ஞாயிறு, 11 மார்ச், 2012

NGOக்கள் அதிக நிதியை நிறுவன செலவுகளுக்காகவே செலவிட்டுள்ளன


World Vision
டெல்லி: வருடா வருடம் இந்தியாவில் உள்ள என்ஜிஓக்கள் எனப்படும் தொண்டு நிறுவனங்களுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து ரூ. 10,000 கோடி அளவுக்கு நிதியுதவி வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத் தகவல் தெரிவிக்கிறது.
கடந்த 2009-10ம் ஆண்டு இந்திய தொண்டு நிறுவனங்கள் பெற்ற வெளிநாட்டு நிதியுதவியை மேற்கோள் காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 22,000 தொண்டு நிறுவனங்கள் இந்த வெளிநாட்டு உதவியைப் பெற்றுள்ளன. இதில் தமிழகத்தைச் சேர்ந்தவை 3218 ஆகும் என்று அத்தகவல் தெரிவிக்கிறது.
தமிழக நிறுவனங்கள் மட்டும் கடந்த 2009-10ல் ரூ. 1663.31 கோடி நிதியைப் பெற்றுள்ளன. இந்த நிதி பெரும்பாலும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது.தற்போது கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதியை தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்தியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து 12 தொண்டு நிறுவனங்களை மத்திய அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டு வந்துள்ளது. இவற்றின் நிதிப் பரிமாற்றம், செலவு உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆய்வு நடந்து வருகிறது. இதில் நான்கு நிறுவனங்கள் மீது ஏற்கனவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள தொண்டு நிறுவனங்கள்தான் அதிக அளவிலான நிதியைப் பெற்றுள்ளன. அதாவது ரூ. 1815.91 கோடியைப் பெற்றுள்ளன. அடுத்த இடம் தமிழகத்திற்கு. ஆந்திராவில் உள்ள நிறுவனங்கள் ரூ. 1324.87 கோடி நிதியைப் பெற்றுள்ளன.
இந்தியாவிலேயே அதிக அளவிலான நிதியைப் பெற்ற மாவட்டம் சென்னைதான். இந்த மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 871.60 கோடி அந்நிய நிதி வந்துள்ளது. அடுத்த இடம் பெங்களூருக்கு. அந்த மாவட்டம் ரூ. 702.43 கோடி நிதியைப் பெற்றுள்ளது. மும்பை 606.63 கோடியைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு அதிக நிதியை அளிக்கும் நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த வேர்ல்ட் விஷன் இந்தியா நிறுவனம்தான் கடந்த 2009-10ல் அதிக அளவிலான நிதியை வாங்கியுள்ளது. அதாவது ரூ. 208.94 கோடி நிதியை அது வாங்கியுள்ளது.
தாங்கள் பெற்ற நிதியில் பெரும்பாலானவற்றை, அதாவது ரூ. 1482.58 கோடியை நிறுவன செலவுகளுக்காகவே பெரும்பாலான நிறுவனங்கள் செலவிட்டுள்ளன. ரூ. 944.13 கோடியை ஊரக வளர்ச்சிக்காகவும், சிறார் நலனுக்காக ரூ. 742.42 கோடியையும் அவை செலவிட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக