செவ்வாய், 6 மார்ச், 2012

ஓரினச்சேர்க்கை இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில்


முரண்பாடுகளை ஏற்பதுதான் கலாசாரம். நாகரிகமும்கூட. குடும்ப முறை வளர்ந்த பிறகுதான், முதல் பாலியல் தொழிலாளி உருவாகியிருக்கவேண்டும். அன்றிலிருந்து இன்று வரை பாலியல் தொழிலாளர்கள் கெட்டவர்களாகவே  பார்க்கப்படுகிறார்கள். குடும்ப முறை வளர்ந்த பிறகு, திருநங்கைகள் மனிதர்களாகப் பார்க்கப்படுவதில்லை. இவர்களை அருவருக்கத்தக்க மனிதர்களாக மாற்றிய பெருமை கலாசாரத்தையே சாரும்.
என்னைப் பொறுத்தவரை, ஓரினச்சேர்க்கை என்பது இயற்கைக்கு முரணானதோ, வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியதோ அல்ல. ஒத்த எண்ணம் கொண்ட இரு ஆணோ அல்லது பெண்ணோ தங்களுக்குள் ஏற்பட்ட விருப்ப உணர்வுகளை, சிற்றின்பத்தை மற்றவர்களுக்கு தெரியாத வகையில் அந்தரங்கமாக செய்கிற ஒரு விஷயம். அப்படி இருக்கும்வரையில் இதில் எந்த தவறும் இல்லை. ‘ஈசாவாஸ்யம் இதம் சர்வம்’ என்று உபநிஷதம் சொல்வதன்படி, எல்லாமே  இறைத் தன்மையின் வெளிப்பாடுகதான்!
பலரும் நினைப்பது போல் ஓரினச்சேர்க்கை என்பது வெளிநாட்டு இறக்குமதி அல்ல. நம் புராணங்களில், கோயில் சிற்பங்களில் பார்த்த நிகழ்வுகளை, கேட்டறியாத பல கதைகளை நாம் அறிந்திருந்தால், நம் எண்ணங்களை சற்று பரந்த மனதுடன் வரவேற்றிருப்போம். குறுகிய எண்ணத்தை விட்டொழித்தாலே பல தவறான சிந்தனைப் போக்குகள் நம்மைவிட்டு விலகியோடும்.

ஒரு கணவனும் மனைவியையும் போலவே ஓரினச்சேர்க்கையாளர்கள் தங்கள் உறவைத் தங்களுக்குள் வைத்துக்கொள்ளும் பட்சத்தில் பிரச்னை எதுவுமில்லை. பொதுவிடங்களில் தவறாக நடக்கும்போது, அது கண்டிக்கப்படவேண்டிய தவறாக மாறுகிறது. இது ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவருக்கும் பொருந்தக்கூடிய உண்மை. நாகரிகச் சமூகம் என்று சொல்லிக்கொண்டு, பேருந்துகளில் பெண்களை உரசுபவர்களை உத்தமர்கள் என்றா அழைக்கமுடியும்?
பால்ய விவாகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அந்தக் காலகட்டத்துக்கு உகந்த ஓர் அமைப்பாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில், ஒரு மனிதனின் சராசரி வயது அப்போது 40. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அடிப்படையில் மறுமணம் செய்யவேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்கலாம். மருத்துவ உலகின் பல அறிய சாதனைகள் மனித வாழ்வை சராசரியாக 60-க்கு கொணர்ந்தபோது, ஒரு பெண் காலம் முழுக்க விதவையாக இருக்கலாமா என்ற கேள்வி மறுமணத்தை ஏற்றுக் கொண்டது. நேற்று வரை சரியாக இருந்த ஒரு விஷயம் இன்று தவறாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குற்றவாளிகளாகப் பார்க்காத மனோபாவமும் நிச்சயம் ஒருநாள் வரும்.
ஓரினச்சேர்க்கை தவறு என்று சொல்பவர்கள் முன்வைக்கும் ஒரு வாதம், அது சந்ததி பெருக்கத்துக்கு உதவாது என்பது. சந்ததியைப் பெருக்கும் உறவு முறையே இயற்கையானது என்றும் இவர்கள் வாதிடுகிறார்கள். எனில், பிரம்மச்சாரிகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? குற்றவாளிகளாகவா? ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பது போலவேதான் அவர்களையும் நீங்கள் வெறுக்கிறீர்களா? ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கிறோம். ஒருவேளை அவர்களால் குழந்தை பெற இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களை என்ன செய்யப்போவதாக உத்தேசம்?
ஓரினச்சேர்க்கை இன்று அதிகரித்து வருவதற்கு காரணம் 32  வயது வரை திருமணமாகாமல் இருக்கும் ஒரு நிலை. மேலும், சமூக வாழ்வில் இன்று ஆண்களும் பெண்களும் கல்லூரிகளிலும் விடுதிகளிலும் குழுக்களாக தங்கிப் படிக்கும் சூழலில், தங்களுக்குள் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முனைகிறார்கள். பதின் பருவத்தில் இயல்பாக எழும் காம உணர்ச்சியைத் தடை செய்துவிடமுடியுமா?
உண்மையில், ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு பாதுகாப்பான உறவு குறித்தும் பின் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். அதே போல், அவர்களை வெறுப்பவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
0
லஷ்மணன் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக