செவ்வாய், 20 மார்ச், 2012

ஜெயா வழக்கு நாளை சசி ஆஜாராவாரா? என்ன என்ன நாடகமோ நாளை


பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வரும் நீதிபதி மல்லிகாஜூனையா சிறப்பு நீதிமன்றத்திலிருந்து மாற்றும் லாபி வேகமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாளைய விசாரணைக்கு சசிகலா வருவாரா? அலது வழக்கம்ப்போல "கட்" அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா ஏற்கெனவே நீதிபதியின் கேள்விகளுக்குப் பதிலளித்துவிட்டார். ஆனால் சசிகலாவோ "விட்டேனா பார்" என்ற ரீதியில் "எவ்வளவு இழுத்தடிக்க முடியுமோ அந்தளவுக்கு இழுத்தடித்து வருகிறார்... சசிகலாவிடம் நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு வேண்டுமென்றே நிறுத்தி நிதானமாக பதில் சொல்லிவந்த சசிகலா, ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஆஜராகாமல் இருப்பது என்ற "யுக்தி"யை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார்.

பெங்களூரில் கடந்த வாரம் விறுவிறு விசாரணையை நடத்த நீதிபதி மல்லிகார்ஜூனையாவும் அரசு வழக்க்றிஞர் சந்தேஷ் செளடாவும் காத்திருந்தனர். ஆனால் சசிகலா தரப்பு வழக்கறிஞர் மணிசங்கர் மட்டும் ஆஜரானார். சசிகலாவுக்காக காத்திருந்த "போயஸ் டீம்" சற்றே ஏமாந்தது.

சசிகலாவுக்கு ஹைபர் டென்ஷன் வெர்டிகோ நோய்

இதுபற்றி கருத்துத் தெரிவித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர் சந்தேஷ் செளடா,"நீதிமன்றங்களில் குற்றவாளிகள் ஆஜராவதும் வழக்கறிஞர்கள் ஆஜராகமல் போவதும் வழக்கம்.. ஆனால் இங்கோ நீதிபதியும் வழக்கறிஞரும் வந்துவிடுகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள்தான் வருவதில்லை " என்றார் காட்டமாக.

சசிகலா ஆஜராகதது ஏன் என்ற கேள்விக்கு வழக்கறிஞர் மணிசங்கர் சொன்ன ஒரு தகவல் அனைவரையும் கிறுகிறுக்க வைத்தது.

"சசிகலாவுக்க்கு "ஹைபர் டென்ஷன் வெர்டிகோ" என்ற நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு அவருக்கு மயக்கம் வருகிறது. எனவே அவர் பயணம் செய்யக்கூடாது என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கின்றனர்" என்ற பதில் டென்ஷன்களுக்கு மத்தியில் சிரிப்பலைகளை ஏற்படுத்த தவறவில்லை... விட்டாரா சசிகலா வழக்கறிஞர்.....இதுக்கெல்லாம் அசருபவர்களா நாங்கள் என்ற ரீதியில் வினோத கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

பெண் குற்றவாளிகள்?

இந்த வழக்கில் விளக்கம் அளிக்க இருப்பவர்களில் இருவர் பெண்கள். பெங்களூரு நீதிமன்றத்தில் ஏற்கெனவே வன்முறை நிகழ்ந்ததால் இரண்டு பெண்களுக்கும் பாதுகாப்பு கருதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நூதனமாக கோரிக்கை விடுத்தார்.

கடுப்பாகிப் போன நீதிபதி மல்லிகார்ஜூனையா, குற்றவாளி குற்றவாளிதான்.. ஆண் குற்றவாளி..பெண் குற்றவாளியெல்லாம் கிடையாது..நீதிமன்றத்தின் கடமையை செய்ய மூவரும் ஒத்துழைத்தாக வேண்டும் என்றார்.

ஜெயலலிதா மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தாலும் கூட சசிகலா தரப்பு அசருவதாக இல்லை போலும். ஏற்கெனவே சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவை மாற்ற முயற்சித்த விவகாரம் பகிரங்கமாக வெளியே வந்தது. இந்த நிலையில் நீதிபதிக்கு செக் வைக்கும் வகையில்தான் இப்படியான இழுத்தடிப்பை சசிகலா தரப்பு செய்வதாகக் கூறபடுகிறது.

நீதிபதிக்கு செக்

ஏனெனில் சாட்டையைக் கையில் வைத்திருக்கும் நீதிபதி மல்லிகார்ஜூனையா வரும் ஆகஸ்ட் மாதம் ஓய்வு பெறுகிறார். இதனால் தாம் ஓய்வு பெறுவதற்குள் தீர்ப்பை வழங்கிட "விரைவான விசாரணை" என்ற வேகத்தில் பயணிக்கிறார்.

சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யாவையே அதிரவைத்த சசிகலா தரப்பு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி மல்லிகார்ஜூனையாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முதன்மை பொறுப்புக்கு திடீரென உயர்த்தி வெளியே அனுப்பும் வேலையிலும் இறங்கியிருக்கிறது. இதற்கான லாபி வேகமாக செயல்பட்டு வருகிறது என்கின்றனர்.

 நாளை சசிகலா ஆஜராவாரா?நாளை என்ன நாடகத்தை அரங்கேற்றுவாரோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக