புதன், 7 மார்ச், 2012

இளங்கோவன்:ஜெயலலிதா ஹிலாரியுடன் ஒப்பந்தம்; ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பு

ஈரோடு: ""ஹிலாரியுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து, ரஷ்யாவிடம் கமிஷன் எதிர்பார்ப்பதால் தான், கூடங்குளம் அணுமின் நிலையம் விஷயத்தில் முதல்வர் ஜெயலலிதா அமைதி காக்கிறார்,'' என, இளங்கோவன் பேசினார்.
கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில், ஈரோடு, சம்பத் நகரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் பேசியதாவது:மின்வெட்டு என்பது, 1967க்கு பின்தான் நடக்கிறது. ஊரெல்லாம் குடும்பம் வைத்திருப்பவருக்கு ஆட்சியைக் கொடுத்தோம். அப்போது, இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மின்தடை ஏற்பட்டது. குடும்பமே இல்லாதவருக்கு ஆதரவளித்தோம். எட்டு மணி நேரம், 10 மணி நேரம் மின்தடையாகிவிட்டது. அவர்களுக்கும், இவர்களுக்கும் மாறி மாறி ஜால்ரா தட்டியதால் தான் நமக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. நமக்கு, அவர்கள் ஜால்ரா தட்டும் காலம் விரைவில் ஏற்படும்.சென்னையில் போயஸ் கார்டன் தவிர மற்ற இடங்களிலெல்லாம் மின்தடை ஏற்படுகிறது. படிக்கவே மின்சாரமில்லை; தேர்வு எழுத எதற்கு ஜெனரேட்டர்? மிக்ஸியும், கிரைண்டரும் கொடுத்து என்ன பயன்?

ஈரோட்டில் மட்டும், 18 ஆயிரம் தொழில் நிறுவனங்கள், இரண்டு லட்சம் தொழிலாளர்கள் மின்தடையால் பாதித்துள்ளனர். அவர்களது குடும்பத்தினரையும் கணக்கிட்டால், ஆறு லட்சம் பேர் பாதிக்கின்றனர். தமிழகம் முழுமைக்கும் எடுத்தால், பல கோடி பேர் வாழ்க்கையை இழந்துள்ளனர்.தேர்தலின்போது, "மூன்று மாதத்தில் மின்தடையில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றுவேன்' என்றார் ஜெயலலிதா. முதல்வராக பதவியேற்றதும், மத்திய அரசிடம், "கூடங்குளம் அணு மின் நிலையத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.

அதற்குள், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், முதல்வரை சந்தித்து பேசியதும், கூடங்குளத்தை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். ஹிலாரியுடன் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தத்தை அவர் வெளியிட வேண்டும். உதயகுமார் மீது, 152 வழக்குகள் இருந்தும், அவரை கைது செய்யவில்லை. கூடங்குளத்தை திறக்க கோரி போராட்டம் நடத்திய யுவராஜாவை கைது செய்கின்றனர்.

கூடங்குளம் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கிய ரஷ்யா, 10 சதவீத கமிஷனை வழங்கியிருந்தால், முதல்வர் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டார். நான் பேசிய இவ்விரு கருத்துக்காக அரசு என்மீது வழக்குத்தொடுத்தால், அதை சந்திக்கத் தயார்.கல்பாக்கத்தில் பல ஆண்டாக செயல்படும் அணுமின் நிலையத்தை, சுனாமி, புயல் என பலவும் தாக்கி உள்ளது. எந்த சேதமும் அடையவில்லை. அது இரண்டு மடங்கு பாதுகாப்பானது என்றால், கூடங்குளம் ஏழு மடங்கு பாதுகாப்பு கொண்டது. அதை உணர்ந்து, உடன் செயல்படுத்தினால், நமக்கு பற்றாக்குறையான, 2,500 மெகாவாட் மின்சாரத்தை அங்கிருந்து பெறலாம். மின்வெட்டில்லா மாநிலத்தை உருவாக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக