திங்கள், 2 ஏப்ரல், 2012

மியான்மர்: ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சிக்கு 43 தொகுதிகளில் அமோக வெற்றி

யாங்கூன்: சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் மியான்மர் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 43 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 44 தொகுதிகளில் ஆங் சான் சூகியின் ஜனநாயக் கட்சி போட்டியிட்டது. தலைநகர் யாங்கூனில் 4 தொகுதிகளை சூகியின் கட்சி கைப்பற்றியுள்ளது. கவ்மு தொகுதியில் போட்டியிட்ட சூகியும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆங் சான் சூகி, கட்சியின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறும் பிற கட்சியினருக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாங்கூன் உட்பட அனைத்து நகரங்களிலும் சூகியின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனிடையே மியான்மரில் ஜனநாயக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்தினால்மட்டுமே கடந்த கால்நூற்றாண்டுகாலமாக விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரத் தடைகளை நீக்க முடியும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூறிவந்தது. தற்போதைய தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து தடைகளை நீக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக