புதன், 28 மார்ச், 2012

அமைச்சர் அந்தோணி:வி.கே.சிங் எழுத்து மூலம் புகார் கொடுத்திருந்தால் நடவடிக்கை எடுத்திருப்பேன்

எங்கேயோ இடிக்கிறதே?
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி திஜேந்தர்சிங், தனக்கு லஞ்சம் கொடுக்க முன்வந்த விவரத்தை, என்னிடம் ராணுவத் தளபதி ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார். இருப்பினும், அதை அவர் அந்த நேரத்தில், பெரிதுபடுத்த விரும்பவில்லை. இதற்கான காரணங்கள் எனக்குத் தெரியாது. இவ்விஷயத்தில் நான் நடவடிக்கை எடுத்திருக்கலாம்தான். ஆனால், எழுத்துப் பூர்வமான புகார் எதையும், அந்த நேரத்தில், ராணுவத் தளபதி என்னிடம் தரவில்லை' என்று, ராணுவ அமைச்சர் அந்தோணி கூறியுள்ளார்.

ராணுவத் தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக, தனக்கு 14 கோடி ரூபாய் வரை லஞ்சம் அளிக்க முயற்சி நடந்ததாக ராணுவத் தலைமை தளபதி வி.கே.சிங் குற்றம் சாட்டியிருந்தார். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான திஜேந்தர்சிங்தான், இந்த பேரத்தில் ஈடுபட்டார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரம் குறித்து, நேற்று முன்தினம் பார்லிமென்டில் புயல் வீசி ஓய்ந்த நிலையில், நேற்று ராணுவ அமைச்சர் அந்தோணி விளக்கம் அளித்தார்.


ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது:

மனசாட்சிப்படி நடப்பேன்:நான், இதுவரை மூன்று முறை முதல்வராக இருந்துள்ளேன். நீண்டகாலமாக பொதுவாழ்க்கையில் உள்ளேன். என் வாழ்நாள் முழுவதும் ஊழலை எதிர்த்தே வந்திருக்கிறேன். என் பொது வாழ்க்கையில் எந்த ஒரு கறைபடிந்த சம்பவங்களுக்கும் இடம் தந்ததில்லை.ராணுவ அமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளே, எனது அமைச்சக அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரிடமும் ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினேன். ராணுவத் துறையை நவீனப்படுத்தவே நடவடிக்கைகள் மேற்கொள்கிறேன். நிலம் தொடர்பான நிறைய ஊழல்களுக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டவன் நான். தவறுகள் ஏதாவது நடந்திருந்தால், எந்த ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதற்குத் தயார். நான் உண்மையை தவிர வேறு எதையும் பேச மாட்டேன். மனசாட்சிப்படி நடந்து கொள்ளும் வழக்கம் உள்ளவன்.

சி.பி.ஐ.,க்கு உத்தரவு :ராணுவத் தளவாடங்கள் வாங்கும் ஒப்பந்த பிரச்னை என்பது, 1986ம் ஆண்டிலிருந்தே உள்ளன. இருப்பினும், நேற்று காலை இந்தச் செய்தி பத்திரிகைகளில் வெளியாகியிருப்பதைப் பார்த்தவுடன், உடனடியாக செயலரை அழைத்து, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தும் விதமாக, சி.பி.ஐ., க்கு உத்தரவு பிறப்பித்தேன்.முறையான புகார் அளிக்கப்படா விட்டாலும்ககூட, விசாரணைக்கு உத்தரவிடும்படி கூறினேன். என் அமைச்சகம் தொடர்புடைய எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எந்த தரப்பு தெரிவித்தாலும் சரி, அவ்வளவுக்கும் விசாரணைக்கு உத்தரவிடத் தயாராக உள்ளேன். குற்றம் சாட்டப்படும் நபர் எவ்வளவு பெரிய அதிகாரம் மிக்க இடத்தில் இருந்தாலும்கூட, பயப்படமாட்டேன். அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் ஏதும் எனக்கு இல்லை.

தண்டியுங்கள் :வி.கே.சிங் என்னை ஒருநாள் சந்தித்து, திஜேந்தர் சிங், தனக்கு லஞ்சம் தர, பேரம் நடத்தியதாகக் கூறினார். அதைக் கேட்டவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அவரிடம் கூறினேன். அவரோ அந்த விஷயத்தை, மேலும் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறிவிட்டார். இதன் காரணம் எனக்குத் தெரியாது. இந்த விவகாரத்தில் நான், என்னால் எவ்வளவு முடியுமோ அதைச் செய்திருக்கிறேன். நான் தவறு செய்திருப்பதாகக் கருதினால், என்னைத் தண்டியுங்கள்.இவ்வாறு அந்தோணி பேசினார்.

காலதாமதம் செய்தது ஏன்?பா.ஜ., மூத்த எம்.பி.,யான அலுவாலியா, ""2010 செப்டம்பர் 11ம் தேதி, லஞ்ச பேரத்திற்கு முயற்சி நடந்திருப்பது அமைச்சருக்குத் தெரியவந்தும், அது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை. நடவடிக்கைகளுக்கு உத்தரவிடவில்லை என்பதே முக்கிய கேள்வி. சம்பவம் நடந்து இவ்வளவு நாட்களுக்குப் பிறகு, ஊடகங்களில் பிரச்னை வெடித்த பின்னரே, இந்த விஷயம் குறித்து அமைச்சர் பேசுகிறார். ஏன் இந்த கால தாமதம்?,'' என்றார்.

ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் அருண்ஜெட்லி பேசுகையில், ""கடந்த சில மாதங்களாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் கவலைக்குரியதாக உள்ளன. தேசத்தையே கட்டிக் காக்கும் ராணுவத் துறையின் மீது, வெளியாட்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.லஞ்ச பேரத்தில் சம்பந்தப்பட்ட இருவரையும் அவர்களது பணிக்காலம் முழுக்க தொடர்வதற்கு அனுமதிக்கப்பட்டும் உள்ளது. நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக அனுமதிக்க இயலாது,'' என்றார்.

மார்க்சிஸ்ட் எம்.பி.,யான டி.கே.ரங்கராஜன், "" ராணுவத் தளபதியின் புகாரை வெகு இயல்பாக அமைச்சர் எடுத்துக் கொண்டது ஏன்?,'' என, கேள்வி எழுப்பினார்.

அவதூறு வழக்கு:ராணுவ தளபதி வி.கே.சிங்கிற்கு எதிராக, ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் திஜேந்தர்சிங், நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

வி.கே.சிங் குற்றச்சாட்டை மறுத்துள்ள திஜேந்தர்சிங், ""நான் 2010 செப்டம்பரில் ராணுவ தளபதியை சந்தித்தேன். அப்போது, ராணுவ தளவாடங்கள் வாங்குவது தொடர்பாக, எந்த விதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை. தனிப்பட்ட விஷயம் தொடர்பாகவே, அவரைச் சந்தித்தேன்,'' என்றார்.

அதேநேரத்தில், ராணுவ தளபதி வி.கே.சிங் மற்றும் சிலருக்கு எதிராக, டில்லி கோர்ட்டில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். "தன் மதிப்பை, கவுரவத்தை குறைக்கும் வகையில், அறிக்கைகளை வெளியிட்ட ராணுவ தளபதி மற்றும் சிலருக்கு எதிராக சம்மன் அனுப்பி, விசாரணை நடத்த வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளார்.

அதுக்கே அப்படி எனில், இதுக்கு மட்டும் ஏனாம்?

எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் பேசிய பின், மீண்டும் பேசிய அந்தோணி, ""அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, இத்தாலி, இஸ்ரேல் என, பல நாடுகளும், இந்தியாவுக்கு ஆயுத விற்பனை செய்கின்றன. இதுதொடர்பான நடவடிக்கைகளில் சிறு புகாரைக்கூட நான் புறக்கணிப்பதில்லை. அடையாளம் தெரியாத ஒருவர் செய்யும் புகாரை கூட, அலட்சியப்படுத்தமாட்டேன். ராணுவத் தளபதி பிரச்னையில் நான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்தான். வெறுமனே புகார் சொன்னால், என்னால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனக்கு லஞ்சம் தர திஜேந்தர் முயன்றார் என்பதை எழுத்துப்பூர்வமாக ராணுவத் தளபதி அப்போது என்னிடம் புகார் தரவில்லை,'' என்றார்.

அப்போது இடைமறித்த பா.ஜ., எம்.பி., யான பல்பீர்புஞ்ச், ""யாரே ஒரு அடையாளம் தெரியாத ஆள் அளிக்கும் புகாரைக் கூட விசாரிப்பேன் என்கிறார் அமைச்சர்.பத்திரிகைகளில் வெளியானவுடன், முறையான புகாரை யாரும் அளிப்பதற்கு முன்பாகவே சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டதாகவும் கூறுகிறார்.ஆனால், நாட்டின் ராணுவத் தலைமை தளபதியே புகார் சொல்லியும்கூட, அதை மட்டும் வெகு இயல்பாக எடுத்துக் கொண்டு அமைச்சர் அலட்சியப்படுத்தியது ஏன்?,'' என்று கேட்டார். இதனால், சபையில் சர்ச்சை நீடித்தது.

அப்போது தலையிட்ட துணைத் தலைவர் ரகுமான்கான், ""இது விவாதம் அல்ல. அமைச்சர் விளக்கம் அளித்துவிட்டார். பிரச்னை முடிவுக்கு வந்தது,'' என்று கூறினார்.

- நமது டில்லி நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக