சனி, 7 ஏப்ரல், 2012

மாணவனின் விலா எலும்பை உடைத்த ஆசிரியர் வீட்டு பாடம் செய்யாமல் வந்த

வீட்டு பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த ஆறாம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததில் மாணவனின் விலா எலும்பு உடைந்தது. இதைப்பற்றி கேட்கப்போன தாயையும், ஆசிரியர் எட்டி உதைத்தார்.
ஆந்திரா சித்தூர் மாவட்டம் சாடம் என்ற ஊரைச் சேர்ந்த மாணவன் உதய்குமார், 11. இவன் அதே ஊரில் உள்ள குருகுல பள்ளியில், விடுதியில் தங்கி, ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டுபாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றான். அவன் வீட்டுப் பாடம் செய்யாததை அறிந்த ஆசிரியர், அவனை அடித்து வெளியே அனுப்பியுள்ளார். இதில், அவனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்த கிராமத்தினர் சிலர், ஆசிரியரை கண்டித்தனர். கிராமத்தினர் அங்கிருந்து சென்றதும், மீண்டும் அந்த மாணவனை அழைத்த ஆசிரியர், "நீ ஏன் கிராமத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்னாய்' எனக்கேட்டு, மாணவனின் நெஞ்சில் உதைத்துள்ளார்.
அன்றைய தினம் வலியுடனேயே இருந்த மாணவன், மறுநாள் தன் வீட்டுக்குச் சென்று நடந்ததை பெற்றோரிடம் தெரிவித்தான். அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று டாக்டர்களிடம் பரிசோதித்தனர். மேலும், எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது, மாணவனின் விலா எலும்பு உடைந்திருப்பது தெரிந்தது. ஆத்திரமடைந்த மாணவனின் தாய், பள்ளிக்கு சென்று இது குறித்து ஆசிரியரிடம் கேட்டார். அதில், மேலும் ஆத்திரமடைந்த ஆசிரியர் அந்த பெண் ணையும் எட்டி உதைத்து விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிடப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மாணவனின் விலா எலும்பை உடைத்த ஆசிரியர், ஒப்பந்த அடிப்படையில், அந்தப் பள்ளியில் பணியாற்றி வந்தார் எனக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக