரியாமல் உள் வட்ட பஞ்சாயத்தில் தீர்த்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். கூடிக் கொள்ளையடிப்பதிலும், சுரண்டுவதிலும்தான் ஆளும் வர்க்கத்தினரிடையே ஒற்றுமை இருக்கும். பங்கு பிரிப்பதில் முரண்பாடு வந்தால் அது வெளியே வந்தே தீரும். இதை 2 ஜி ஊழலிலும், நீரா ராடியா விவகாரத்திலும் பார்த்திருக்கிறோம். தரகு முதலாளிகளுக்கிடையே உள்ள வணிகப் போட்டி காரணமாகவே இந்த ஊழல் வெளியே வந்திருக்கிறது.
அதனால்தான் மன்னார்குடி கும்பலை முற்றிலும் நீக்கிவிட முடியாத நிலையில் ஜெயா இருக்கிறார். சசிகலாவோ, வெறு சில முக்கியமான உறவினர்களோ அனைவரும் ஜெயாவின் அனைத்து விசயங்களையும், அந்தரங்கங்களையும் அறிந்தவர்கள். அந்த அந்தரங்கத்தில் முக்கியமானது ஜெயாவின் ஊழல் சொத்துக்களும் அதன்  இன்றைய நிலைமையும். இதை வெளியே சொன்னால் ஜெயா பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இதை வெளியே சொல்வதால் மன்னார்குடி கும்பலும் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவகையில் அது இருவருக்கும் தற்கொலைப் பாதை என்றும் சொல்லலாம்.
வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக மக்கள்தான் தற்கொலை செய்வார்களே ஒழிய முதலாளிகள் மாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினைகள் தோற்றுவிக்கும் தன்மானம், நாகரீகம், கௌரவம், அச்சம், நேர்மை போன்ற உணர்ச்சிகளெல்லாம் அதிகார பீடங்களில் இருப்பவர்களுக்கு இல்லை. அவையெல்லாம் மக்கள் திரள் முன்னே அவிழ்த்துப் போடப்படும் முகமூடிகள் என்பதைத்தாண்டி வேறு முக்கியத்துவம் இல்லை. ஆகவே அவர்கள் அடித்துக் கொண்டாலும், கூடிக் கொண்டாலும் அது மக்களிடையே நடப்பதைப் போன்று இருக்காது; இருக்கவும் முடியாது. ஆக ஜெயா சசி கும்பல் தங்களிடையே வரம்பு மீறி சண்டையிடும் தற்கொலைப் பாதையை எப்போதும் எடுக்காது. ஒரு வேளை அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் ஒரு கும்பல் பூண்டோடு அழிக்கப்படவேண்டியது அவசியம்.
அதற்குத்தான் மயிலாப்பூர் கும்பல் முனைகிறது. என்றாலும் அது அத்தனை சுலபமல்ல. சனிப்பெயர்ச்சியின் போது நீக்கப்பட்ட சசிகலா இப்போது முட்டாள்கள் தினத்தில் சேர்ந்திருக்கிறார். மக்களோ இன்னமும் சனியனை நீங்க முடியாமலும், முட்டாள்தினத்தின் காட்சிகளில் மயங்கியவாறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக