புதன், 4 ஏப்ரல், 2012

ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா?இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக

டெல்லி: தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்:

ஹரியாணாவின் ஹிசார் பகுதியில் இருந்த மெக்கனைஸ்டு இன்பான்ட்ரி படையும், ஆக்ராவிலிருந்து பாரா பிரிகேட் படையும் டெல்லிக்கு அருகே கொண்டு வரப்பட்டன.

இதில் mechanised infantry படை என்பது டேங்குகள், கவச வாகனங்களை உள்ளடக்கியது. லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங் தலைமையிலான இந்தப் படை ராணுவத்தின் மிக முக்கியமான 1 Corps தாக்குதல் படைப் பிரிவாகும். மதுராவை தலைமையகமாகக் கொண்ட இந்தப் படையின் ஹிசார் பிரிவு படை டெல்லிக்கு 150 கி.மீ. தொலைவில் நிலை நிறுத்தப்பட்டது ஏன் என்பது கேள்விக்குறியாகியுள்ளது. டேங்குகளை கொண்டு செல்லும் 48 வாகனங்கள், ரஷ்ய தயாரிப்பான கவச வாகனங்கள் ஆகியவையும் டெல்லிக்கு அருகே நிலை நிறுத்தப்பட்டன.

அதே போல ஆக்ராவை தலைமையிடமாகக் கொண்ட 50 Para Brigade என்ற பாராடுசூட் படைப் பிரிவும் பல்வேறு ராணுவ விமானங்களில் டெல்லியில் வந்திறங்கியது.

இந்தப் படைகளை டெல்லிக்குக் கொண்டு வருவது குறித்து மத்திய அரசிடமோ, பாதுகாப்பு அமைச்சகத்திடமோ ராணுவம் தெரிவிக்கவில்லை. இந்தத் தகவல்களை மத்திய உளவுப் பிரிவான ஐபி தான் இரவோடு இரவாக மத்திய அரசின் பார்வைக்குக் கொண்டு சென்றுள்ளது.

மெக்கனைஸ்டு படைப் பிரிவு மேற்கு டெல்லியின் நஜாப்கர்க் அருகே பகதூர்கர்கில் உள்ள ஒரு தொழிற் பூங்காவை நெருங்கியிருந்தது.

டெல்லி அருகே முக்கிய படைப் பிரிவும், பாராசூட் படைப் பிரிவும் நிலை கொண்டுள்ளது குறித்து பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனிக்கும் பிரதமருக்கும் தகவல் தெரிவிக்கப்பட உடனடியாக டெல்லிக்கு வரும் வாகனங்களை தாமதப்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியது.

தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ஒரு தகவலைப் பரப்பிவிட்டு, நெடுஞ்சாலைகள் மூலம் டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் சோதனையிடுமாறு டெல்லி போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து டெல்லி போலீசார் பாதுகாப்பு சோதனைகளில் இறங்கி வாகனங்களை சோதனியிட ஆரம்பிக்கவே, டெல்லிக்கு வரும் முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து தாமதமானது. இதன் மூலம் ராணுவ வாகனங்களின் அணிவகுப்பையும் தாமதப்படுத்துவதே மத்திய அரசின் திட்டம்.

அதே நேரத்தில் மலேசியாவில் இருந்த பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசி காந்த் ஷர்மாவும் உடனடியாக டெல்லிக்கு திருப்பி அழைக்கப்பட்டார். அவர் டெல்லி திரும்பியவுடன் ராணுவ செயல்பாடுகளுக்கான டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.செளத்ரியின் அலுவலகத்துக்கு வந்தார்.

அங்கு அவரிடம் இந்தப் படைகள் டெல்லி நோக்கி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, பாராசூட் படையினர் டெல்லிக்கு வருவது எனக்குத் தெரியும். இது வழக்கமான பயிற்சி தான் என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் கவச வாகனப் படை ஏன் வந்தது என்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட, அவர் ராணுவத் தளபதியுடன் ஆலோசனை நடத்திவிட்டு அளித்த பதிலில், பனி நிறைந்த நாட்களில் படைகளை வேகமாக இடம் நகர்த்துவதற்கான பயிற்சிக்காகவே அவை டெல்லிக்கு கொண்டு வரப்பட்டன என்று பதில் தந்துள்ளார்.

இதற்கிடையே பிரதமர் மன்மோகன் சிங்குடன் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து இரு படைப் பிரிவுகளையும் உடனடியாக அவை கிளம்பிய இடத்துக்கே திரும்பிச் செல்ல பாதுகாப்புத்துறைச் செயலாளர் உத்தரவிட, டெல்லியை நெருங்கிக் கொண்டிருந்த படைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மறுக்கும் மத்திய அரசு:

ஆனால், இந்தச் செய்திகளில் கொஞ்சமும் உண்மையில்லை என பாதுகாப்புத்துறைச் செயலாளர் சசிகாந்த் ஷர்மா கூறியுள்ளார்.

நடந்தது வழக்கமான ராணுவ பயிற்சி தான் என்றும், இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரசில் வந்துள்ள தகவல் தவறானது, திரிக்கப்பட்டது என்று கூறியுள்ளார்.

தளபதியின் கடிதம் 'லீக்'-அரசு நடவடிக்கை எடுக்கும்-ப.சிதம்பரம்:

இந் நிலையில் இந்திய ராணுவத்தின் நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராணுவத் தளபதி வி.கே. சிங் எழுதிய ரகசியக் கடிதத்தை கசிய விட்டவர்கள் மீது ஐ.பியின் அறிக்கை கிடைத்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நிருபர்களிடம் பேசிய அவர், கடிதம் கசிந்த விவகாரம் குறித்து புலனாய்வு நடந்து வருகிறது. இது குறித்து பாதுகாப்புத் துறை அறிக்கை கேட்டிருக்கிறது. உளவுப் பிரிவான ஐ.பி இதை விசாரித்து பாதுகாப்புத் துறைக்கு அறிக்கை அளிக்கும். அறிக்கை கிடைத்ததும் பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுக்கும்.

கடிதம் வெளியானதை செய்தித்தாளைப் படித்துதான் தெரிந்து கொண்டேன். ஐ.பி.யின் அறிக்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் அளிக்கப்படாதவரை அதுபற்றி நான் என்ன கூற முடியும்? அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பிறகுதான் கடிதம் எப்படி வெளியானது என்பது தெரியவரும் என்றார்.

ஐ.பி. அமைப்பே உள்துறை அமைச்சகத்தின் கீழ்தானே வருகிறது, அதனால் அதன் அறிக்கை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறதே என்று நிருபர்கள் கேட்டதற்கு, உள்துறை அமைச்சகத்தின் வழியே அந்த அறிக்கை செல்லக்கூடும். ஆனால் அரசின் பிற அமைப்புகளுக்கும் அது போய்வர வேண்டியிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக