சனி, 7 ஏப்ரல், 2012

மோசடி தங்ககாசு கொள்ளை முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியர்

Muthoot Finance Gold coin Heistதங்கக் காசு கொள்ளை... அத்தனையும் 'பக்கா ட்ராமா' - ஒரே நாளில் கண்டுபிடித்து அசத்திய போலீஸ்!

 

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தங்ககாசு கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நடந்தது அனைத்தும் அந்த நிறுவன ஊழியர் மற்றும் அவர் நண்பர்களின் 'பக்கா நாடகம்' என்பதை சென்னை போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தங்கக் காசுகளை மீட்டுள்ளனர்.சம்பந்தப்பட்ட நிறுவன ஊழியர்களையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக இணை கமிஷனர் சங்கர் நேற்று மாலை 6.30 மணி அளவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை கோயம்பேட்டில் புதன்கிழமை நள்ளிரவில் ஆட்டோவில் கொண்டு வரப்பட்ட 2.5 கிலோ எடையுள்ள தங்ககாசுகள் கொள்ளை போய்விட்டதாக ஒரு புகார் கொடுக்கப்பட்டது. முத்தூட் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணிபுரியும் செந்தில்குமார், ராமநாதன் ஆகிய இருவர் இந்த புகாரை தெரிவித்தனர்.
செந்தில்குமார் கோவை முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் தங்ககாசு விற்பனை பிரிவு நிர்வாகியாக வேலை பார்ப்பவர். ராமநாதன் பொள்ளாச்சி முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்ப்பவர்.
முத்தூட் பைனான்ஸ் நிதி நிறுவனம் தங்க காசுகளை தவணை முறையில் பணம் வாங்கி விற்பனை செய்யும் திட்டத்தை நடத்தி வருகிறது. இதற்கான தங்க காசுகளை பெங்களூரில் தயார் செய்து, சென்னை சூளைமேட்டில் உள்ள முத்தூட் நிறுவனத்தில் குவித்து வைத்திருப்பார்கள். இங்கிருந்து தங்க காசுகளை செந்தில்குமார் தமிழகம் முழுவதும் கொண்டு சென்று அனைத்து கிளைகளுக்கும் சப்ளை செய்வார்.
கொள்ளை புகார்...
இவ்வாறு 7 கிலோ தங்க காசுகளை கோவை முத்தூட் நிறுவன கிளைக்கு கொண்டு செல்லும்போது அவை கொள்ளை அடிக்கப்பட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. செந்தில்குமாரும், ராமநாதனும் 7 கிலோ தங்ககாசுகளையும் 3 பைகளில் போட்டு ஆட்டோவில் எடுத்து வந்ததாகவும், ஆட்டோவை வழியில் நிறுத்தி டிரைவரின் நண்பர் ஒருவர் ஏறியதாகவும், பின்னர் ஆட்டோ கோயம்பேடு மார்க்கெட் செல்லும் வழியில் இருட்டான பகுதியில் வைத்து, ஆட்டோ டிரைவரும், அவரது நண்பரும், தாங்கள் கொண்டு சென்ற தங்ககாசுகளில் ஒரு பையில் இருந்த 2.5 கிலோ தங்ககாசுகளை கொள்ளை அடித்தாகவும் புகாரில் கூறி இருந்தனர்.
கொள்ளையர்கள் கத்தியால் தனது கையில் குத்தி விட்டதாகவும் செந்தில்குமார் தெரிவித்தார். அவரது இடது கையில் ரத்தகாயமும் இருந்தது. கொள்ளையர்கள் தனது கழுத்தில் கிடந்த தங்க செயினையும், செல்போனையும் கூட பறித்து சென்று விட்டதாக மேலும் செந்தில்குமார் தெரிவித்தார். கொள்ளையர்கள் தப்பிச் செல்லும்போது மிளகாய் பொடியை கண்களில் தூவினார்கள் என்றும், செந்தில்குமாரும், ராமநாதனும் சொன்னார்கள்.

7 தனிப்படை
இந்த சம்பவம் தொடர்பாக புகார் வந்தவுடன் உடனடியாக நான், துணை கமிஷனர் கார்த்திகேயன், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோருடன் நேரில் சென்று விசாரணை நடத்தினேன்.

கோயம்பேடு போலீசில் கொள்ளை வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆட்டோவில் தப்பிச் சென்ற கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் அனந்தராமன், சம்பத்,சுப்பிரமணியன், குமாரவேலு, பாஸ்கர்,சேகர்பாபு, விஜயகுமார் ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினோம்.

உண்மையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடந்து விட்டது என்றுதான் தீவிரமாக விசாரித்தோம். ஆனால் செந்தில்குமாரும், ராமநாதனும் சொன்ன தகவல்கள் முரண்பட்டதாக இருந்தது. செந்தில்குமார் யார், யாரிடம் செல்போனில் பேசினான் என்ற தகவல்களை சேகரித்தபோது, அவர் சூளைமேட்டைச் சேர்ந்த அப்பாதுரை என்பவரோடு அதிக தடவை பேசி இருப்பது தெரியவந்தது.

அப்பாதுரை கைது

முதலில் அப்பாதுரையைப் பிடித்தோம். அவர் ஒரு ஆட்டோ டிரைவர். அவரை விசாரித்தபோது, ராமநாதன் இவர்தான் நாங்கள் சென்ற ஆட்டோவை ஓட்டினார். அவர்தான் கொள்ளையர்களில் ஒருவர் என்றும் சொன்னார். மேலும் அவரது ஆட்டோவில் 5 சாமிபடங்கள் இருந்தன. அதை வைத்து அப்பாதுரையின் ஆட்டோதான், கொள்ளை ஆட்டோ என்பதையும் ராமநாதன் உறுதிபடுத்தினார்.

ஆனால் அப்பாதுரை தனக்கு அதில் சம்பந்தம் இல்லை என்று மறுத்தார். செந்தில்குமாரும், அப்பாதுரை ஆட்டோ டிரைவர் இல்லை என்றும், அவரது ஆட்டோவும் கொள்ளை ஆட்டோ இல்லை என்றும் மறுத்தார். இதில்தான் எங்களுக்கு முதலில் செந்தில்குமார் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர் ஏன் குற்றவாளியை இல்லை என்று மறுக்கிறார் என்று நினைத்தோம்.

நாடகம் அம்பலம்

அதன்பிறகு ராமநாதனை தனியாக விசாரித்தபோது, செந்தில்குமார் பொய் சொல்வது தெரிந்தது. பின்னர் தீவிரமாக விசாரித்தபோது செந்தில்குமார் தான்தான் குற்றவாளி என்பதை உறுதிபடுத்தி ஒப்புக்கொண்டு விட்டார். உடனடியாக அவரும், அப்பாதுரையும் கைது செய்யப்பட்டனர். அடுத்து ஆட்டோவில் மறித்து இடையில் ஏறிய ராஜு என்பவரையும் கைது செய்தோம். அவரும் ஆட்டோ ஓட்டுபவர்தான்.

அப்பாதுரையும், ராஜுவும் செந்தில்குமாரின் நண்பர்கள். 3 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொள்ளை நாடக சம்பவத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள். கொள்ளை உண்மையிலேயே நடந்தது என்று போலீசார் நம்பவேண்டும் என்பதற்காக, செந்தில்குமாரை, ராஜு கத்தியால் குத்தி இருக்கிறார். மிளகாய் பொடியையும் தூவி இருக்கிறார்கள்.

3.8 கிலோ தங்ககாசு மோசடி

இந்த கொள்ளையில் ராமநாதனுக்கு பங்கு இல்லை. அவர் அப்பாவி என்பதால் அவரை விட்டு, விட்டோம். இந்த கொள்ளை நாடகத்தின் கதாநாயகன் செந்தில்குமார்தான். அவர் அடிக்கடி கொண்டு செல்லும் தங்ககாசுகளில் இருந்து, 3.8 கிலோ தங்க காசுகளை திருடி இருக்கிறார்.

அதை நிர்வாகத்தினர் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காகவும், திருடிய தங்க காசுகளை இந்த கொள்ளை மூலம் சரிகட்டவும் செந்தில்குமார் திட்டம் போட்டு இருக்கிறார். அவரது கொள்ளை நாடகத்தில் தனது நண்பர்கள் அப்பாதுரையையும், ராஜுவையும் மிகவும் தத்ரூபமாக நடிக்க வைத்துள்ளார்.

24 மணி நேரத்தில்

கொள்ளை புகார் கொடுத்த 24 மணி நேரத்தில் இந்த வழக்கில் சாமர்த்தியமாக துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்ததோடு, கொள்ளை போனதாக சொன்ன தங்க காசுகளையும் மீட்டு விட்டோம். செந்தில்குமார் போலீசை ஏமாற்றப் பார்த்தார். அவர் அதில் ஏமாந்து போனார்.
அவர் தேனியை சேர்ந்தவர்.பி.எஸ்.சி.பட்டதாரி. திருமணமாகி அவருக்கு மனைவி, குழந்தை உள்ளனர்.
அவர் இது போல் திருடிய பணத்தில் சென்னை வளசரவாக்கத்தில் சொந்தமாக ஒரு ஒட்டல் வைத்துள்ளார். அந்த ஓட்டலை அப்பாதுரைதான் கவனித்து வருகிறார். பல்லடத்தில் கோழிப்பண்ணை வைக்க நிலம் வாங்கி போட்டுள்ளார்.
மேலும் தனது மகன் பெயரில் ஒரு நிதிநிறுவனம் ஒன்றையும் சொந்தமாக தொடங்கி உள்ளார்.

கவனக்குறைவு

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தினர் இது போல் தங்ககாசுகளை கொண்டு செல்வதற்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவில்லை. மேலும் கிலோ கணக்கில் தங்ககாசுகளை கொண்டு செல்லும் போது சரியான தணிக்கை முறையையும் அவர்கள் கையாளவில்லை.

அதை பயன்படுத்திதான் செந்தில்குமார் தனது மோசடியை முதலில் அரங்கேற்றிவிட்டு, அடுத்து அதை சரிகட்ட கொள்ளை நாடகத்தையும் நடத்தி இருக்கிறார்.

இவ்வாறு இணை கமிஷனர் சங்கர் தெரிவித்தார்.

பேட்டியின்போது துணை கமிஷனர் கார்த்திகேயன், கூடுதல் துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கலிதீர்த்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.

சபாஷ் சென்னை போலீஸ்

இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கி குற்றவாளிகளை பிடித்த தனிப்படை போலீசாரை கமிஷனர் திரிபாதி, கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா ஆகியோர் பாராட்டினார்கள். தனிப்படை போலீசாருக்கு இணை கமிஷனர் சங்கர் ரொக்கப் பரிசு வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக