திங்கள், 12 மார்ச், 2012

கர்ணன்: கண் முன் விரியப்போகிறது பிரம்மாண்ட அரசியல் திரைப்படம்

மிழ் சினிமாவில் வரலாற்று படங்களை குறிப்பாக தமிழகத்து சுதந்திர போராட்ட வீரர்களான, கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை எடுத்த,  பி.ஆர். பந்துலு தயாரித்து இயக்கிய ‘கர்ணன்’ திரைப்படம் மீண்டும் திரைக்கு வருகிறது. தமிழ் தியாகிகளை பற்றி படம் எடுத்த பந்துலு ஒரு கன்னடக்காரர்.  அவர் மீதான மதிப்புக்கு இதுவும் காரணம்.
எம்.ஜி.ஆர் படங்களில் ஆயிரத்தில் ஒருவன் வித்தியாசமான பின்னணியும் பிரம்மாண்டமும் கொண்ட படம். அதை தயாரித்து இயக்கியவரும் பி.ஆர். பந்துலுவே.
மகாபாரதத்தின் கிளைக்கதையாக அமைந்த ‘கர்ணன்’ திரைப்படம் ஒரு புராணப்படமாக அறியப்பட்டாலும், என்னை பொறுத்தவரை ‘கர்ணன்’ சிறந்த அரசியல் திரைப்படம்.

எனக்கு தெரிந்த வரையில், ‘கர்ணன்’ திரைப்படத்திற்கு பிறகு, மகாபாரதத்தின் கிளைக்கதையாக, பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பார்வையோடு இந்தியாவின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான பரதன் இயக்கிய ‘வைசாலி’ மலையாள படம் மிக முக்கியமான ஒன்று.
தொலைக்காட்சியில் மட்டுமே ‘கர்ணன்’ படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். மீண்டும் திரைக்கு வரவிருக்கிற இந்த படத்தை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பேரார்வத்தில் இருக்கிறேன்.
என் பேரார்வத்திற்கு காரணம் பி.ஆர். பந்துலு, இந்த படத்தில் நுட்பமான வசனங்களுக்கு சொந்தக்காரரான சக்தி கிருஷ்ணசாமி; இவர்தான் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வசனம். மற்றும் சிவாஜி கணேசன், விஸ்வநாதன் – ராமமூர்த்தி.
கோபம், பெருமிதம், வெட்கம். கருணை, கம்பீரம், காதல், கண்ணீர் கலந்து நம் கண்முன் கர்ணனை நிறுத்திய சிவாஜியின் நடிப்பு குறிப்பிடத்தக்க ஒன்று.
பெருமிதம்
அதுபோல் விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் பாடல்கள்; கர்நாடக சங்கீதத்தின் நுட்பம் என்றால், அது கே.வி. மகாதேவன்தான் என்று ஒரு அடையாளம் உண்டு, அது உண்மையும்தான்.
காரணம், பக்தி இலக்கியங்களை திரைப்படமாக்குவதில் சிறந்தவராகவும், நாட்டியத்திற்கும் நாதஸ்வர இசைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட, ‘தில்லானா மோகனாம்பாள்’ போன்ற மிகச் சிறந்த பொழுது போக்கு படங்களை எடுத்த ஏ.பி. நாகராஜனின் திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற படங்களில் கே.வி. மகாதேவன், ‘கர்நாடக இசை மேதை’ என்பதை நிரூபித்திருப்பார்.
‘கர்ணன்’ திரைப்படம் கே.வி. மகாதேவைனை போலவே, விஸ்வநாதன் – ராமமூர்த்தியை கர்நாடக மற்று இந்துஸ்தானி இசையின் மேதைகளாக அடையாளம் காட்டியது.
கேட்ட மாத்திரத்தில் யாரையும கலங்க வைக்கிற ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்.. பாடலும், ‘ஆயிரம் கரங்கள் நீட்டி.. அணைக்கின்ற தாயே போற்றி…’  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்…’
’இரவும் நிலவும் வளருட்டுமே.’. என்று இந்துஸ்தானி இசையில் அமைந்த இனிமை, ‘என் உயிர் தோழி கேளொரு செய்தி..’ என்ற இன்னொரு இனிமை என்று விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் விரிந்த இசையறிவுக்கு இவைகள் சாட்சி.
நம்பிக்கை துரோகம், நயவஞ்சகம், தந்திரம், மோசடி. உறவாடி கழுத்தறுப்பது என்று இன்றைய நிகழ்கால அரசியலோடு பொறுத்தி பார்ப்பதற்கு மட்டுமல்ல; இந்திய அரசியலில் என்றைக்குமே நிகழ்கால அரசியலாக இருக்கிற பார்ப்பன உயர்வும், சத்திரியர்களின் கவுரமான அடிமைத்தனமும், பார்ப்பன, சத்திரியர்களின் சூத்திர வெறுப்பும்,  சூத்திர இழிவும் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
யாராலும் வெல்லமுடியாத அளவிற்கு கர்ணன் பெரிய வீரன், அறிவாளி, நல்லவன், உயர்ந்த குணங்கள் கொண்டவன்; ஆனாலும் துரோணாச்சாரியார் போன்ற பார்ப்பனர்களால் மட்டுமல்ல, பிஷ்மர்  போன்ற சத்திரிய ‘நல்லவர்’களாலும் அவன் அவமானப்படுத்தப்படுகிறான், காரணம் அவன் சூத்திரன்; என்று பதிவு செய்திருக்கிறது இந்த படம்.
அதுமட்டுமல்ல, கடவுள் கண்ணன் ஒரு நியாயவாதியல்ல, காரியவாதி. கவுரவர்களுக்கு ஒரு சகுனி. அதே சகுனி வேலையை பாண்டவர்கள் சார்பாக செய்வதற்கு, ஒரு கடவுள் கண்ணன் என்று பதிவு செய்திருக்கிறது படம்.
இந்த படம் எடுத்தவர்களுக்கு இதை சொல்ல வேண்டும் என்ற நோக்கம் இருந்ததோ இல்லையோ எனக்கு தெரியாது. ஆனால், படம் அதை சொல்லியிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக