புதன், 4 ஏப்ரல், 2012

வழக்கு: இழுத்தடிக்க "போராடும்" சசிகலா ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கூடுதல் ஆவணங்களைக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழக முதல்வராக 1991-1996-ம் ஆண்டு பொறுப்பு வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச்நீதிமன்றத்தின் அதிரடிக்குப் பிறகு சற்று விறுவிறுவென நடந்த இந்த வழக்கில் சசிகலா தரப்பு மீண்டும் முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது.

புது காரணங்கள்
இந்த வழக்கு நேற்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கில் சசிகலாவும் இளவரசியும் ஆஜராகவில்லை. சசிகலாவுக்கு கண்ணில் பிரச்சனை, இளவரசிக்கு நீரிழிவு நோய் என்பதால் இருவரும் ஆஜராகவில்லை என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

கூடுதல் ஆவணங்கள்

மேலும் பல்வேறு சட்டப் பிரிவுகளைச் சுட்டிக்காட்டி சசிகலா "விளக்கமாகப்" பதிலளிக்க கூடுதல் ஆவணங்களைத் தரக் கோரி ஏற்கெனவே சசிகலா வழக்கறிஞர் மணிசங்கர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்றைய விசாரணையின் போது நீதிபதி மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கால அவகாசம்

ஆனாலும் விடாத வழக்கறிஞர் மணிசங்கர், கூடுதல் ஆவணங்களைத் தரக்கோரும் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும் அதற்காக கால அவகாசம் வேண்டும் என்று மறுபடியும் ஒரு அஸ்திரத்தை வீசினார். இதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ் செளடா கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சசிகலாவிடம் வாக்குமூலங்களை தொடர்ந்து பெறுவதற்காக வழக்கின் விசாரணையை வரும் 12- ந்தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக