ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

ஜெயலலிதா பற்றி கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்!

புதுக்கோட்டையை சுலபமாக தாரைவார்த்துக் கொடுக்க செந்தோழர்கள் தயாராக இல்லை என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரங்களில். கடந்த சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போது, அந்த தொகுதி அ.தி.மு.க. தலைமையால் தமக்கு ஒதுக்கப்பட்டது என்பதை அவர்கள் பிரஸ் பண்ணுகிறார்களாம்.
தமது உறுப்பினர் முத்துக்குமாரன் இறந்ததால் வரவுள்ள இடைத் தேர்தலிலும், தொகுதியை தமக்கே விட்டுத்தர வேண்டும் என்ற கோரிக்கையுடன் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுவர்கள் அ.தி.மு.க.-வின் கதவுகளை தட்டத் துவங்கி விட்டார்கள் என்கிறார்கள்.

முதல் கட்டமாக கம்யூனிஸ் கட்சியின் மாநிலக் குழு ஒன்று செங்கோட்டையனைச் சந்தி்த்து தொகுதியை தமக்கே விட்டுத் தருமாறு கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
செங்கோட்டையன் கழுவின நீரில் நழுவின மீனாக பதில் சொல்லி அனுப்பினார் என்கிறார்கள் அ.தி.மு.க. வட்டாரத்தில்! “செங்கோட்டையனிடம் கேட்டால் தொகுதியை விட்டுத் தருவார்கள்” என்று யார் இவர்களுக்கு சொன்னார்களோ தெரியவில்லை.
இதற்கு அடுத்த கட்டமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஆகிய இருவர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து தமது கோரிக்கையை முன்வைக்க திட்டமிட்டுள்ளனராம். இவர்கள் தரப்பில் முதல்வரைச் சந்திக்க அப்பாயின்ட்மென்ட் கேட்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்தபின் உள்ளாட்சித் தேர்தல் வந்தபோது, இந்த தோழர்கள் போயஸ் கார்டன் கேட்டுக்கு வெளியே கால்கடுக்க நின்ற அனுபவம் உடையவர்கள். “போயிட்டு அப்புறமா வாய்யா” என்று பச்சையாக சொல்லி இவர்களை வெளியே அனுப்பியிருக்க மாட்டார்கள் என்று நம்புவோம்.
இதில் கம்யூனிஸ்டுகளையும் குற்றம் சொல்ல முடியாது. ஔவையார் ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக இல்லாத காரணத்தால், இவர்கள் படித்த நூல்களில் அவர் எழுதிய (மதியாதார் தலைவாசல்..) ‘சித்தாந்தங்கள்’ ஏதும் இருக்க சான்ஸ் இல்லை.
அ.தி.மு.க. அமைச்சர்கள், “புதுக்கோட்டையிலும் நாமே வெற்றி பெறுவோம்” என்று மேடைகளில் முழங்கத் துவங்கியுள்ள நிலையில், கம்யூனிஸ்டுகளின் ‘தொகுதி கேட்கும்’ முயற்சியைப் பார்த்தால், சிரிப்பதா, அழுவதா, பரிதாபப்படுவதா என்று தெரியவில்லை.
ஆனால், ஜெயலலிதா நிச்சயம் இவர்களது முயற்சியைப் பார்த்து ஆனந்தப்படுவார்.
எப்படியென்றால், தார்மீக அடிப்படையில் இந்த தொகுதியை கம்யூனிஸ்டுகளுக்கு விட்டுக் கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதா ஒரு True Class Politician என்று நினைக்கிறார்களே.. அதற்காகவே ஜெயலலிதா, இவர்களை கார்டனுக்கு அழைத்து, மரியாதை செய்து விருந்து கொடுக்க வேண்டும். ஏனென்றால், யாருக்கும் தெரியாத ரகசியம் அது!
ஜெயலலிதாவின் சொந்த அமைச்சர்களுக்கேகூட தார்மீக அடிப்படையில் இந்த தொகுதியை கம்யூனிஸ்டுகளுக்கு விட்டுக் கொடுக்கும் அளவுக்கு ஜெயலலிதா ஒரு True Class Politician என்பதில் நம்பிக்கை கிடையாது!
இருந்திருந்தால், புதுக்கோட்டையில் நாம் வெற்றி பெறுவோம் என்று தலைவி அறிவிக்கும் முன்னரே முழங்கியிருப்பார்களா?
எப்படியோ, கம்யூனிஸ்டுகள் அந்த Class நம்பிக்கையில், அம்மாவின் அப்பாயின்ட்மென்ட் கேட்டிருக்கிறார்களே, அவர்களின் இந்த அப்பாவித் தனத்துக்காகவே அவர்களுக்கு ஓட்டுப் போடுங்கள். நீங்கள் அந்தத் தொகுதி வாக்காளராக இல்லாவிட்டால் “ஓ” போடுங்கள்.
கார்டனில் இருந்து பதில் கிடைத்து அவர்கள் ‘ஓ’ என்று அழுவதற்குமுன், “ஓ” போட்டுவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக