சனி, 31 மார்ச், 2012

கிரிமினல்கள் நிறைந்த பார்லிமென்டை நான் மதிக்க முடியாது,அன்னா குழு அரவிந்த் கெஜ்ரிவால்

காசியாபாத் :""கிரிமினல் பின்னணியுடன் கூடிய எம்.பி.,க்களைக் கொண்ட பார்லிமென்டை நான் மதிக்க முடியாது,'' என, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 25ம் தேதி, அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால், "பார்லிமென்ட் எம்.பி.,க் களில், 163 பேருக்கு எதிராக, கொடூர குற்றங்கள் புரிந்ததாக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கற்பழித்தவர்கள், கொலைகாரர்கள் மற்றும் கொள்ளையடித்தவர்கள் எல்லாம் பார்லிமென்டில் அமர்ந்திருக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில், ஜன்லோக்பால் மசோதா நிறைவேறும்' என, தெரிவித்திருந்தார்.கெஜ்ரிவாலின் இந்தக் கருத்துக்கு பார்லிமென்டில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்கள் அனுப்பவும் தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, கெஜ்ரிவாலுக்கு லோக்சபா செயலர் மூலம் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

நோட்டீஸ்களுக்கு பதில் அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளதாவது:

பார்லிக்கு அவமதிப்பு :கிரிமினல் பின்னணியுடன் கூடிய எம்.பி.,க்களைக் கொண்டிருக்கும் பார்லிமென்டை நான் எப்படி மதிக்க முடியும். எம்.பி.,க்களில் 163 பேர் கிரிமினல் பின்னணி கொண்டவர்கள். அவர்களை எம்.பி.,யாக்கி, பார்லிமென்டிற்கு அவமதிப்பை தேடித் தந்ததற்கு அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும்.ரயில் விபத்து ஒன்றுக்கு பொறுப்பேற்று, தன் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரைப் போன்றவர்கள் பார்லிமென்டில் இருந்த காலம் அப்போது. ஆனால், இப்போதைய நிலைமையோ வேறு.பொது சேவை பற்றி அறியாத தொழிலதிபர்கள் எல்லாம், இன்று அரசியல் கட்சிகளின் துணையுடன் எம்.பி.,யாகி விடுகின்றனர். தங்களின் வர்த்தக நலன்களுக்காக அவர்கள் பார்லிமென்டிற்கு செல்கின்றனர். இது பார்லிமென்டை தவறாக பயன்படுத்தும் செயல் அல்லவா? இது பார்லிமென்டிற்கு அவமானம் இல்லையெனில், எது அவமானம்.

மசோதாவை கிழித்தவர் :காங்கிரஸ் எம்.பி., சாஜன்சிங் வர்மா, ராஷ்டிரிய ஜனதா தள எம்.பி.,க்கள் ரஞ்ஜித் பிரசாத், ராம் கிரிபால் யாதவ் ஆகியோர், லோக்சபா செயலர் மூலம் எனக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர்களில், ரஞ்ஜித் பிரசாத், பார்லிமென்டில் லோக்பால் மசோதாவை கிழிந்து எறிந்தவர். அவர் பார்லிமென்டை அவமதித்தாரா அல்லது நான் அவமதித்தேனா?இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், ""மத்திய அமைச்சர்களில், 14 பேர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு எதிரான ஆதாரங்களுடன் கடிதம் ஒன்றை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அன்னா ஹசாரே குழுவினர் அனுப்பி வைப்பர்,'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக