சனி, 31 மார்ச், 2012

ஆதிக்க சாதியை பாதுகாக்கும் போலீசும் அதிகார வர்க்கமும்

தாழ்த்தப்பட்டவரை கொடியேற்ற விடாமல் தீண்டாமையை அனுசரித்த கள்ளர் சாதிக் கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய போலீசு கட்டப்பஞ்சாயத்து பேசியுள்ளது

தனிச்சுடுகாடு, இரட்டைக்குவளை எனத் தெளிவாகத் தெரியும்வண்ணம் தாழ்த்தப்பட்டோர் மீது ஏவப்படும் தீண்டாமைக் கொடுமை, பல புதிய வடிவங்களை எடுத்தவண்ணம் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கருவடத்தெரு சிற்றூரில் இந்த ஆண்டு குடியரசு தினத்தன்று அது அரங்கேறியுள்ளது.
கருவடத்தெருவின் ஊராட்சித் தலைவராக இருக்கும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கலைமணி அண்ணாதுரை, குடியரசு தினத்தை முன்னிட்டு, ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ள வளாகத்தில் தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டார். அப்போது அங்கே  ஊராட்சிமன்றத் துணைத் தலைவரின் மகனான குமார் தலைமையில் வந்த இருபதுக்கும் மேற்பட்ட கள்ளர் சாதி வெறியர்கள் அவரைக் கீழே தள்ளிவிட்டனர். ‘பல ஆண்டுகளாக பள்ளி அலுவலகத்தோடு நெருங்கிய தொடர்பில்’ இருக்கும் தாங்கள்தான் கொடியேற்றுவோம் எனக் கூறி கலைமணியைக் கொடியேற்றவிடாமல் தடுத்தனர்.
இது ஜனநாயக நாடென்று அரசு செய்து வரும் பிரச்சாரம், கொடிக்கம்பத்தின் கீழேயே கிழிந்து தொங்கியது. ஊராட்சிமன்றத் தலைவராகவே இருந்தாலும், கள்ளர் சாதியினர் இருக்க தாழ்த்தப்பட்டவர் கொடியேற்றுவதா எனத் தெனாவெட்டாகத் தீண்டாமையை அனுசரித்த அக்கும்பலை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உள்ளே தள்ளவேண்டிய போலீசோ இருதரப்பினருக்குமிடையே கட்டப்பஞ்சாயத்து பேசி, பள்ளித் தலைமை ஆசிரியரைக் கொடியேற்ற வைத்துள்ளது. மொத்தத்தில், கள்ளர்சாதிக் கும்பலும் போலீசுதுறையும், தாழ்த்தப்பட்டோர் ஒருவர் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் பார்த்துக் கொண்டனர். கோயில் திருவிழா போன்ற நிலப்பிரபுத்துவ ஊர் மரபுகளில் மட்டுமே கடைப்பிடிக்கப்பட்டு வந்த தீண்டாமை, குடியரசு தின விழாவுக்கும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இல்லாத கடவுளுக்கு  ஏற்றப்படும் கோயில் திருவிழா கொடிக்கும், இல்லாத  ஜனநாயகத்தை இருப்பது போலக் காட்டுவதற்காக ஏற்றப்படும் குடியரசு தினவிழாக் கொடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சாதி-தீண்டாமை-2இச்சம்பவம் நடந்த சில நாட்களிலேயே ஈரோடு மாவட்டம் பசுவப்பட்டி ஊராட்சிமன்றத் தலைவியான வள்ளி தெய்வானை என்பவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்துக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகார் மனுவை அளித்துள்ளார். “தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தான் சாதி இந்துக்களால் தீண்டாமைக் கொடுமைக்குள்ளாவதாகவும், தேர்ந்தெடுக்கப்பட்ட நாளிலிருந்தே ஊராட்சிமன்றத் தலைவர் இருக்கையில் தன்னை ஆதிக்க சாதியினர் அமரவிட்டதில்லை” என்றும் அப்புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை பணி செய்ய விடாமல் சாதி இந்துக்கள் தடுப்பதாகவும், தகுதியே இல்லாதவர்களுக்கு முதியோர் ஓய்வூதியத்தை வழங்கக் கோரி அழுத்தம் கொடுப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
பசுவம்பட்டியில் மட்டுமல்ல, தென்மாவட்டங்களில் தாழ்த்தப்பட்டோருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான ஊராட்சி அமைப்புகளில் இதுதான் நிலைமை. தலைவராக ஆனாலும் நின்றுகொண்டேதான் கூட்டம் நடத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஊராட்சிமன்றப் பிரதிநிதிகளின் ஆணைகளை அவர்களுக்குக் கீழே பணியாற்றும் உதவி அலுவலர்கள் கூட  செயல்படுத்துவதில்லை. அப்பிரதிநிதிகள், நாற்காலியில் அமர விடாமல் தடுக்க, நாற்காலிகளை உடைத்துப் போட்டுவிட்டு, அவற்றை செப்பனிடாமல் போட்டுவைக்கும்  கீழ்த்தரமான தந்திரங்களைச் செய்யவும் கூச்சப்படுவதில்லை.
தாழ்த்தப்பட்டோரை, அதிகாரத்தில் பங்கெடுக்க வைக்கும் இட ஒதுக்கீடு சீர்திருத்தங்களைக் கூட ஆதிக்க சாதியினர் சகித்துக் கொள்வதில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக பாப்பாப்பட்டி  கீரிப்பட்டியில் ஆதிக்க சாதியினர், உள்ளாட்சி தேர்தலைக் கேலிக்கூத்தாக்கும் வண்ணம்  தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை உடனே பதவி விலக வைத்து வந்தனர். அவர்களை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் தண்டிக்காத அரசோ, அடுத்தடுத்து இந்தக் கேலிக்கூத்துத் தேர்தல்களை நடத்தியது. அச்சாதி வெறியர்களிடம் பேரம் பேசி ரூ. 25 லட்சம் சிறப்பு ஒதுக்கீடு செய்து தாஜா செய்தது.
பாப்பாப்பட்டி போலன்றி சுமுகமாகத் தேர்தல் நடந்த பல ஊர்களில், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் சுயேச்சையாக முடிவெடுக்கவோ, சட்டப்படி செயல்படவோ ஆதிக்க சாதியினரால் அனுமதிக்கப்படுவதில்லை. அச்சுறுத்தல்களைப் புறந்தள்ளி செயல்பட முனைந்தவர்களுக்குக் கிடைத்தவையோ கொலைவெறித் தாக்குதல்கள். அதிலும் பெண்ணாயிருந்தால் பாலியல் வன்முறைக்கும் ஆளாகியுள்ளனர். அருந்ததியினர் சாதியைச் சேர்ந்த திருநெல்வேலி தாழையூத்து ஊராட்சித் தலைவர் கிருஷ்ணவேணி மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் இதற்கு சான்றாகும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல;  எல்லா மாநிலங்களிலும் சாதிவெறித் தாக்குதல்கள் அன்றாடச் செய்திகளாகி உள்ளன. கடந்த ஜனவரி 22 அன்று ஒடிஸ்ஸா மாநிலத்தை சேர்ந்த லாத்தூரில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கணேஷ் சுனா எனும் தாழ்த்தப்பட்ட மாணவன், உள்ளூர் கடையொன்றில் சட்டை வாங்கச் சென்றான். அப்பகுதியில் தாழ்த்தப்பட்டோர் உள்ளாடை அணிவதை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. கணேஷ் சுனா, பனியன் அணிந்திருந்ததைக் கவனித்த ஆதிக்க சாதியைச் சேர்ந்த கடைக்காரர், ஆத்திரமடைந்திருக்கிறார்.  அதனை வெளிப்படையாகச் சொல்லாமல், சட்டை வாங்க வந்த மாணவனை, திருட வந்ததாகச் சொல்லி கடைக்காரர் தாக்கினார். தடுத்த, அப்பையனின் தாத்தாவையும் தாக்கியுள்ளார். பின்னர் 50 பேருக்கும் மேல் திரண்டு வந்து சேரியைச் சூறையாடி தீவைத்துள்ளனர்.
சாதி-தீண்டாமை-1அதே மாதத்தில், மகாராஷ்டிர மாநிலம் முல்கான் கிராமத்தில், 42 வயதான தாழ்த்தப்பட்ட பெண்மணியை நிர்வாணப்படுத்தி சாதிவெறியர்கள் ஊர்வலம் விட்டுள்ளனர். அப்பெண்மணியின் மகன் ஒரு மாதத்திற்கு முன் ஆதிக்க சாதிப் பெண்ணுடன் காதல்வயப்பட்டு ஊரைவிட்டு ஓடியதுதான், இக்கொடுஞ்செயலுக்குக் காரணம்.
இவ்வாறு தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்டோர் மீது, வன்கொடுமையை ஏவுவதில் ஆதிக்க சாதியினர் தீவிரமாக உள்ளனர். வன்கொடுமையைத் தடுப்பதற்கென கொண்டுவரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை இச்சாதிவெறியர்களுக்கு எதிராக அதிகார வர்க்கம் ஏவுவதில்லை. வன்கொடுமையைத் தடுக்கத் தவறுகின்ற மாவட்ட ஆட்சியாளர், காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கடந்த ஏப்ரலில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் கூறியுள்ளது. காகிதத் தீர்ப்பு சாதிவெறியைக் கட்டுப்படுத்திவிடவில்லை.
“அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்! அதன்மூலம் சாதிக்கொடுமையை ஒழிப்போம்!” என்ற முழக்கத்தை வைத்து தாழ்த்தப்பட்ட மக்களை அணிதிரட்டின, தலித் இயக்கங்கள். தேர்தல்கள் மூலம் அதிகாரத்தைப் பல இடங்களில் கைப்பற்றிய பின்னரும் சாதிக் கொடுமை தீரவில்லை. உத்திரப் பிரதேசத்தில் பார்ப்பனர்  கூட்டணியுடன் மாயாவதி ஆட்சியைப் பிடித்த பின்னர், தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. தலித் இளைஞரைப் படுகொலை செய்த தன் கட்சியை சேர்ந்த சாதிவெறியர்களை சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைப்பதற்கே பகுஜன் சமாஜ் கட்சி துணைபோனது.
சாதி ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் தொடர்ந்து பேணுவதற்காக, தலித் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணமே இட ஒதுக்கீடு என்பது சாதிவெறியர்களின் கருத்து. தலித் மக்களில் யாருக்கு எவ்வளவு ஜனநாயகத்தை, எங்கே, எப்போது வழங்கலாம் என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தாங்கள் பெற்றிருப்பதாகவே ஆதிக்க சாதியினர் கருதுகிறார்கள். இந்த அதிகாரம் வன்கொடுமைத் தடைச்சட்டத்துடன் மோதும் இடங்களில், மிகவும் இலாவகமாக, அதனை மடை மாற்றி விட்டு, ஆதிக்க சாதியினரின் அதிகாரத்தைப் பாதுகாக்கும் பணியை போலீசும் அதிகார வர்க்கமும் செய்கின்றன.
சமரசம் என்ற பெயரில் நடத்தப்படும் இந்த அயோக்கியத்தனத்தை அடையாளம் காட்டி,  அம்பலப்படுத்தி முறியடிப்பதுதான் சாதிதீண்டாமையை ஒழிக்க விரும்பும் அனைவரின் கடமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக