சனி, 7 ஏப்ரல், 2012

தென் சீனக் கடல் உலகின் பொது சொத்து!'- இந்தியா பதிலடி

தெற்கு சீன கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் ஆய்வுப்பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அந்தப் பகுதி, உலகின் பொது சொத்து. எனவே ஆய்வு நடத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது.
சீனாவின் தெற்கு கடல் பகுதியில் 52 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளும், அந்தக் கடல் பகுதியும் தங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறுகிறது. ஆனால், தங்களுக்குத்தான் சொந்தம் என்று வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.
இதுதொடர்பாக மேற்கண்ட 4 நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.

அந்த கடல் பகுதியில் இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், விதேஷ் நிறுவனம் ஆகியவை வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து கடந்த மாதம் முதல் எண்ணெய் ஆய்வு நடத்தி வருகின்றன. பிரச்சினைக்குரிய வியட்நாம் நாட்டுடன் சேர்ந்து இந்தியா ஆய்வு செய்வதால், வியட்நாம் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதாக கருதி, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவுக்கு மிரட்டலும் விடுத்தது.

எஸ்.எம்.கிருஷ்ணா

இந்தநிலையில், பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இதுகுறித்து கருத்து கேட்கப்பட்டது.

அவர் கூறுகையில், "தெற்கு சீன கடல் பகுதிகள் அனைத்தும் உலகத்தின் சொத்து. தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஏசியன்) இதை ஏற்றுக் கொண்டுள்ளன. சீனாவும் இந்த கருத்தை ஏற்றுள்ளது.

தெற்கு சீன கடல் பகுதிகள், வளர்ந்து வரும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும். அங்கு எந்த ஒரு நாட்டின் தலையீடும் இருக்கக் கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்த விவகாரத்தில் இந்திய-சீன பரஸ்பர உறவில் எந்த பாதிப்பும் நிச்சயமாக இல்லை. சீன அதிபர் ஹு ஜின்டாவோ, 'பிரிக்ஸ்' மாநாட்டுக்காக சமீபத்தில் இந்தியா வந்தார். அவருடன் நாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை சுமூகமாகவே இருந்தது," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக