புதன், 4 ஏப்ரல், 2012

சந்தேகம்? அ.தி.முக.வுக்கு திருச்சியில் பெரும்சவாலாக இருந்தவர் ராமஜெயம்

பொதுத்தேர்தலின்போது அ.தி.முக.வுக்கு திருச்சியில் பெரும்சவாலாக இருந்தவர் ராமஜெயம் என்பதால், ஆளுந்தரப்பினர் காவல்துறை மூலம் இப்படி ஒரு புதுவித என்கவுன்டரை நடத்திவிட்டார்களோ என்ற சந்தேகம் திருச்சி மக்களிடம் இருக்கிறது.
திகிலிலிருந்து இன்னும் விடுபடவில்லை திருச்சியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும். அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் செல்வாக்குப் பெற் றிருந்த ராமஜெயத்தின் கொடூரக் கொலையால் யாருக்கு வேண்டு மானாலும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தை பொதுமக்களிடம் உண் டாக்கியுள்ளது. திருச்சி மட்டு மின்றி, தமிழகத்தின் பல பகுதி களிலும் உள்ள தி.மு.க. வி.ஐ.பி.க்கள் இந்தக் கொலையால் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகியிருக்கிறார் கள். கொடூரம் நடந்து 5 நாட் களுக்கு மேலாகியும் திங்கள் இரவுவரை போலீசாரால் கொலை யாளிகளில் யாரையும் அடை யாளம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

ராமஜெயத்துடன் வழக்கமாக வாக்கிங் செல்பவர்களோ, "15 நாட்களுக்கு மேலே அவர் ஊரில் இல்லைங்க. திரும்ப வந்து வாக்கிங் ஆரம்பிச்சி இரண்டாவது நாளே இப்படி ஆயிடிச்சே' என்று கண்ணீரை அடக்க முடியாமல் சொல்கிறார்கள். ""திருச்சியிலிருந்து கர்நாடகாவுக்கு இரவு நேர எக்ஸ்பிரசில் பயணம் செய்த ராமஜெயம் அங்கே 13 நாட்கள் தங்கியிருந்து உடுப்பி கிருஷ்ணர் கோயில், கொல்லூர் மூகாம்பிகை கோயில், மைசூர் சாமுண் டீஸ்வரி கோயில் என பல கோயில்களுக்கும் சென்று விட்டு, மார்ச் 26-ந் தேதி காலை 10 மணிக்குத்தான் மங்களூர் எக்ஸ்பிரசில் திருச்சி திரும்பினார்.

அன்றிரவே, ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரசில் சென்னைப் பயணம். ஏப்ரல் 5-ந் தேதி வெளிநாடு செல்வதால் அதுதொடர்பான பாஸ்போர்ட் க்ளியரன்ஸை முடித்துக்கொண்டு, மார்ச் 27-ந் தேதி செவ்வாய் இரவு ராக்ஃபோர்ட் எக்ஸ்பிரசில் புறப்பட்டு, மறுநாள் காலை 5.10-க்கு திருச்சி வந்தார். வீட்டுக்குத் திரும்பிய 10-வது நிமிடத்தில் வாக்கிங் புறப்பட்டுவிட்டார். இதுதான் அவருடைய பழக்கம்'' என்கிற நண்பர்கள், ""பொழுது விடிவதற்கு சற்று முன்பாக அதிகாலையில் வாக்கிங் செல்வது அவருக்கு ரொம்பப் பிடிக்கும். சென்னைக்கு செல்லும் போதெல்லாம், அதிகாலை நேரத்தில் எக்மோரில் காத்திருக்கும் டிரைவரிடம் சூட்கேஸைக் கொடுத்து, காரில் எடுத்துவரச்சொல்லிவிட்டு, அவர் நடந்தே சென்னை வீட்டுக்கு வந்து விடுவார் என்கிறார்கள். காலில் எலும்புமுறிவு ஏற்பட்டிருந்ததால், கடந்த இரண்டு மாதமாக வாக்கிங் போகாமல் ஒரு வைத்தியரிடம் ஆயில் போட்டுக் கொண்டு காரில் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் ராமஜெயம்.

புதன்கிழமை இரவு 11 மணிக்கு பக்கத்து வீட்டுக் காரரான அஜந்தா கண்ணன் என்பவர்தான் ராமஜெயத்தை அவரது 9ஏ தில்லைநகர் வீட்டில் இறக்கிவிட்டிருக் கிறார். மறுநாள், (மார்ச் 29) காலை 5.25 மணிக்கு அவர் வாக்கிங் கிளம்பியதை மனைவி லதாவும் வீட்டு வேலையாளும் பார்த்திருக்கிறார்கள். வாட்ச் மேன் நாகராஜ் வணக்கம் வைத்திருக்கிறார். ராமஜெயம் வெளியே வந்ததும், பூந்தமல்லி கோர்ட்டிலிருந்து ஓய்வு பெற்ற நீதிபதி அந்த நேரத்தில் வணக் கம் தெரிவிக்க, நலம் விசா ரித்திருக்கிறார் ராமஜெயம். ஒரு வக்கீல் நண்பரைப் பார்க்க வந்ததாகச் சொல்லிவிட்டு நீதிபதி செல்ல, ராமஜெயத்தின் நடைப்பயிற்சி தொடர்ந்தது.


5.35 மணிக்கு சாஸ்திரி ரோட்டில் உள்ள அடையார் ஆனந்தபவன் அருகே இடதுபுறமாகத் திரும்பி, இருட்டாக காணப்படும் அந்தத் தெருவில் நடந்து கொண்டிருந்தார். அந்த வழியாகத்தான் தன்னுடைய டென்னிஸ் கோர்ட்டைக் கடந்து கோட்டை ஸ்டேஷன் மைதானத்தில் தன் நண்பர்களோடு ரவுண் டடிப்பது ராமஜெயத்தின் வழக்கம்.

5.45 மணிக்கு வெள்ளை நிறத்தில் க்ரே கலர் கலந்த மாருதி வெர்ஸா வண்டி ஒன்று அடையார் ஆனந்தபவன் வழியே சென்றதையும், சிறிது நேரத்தில் ரிவர்ஸ் எடுத்துத் திரும்பியதையும், கோட்டை ஸ்டேஷன் ப்ளாட்பாரத்தில் நின்றிருந்த ராமஜெயத்தின் நண்பர்கள் அமீன்பாய், வாசுதேவன் இருவரும் பார்த்திருக்கிறார்கள். தண்டவாளத்தில் ஒரு கூட்ஸ் வண்டி நின்றிருந்ததால், அந்த மாருதி வெர்ஸா எந்தப் பக்கம் போனது என்பதை அவர்கள் அறிய வில்லை. அதில்தான் ராமஜெயம் கடத்தப்பட்டி ருக்கிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.

5.55 மணிக்கு கோகினூர் தியேட்டர் சிக்னலில் மாருதி வெர்ஸா இரண்டு முறை ரவுண்டடித்துச் சென்றது சிக்னல் கேமராவில் பதிவாகியுள்ளது. ஆனால், வண்டி நம்பர் சரியாகப் பதிவாகவில்லை. காலை 6.30 மணிக்கு ராமஜெயம் வீட்டுக்கு வந்த லாண்டரிக்காரரிடம், எந்தெந்த டிரஸ்களைப் போடுவது என்று கேட்பதற்காக ராமஜெயத்தின் மனைவி போன் செய்தபோது, ரிங் போனதே தவிர, அட்டண்ட் பண்ணவில்லை. 8.35 மணிக்கு ராமஜெயம் போனிலிருந்து லதாவுக்கு கால் வந்துள்ளது. ஆனால், எதிர்முனையில் "யார் நீங்க' என்று கேட்டு கட்டாக, மறுபடி லதாவே ட்ரை பண்ணியிருக்கிறார். எதிர் முனையில் தண்ணீர் கொட்டும் சத்தம்போல் கேட்டுள்ளது. பதட்டத்துடன் மகன் வினீத்திற்குத் தகவல் கொடுத்துவிட்டு, உறவினரும் ராமஜெயத்தின் உதவியாளருமான வினோத்துக்கும் தகவல் சொல்லி யிருக்கிறார் லதா. வினோத் தொடர்புகொண்ட போதும் சரியான ரெஸ்பான்ஸ் இல்லை.

காலை 8.38 மணிக்கு ராமஜெயத்தின் நம்பரிலிருந்து கேர் கல்லூரி கேண்டீன் கோபாலகிருஷ்ண னுக்கு போன் செய்து ராமஜெயத்தின் அண்ணனான முன்னாள் அமைச்சர் நேருவின் நம்பர் கேட்டிருக்கிறார்கள். 8.40க்கு கே.வி.கே. பண்ணைவீட்டில் உள்ள அனுராதாவுக்குப் போன் செய்து நேருவின் நம்பர் கேட்டிருக்கிறார்கள். இந்த விவரங்களும் ராமஜெயம் குடும்பத்தாருக்குத் தெரியவர, சென்னையிலிருந்த நேருவின் மகன் அருணுக்குத் தகவல் சொல்லப்படுகிறது. அவர்தான் தன் அப்பாவிடம் பேசுகிறார். இதன்பின், நேரு சென்னை மற்றும் திருச்சி சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் பேசியதையும், தில்லைநகர் ஸ்டேஷனில் ராமஜெயம் மனைவி புகார் கொடுத்ததையும், திருச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததையும் கடந்த இதழில் எழுதியிருந்தோம். ராமஜெயம் பற்றிய விவரம் எதுவும் தெரியாதநிலையில், நேருவின் செல்போன்கால்களை அட்டண்ட் செய் வதற்கே போலீஸ் அதிகாரிகள் பலரும் தயங்கியுள்ளனர்.

இதனிடையே, திருச்சியிலிருந்து கல்லணை செல்லும் வழியில் உள்ள திருவளர்ச்சோலையில் பொன்னிடெல்டா என்கிற அபார்ட்மெண்ட் கட்டும் வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தக் கட்டடத் திற்கு எதிரே உள்ள ரோட்டில் காலை 8.30-க்கு மாருதி வெர்ஸா வண்டி வந்து நின் றது, அதிலிருந்து ஒரு பிணத்தை இறக்கி, பள்ளத்தில் எரிக்க முயற்சிப்பதை, கட்டட வேலையில் இருந்தவர்கள் கவனித்திருக் கிறார்கள். வாட்ச்மேனும் மற்றவர்களும் தங்களைக் கவனிப்பதைப் பார்த்ததும், பாடியை எரிக்காமல் அதன்மீது ஒரு போர்வையைப் போட்டுவிட்டு அந்தக் கும்பல் வண்டியை எடுக்கிறது. 8.55-க்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு, திருவளர்ச்சோலையில் ஒரு பெண்பிணம் போர்வை யால் மூடப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது.

போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கிடைத்து, சம்பந்தப்பட்ட ஏரியா போலீசார் பத்து மணிக்கு மேலே அங்கு சென்று பாடியை பார்த்த போதும் அவர்களுக்கு யார் என்று தெரியவில்லை. கமிஷனர் சைலேஷ்யாதவ் உத்தரவுக்குப்பிறகு போலீஸ் டீம் களமிறங்கி, ராமஜெயத்தின் மகன் வினீத்தும் முன்னாள் ஜி.பி. பாஸ்கரனும் அடை யாளம் காட்டியபிறகுதான் ராமஜெயத்தின் உடல் அடையாளம் காணப்பட்டது. அப்போது, விழுப்புரம் அருகே காரில் வந்துகொண்டிருந்தார் அவரது அண்ணன் கே.என்.நேரு. வீலில் ஏதோ கடமுடா என சத்தம் கேட்க, வண்டியை டிரைவர் அவசரமாக நிறுத்த, அப்போது வந்த போன்கால்தான் அவரது தம்பி கொலை செய்யப்பட்டதை உறுதி செய்கிறது. கதறித்துடித்த நேரு, உடனடியாக வேறு காரில் திருச்சி வந்து சேர்ந்தார்.


காலை 5.45-க்கு கடத்தப்பட்ட ராமஜெயம், 8.30 மணிக்கு திருவளர்ச்சோலையில் பிணமாகக் கொண்டு வந்து போடப்பட்டிருக்கிறார். இடைப்பட்ட 3 மணிநேரத்தில், அரை மணிநேரம் டிராவலிங் நேரம் என்றாலும் மிச்ச நேரம் அவர் எங்கே கொண்டு போகப்பட்டார்? அவரைக் கொலை செய்தவர்களின் நோக்கம் என்ன? கொலை செய்யச் சொன்னவரின் முன்பாக கூலிப்படையினர், ராமஜெயத்தைக் கொண்டு போய் நிறுத்தி, கை-கால்களை டேப் மற்றும் கம்பியால் கட்டி சித்ரவதை செய்து, கொன்றுவிட்டு அதன்பின் திருவளர்ச்சோலையில் கொண்டு வந்து போட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை தொடர்ந்துகொண்டிருக்கிறது.

ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கும் முறை முற்றிலும் புதிதாக உள்ளது. கொலைக்கும்பலைச் சேர்ந்த ஒருவரை யாவது காவல்துறை கைதுசெய்து விசாரித்தால்தான் உண்மை வெளிவரும். அதுவரை பேசுவதற்கும் எழுதுவதற்கும் த்ரில்லிங்காக இருக்கக்கூடிய வதந்திகளும் கற்பனைகளும் மட்டுமே காற்றெங்கும் பரவிக்கொண்டிருக்கும்.

-ஜெ.டி.ஆர்.

மரங்களின் மீது பாசம்!

திண்டுக்கல்-திருச்சி நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணிக்காக பெரிய பெரிய மரங்களை வெட்டவேண்டியிருந்தது. அப்போது ராமஜெயம், "அதை வெட்டவேண்டாம். அப்படியே வேரோடு எடுத்துக்கொண்டு போய் எனக்கு சொந்தமான இடத்தில் நட்டுக்கொள்கிறேன்' என்று சொல்லி, சுமார் 60 மரங்களை பத்திரமாக எடுத்துச்சென்று, தன் இடத்தில் நட்டு, அதிக செலவில் பராமரித்து வளர்த்ததை இப்போது நினைவுகூர்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். பறவைகள் மீதும் அவருக்கு அக்கறை அதிகம் என்கிறார்கள்.


தன்னால் முடிந்தவரை உதவி செய்வதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஸ்கூல் அட்மிஷன் நேரத்தில் 200 பிள்ளைகளுக்காவது லிஸ்ட் போட்டு, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே நேரில் சென்று பேசி, சீட் கொடுக்கும்படி தயவு பண்ணுமாறு கேட்டுக்கொள்வார். பெரும்பாலும் சீட் கிடைத்துவிடும் என்கிறார்கள் திருச்சிவாசிகள்.


ஆசிய பேஸ்கட்பால் டோர்னமென்ட்டை சென்னை நேரு ஸ்டேடியத்தில் வெற்றிகரமாக நடத்திக்காட்டியவர் ராமஜெயம். பலநாட்டிலிருந்து வந்த விளையாட்டுவீரர்களும் "இதுபோன்ற சர்வதேசத்தரமான வசதிகளை இந்தியாவில் நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்று சொல்லக் கூடிய அளவுக்கு அவருடைய செயல் பாடுகள் இருந்தன. கட்சி வி.ஐ.பிக்கள் யார் திருச்சி வந்தாலும், ராமஜெயம்தான் சாப்பாட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். மாநாடு, பொதுக்கூட்டம், தேர்தல் என எந்த வேலையாக இருந்தாலும் திருச்சியில் களைகட்டும். காரணம், ராமஜெயத்தின் ஃபீல்டு ஒர்க்.


ராமஜெயம் உடலைக் காண வந்த சாதாரண கூலித் தொழிலாளி முதல் பெரும் பணக்காரர்கள் வரை கண்ணீரோடு கதறியதைப் பார்க்க முடிந்தது. எல்லோருக்கும் பிரதிபலன் பாராமல் உதவி செய்தார் என்பதை அவர்கள் கண்ணீரோடு சொல்லிக்கொண்டிருந்தனர். இறுதி ஊர்வலத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிவப்பான அவரது முகம் கருப்பாக மாறியிருந்ததைக் கண்டு கலங்கினர்.


அரசியலுக்கு வரவேண்டும் என்ற ஆர்வமும் எம்.பியாகவேண்டும் என்ற ஆசையும் ராமஜெயத்திற்கு உண்டு. அவருடைய அண்ணன் நேருதான், "ஏன் ரிஸ்க் எடுக்கிறே.. ஊர் நிலவரம் சரியில்லை..' என்று அவரது ஆசைக்கு அணை போட்டிருந்தார். ஆனாலும், நேருவின் கோபத்திற்கு ஆளாகும் கட்சிக்காரர்கள் ராமஜெயத்திடம் வந்து காரியம் சாதித்துக்கொள்வது வழக்கம். அண்ணனுக்கு அரசியல் எதிரிகள் யாரும் இருக்கக்கூடாது என்பதில் ராமஜெயத்திற்கு அத்தனை அக்கறை என்கிறார்கள் திருச்சி தி.மு.கவினர்.


பொதுத்தேர்தலின்போது அ.தி.முக.வுக்கு திருச்சியில் பெரும்சவாலாக இருந்தவர் ராமஜெயம் என்பதால், ஆளுந்தரப்பினர் காவல்துறை மூலம் இப்படி ஒரு புதுவித என்கவுன்டரை நடத்திவிட்டார்களோ என்ற சந்தேகம் திருச்சி மக்களிடம் இருக்கிறது. ஆனால், இந்தக் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை உடனடியாகப் பிடிக்கவேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கிறார் ஜெ. இது சட்டம்- ஒழுங்கிற்கு சவால் விடும் கொலை என்பதால் ஜெ. தீவிரம் காட்டுகிறார் என்கிற போலீஸ் அதிகாரிகள், முதலில் 3 டீம் அமைக்கப்பட்டது. இப்போது 7 டீம் களமிறங்கியுள்ளது என்கிறார்கள்.


ராமஜெயத்தின் இறுதிக் காரியங்களை முடித்துவிட்டு தில்லை நகர் ஐந்தாவது கிராஸ் ரோட்டில் உள்ள தனது அலுவலகத்தில் உள்ள ஓய்வறையில் நேரு படுத்திருந்தபோது, அதிகாலை 5.20 மணிக்கு அவருடைய அலுவலக தொலைபேசி தொடர்ந்து ரிங்கானது. உதவியாளர் ஒருவர் எடுத்துப் பேச, "நேருவையும் நாங்க விடமாட்டோம். போலீஸ் பாதுகாப்பு இருந்தாலும் விடமாட்டோம்' எனக் கொலை மிரட்டல்விட, இதையடுத்து, போலீசின் கண்காணிப்பு தீவிரமானது. போனில் பேசியவர்களுக்கும் கொலைக்கும் தொடர்பில்லை என்கிறது போலீஸ்.


போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்!
கொலைகாரர்கள், ராமஜெயத்தின் வாயில் காட்டன் துணியைத் திணித்து, தொண்டைக்குழி வரை இறக்கியதால், அவருக்கு கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அத்துடன், காட்டன் துணியால் அவருடைய கழுத்தையும் இறுக்கியிருக்கிறார்கள். பின்மண்டையில் லேசான அடி விழுந்திருக்கிறது. கத்தி போன்ற ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. அவர் உயிர் தப்பிவிடக்கூடாது என்பதற்காக வாயையும் மூக்கையும் துணியால் பொத்தியதால், மூச்சுத்திணறி இறந்திருக்கிறார் ராமஜெயம். இறந்தபோது ராமஜெயத்தின் வயிற்றில் 40 மில்லி தண்ணீர் மட்டும் இருந்துள்ளது என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கூறுகிறது. இந்த ரிப்போர்ட்டை, திருச்சி போலீஸ் கமிஷனர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உள்ள தனது டாக்டர் நண்பருக்கு அனுப்பியிருக்கிறார். எய்ம்ஸ் டாக்டரின் ஆய்வில், ராமஜெயத்தின் உடலின் உள்ளே 5 இடங்கள் கண்ணிப்போயிருப்பதும், விரைவாக அவர் உயிர்போகவேண்டும் என்பதால் கழுத்தை நெரித்து மூச்சுத்திணறச் செய்தபோது, ராமஜெயத்தின் உடம்பில் 5 இடங்களில் சரமாரியாக குத்துவிட்டிருக்கிறார்கள் என்பதைத் தெரிவித் திருக்கிறார். மற்றபடி வரும் தகவல்கள் உண்மையில்லை என்கின்றார்கள் போஸ்ட்மார்ட்டம் செய்தவர்கள்.
thanks nakkeeran+ balasubramaniayan iyer patna

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக