ஞாயிறு, 25 மார்ச், 2012

சென்னை வீட்டு வாடகை!போலியான ஒரு டிமாண்ட்

High house rent

சென்னையில் கண்டபடி உயர்ந்து வரும் வீட்டு வாடகை அனைவரையும் கவலை கொள்ள வைத்துள்ளது குறிப்பாக நடுத்தர மக்களை.
முன்பு பேச்சலர்களுக்கு வாடகைக்கு விட மாட்டேன் என்று கூறியவர்கள் தற்போது அவர்களைத் தவிர மற்றவர்களுக்கு வாடகைக்கு விட யோசிக்கிறார்கள். இதற்கு முக்கியக் காரணம் கணிப்பொறி துறையில் கிடைக்கும் அதிக சம்பளம். முக்கியமாக யாரும் அலைய தயாராக இல்லை என்பதால் 1000 அல்லது 2000 அதிகம் என்றாலும் சரி என்று ஒத்துக்கொள்ளும் மனோபாவம்.
நான்கு பேச்சலர்கள் சேர்ந்து 3000 வாடகை மதிப்புள்ள வீட்டிற்கு 1500 வீதம் 6000 கொடுக்க தயாராக இருப்பதால் இவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இன்று விளம்பரத்தில் ஒரு வீடு வாடகைக்கு வருகிறது என்றால், நம்பினால் நம்புங்கள் காலை 7 மணிக்குப் பிறகு நீங்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டால் அந்த வீடு முடிந்து விட்டதாக கூறுவார்கள். அந்த அளவுக்கு சென்னையில் வீடு கிடைப்பது சிரமம்.
கணிப்பொறித் துறையில் உள்ளவர்களால் மட்டுமே வாடகை உயர்வு என்றும் ஒரேயடியாக குற்றம்சாட்ட முடியாது, சதவீதத்தில் வேண்டும் என்றால் அளவு அதிகம் இருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான துறையில் உள்ளவர்கள் ஓரளவு குறிப்பிடத்தக்க ஊதியம் பெறுகிறார்கள். எனவே அனைவருமே அலைவதற்கு விரும்பாமல் அதிக பணம் கொடுத்து உடனடியாக வீட்டைப் பிடிக்க விரும்புகிறார்கள். இதை எல்லாவற்றையும் விட தரகர்கள். வாடகை உயர்வில் மிக முக்கியப் பங்காற்றுபவர்கள் இவர்களேது. தங்களுக்குக் கிடைக்கும் தரகு பங்கின் அளவை அதிகரிக்க இவர்களே போலியான ஒரு டிமாண்ட் ஏற்படுத்தி விடுகிறார்கள் மற்றும் வீட்டு வாடகையை உயர்த்தி விடுகிறார்கள்.

இப்பொழுது சென்னையில் 6000 - 7000 குறைவாக வீடு கிடைப்பது மிக அரிது அதுவும் பல கண்டிப்புகள் வேறு. வீடு எடுப்பது என்றால் சாதாரண விஷயம் இல்லை ஏலம் போன்றதுதான். அங்கே சென்றால் யார் அதிகம் கூறுகிறார்களோ அவர்களுக்கே அந்த வீடு. அதிக வீட்டு வாடகை கொடுப்பது வேறு வழி இல்லை என்றாலும், கொடுக்கும் வாடகைக்கும் உரிமையாளர்கள் கொடுக்கும் வசதிகளுக்கும் சம்பந்தமே இல்லை. எந்த ஒரு வசதியும் செய்து கொடுக்காமல் கண்டபடி வாடகை வசூலிப்பது தான் பலரின் வயித்தெரிச்சலுக்குக் காரணம்.

மைலாப்பூர், மந்தைவெளி, கே கே நகர் அண்ணாநகர் போன்ற இடங்களில் வீட்டு வாடகை குறைந்தது 10000 15000 20000 அளவில் உள்ளது. இங்கு இடம் பெயர்பவர்கள் பெரும்பாலும் குழந்தைகளின் படிப்பிற்காக மாறியவர்கள். இங்கு பள்ளிகளின் அருகாமையைப் பொறுத்தே வீட்டின் வாடகை அளவு நிர்ணயிக்கப்படுகிறது. இந்த இடங்களில் சமீபமாக 15000 ரூபாய்க்கு குறைந்து வீடு கிடைப்பது சிரமமாக உள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்தின் சம்பளத்தின் பெரும் பகுதி வீட்டு வாடகைக்கே போய் விடுவது பெரும் சோகம். முன்பு கிண்டி என்றால் வாடகை குறைவு என்று அங்கே வீடு பார்த்தார்கள் பிறகு அது தாம்பரம் ஆனது, இப்பொழுது அங்கேயும் உயர்ந்து விட்டது. இப்படியே சென்றால் செங்கல்பட்டில்தான் வீடு பார்க்க முடியும் போல உள்ளது. செங்கல்பட்டு வரை மாநகரப் பேருந்து வேறு இயங்குவதால், இனி அங்கும் குறைந்த வாடகையில் வீடி பிடிப்பது கஷ்டம்தான்!

ஒருவர் ஒரு வீட்டை காலி செய்கிறார் என்றால், அடுத்து வரும் நபருக்கு அந்த வீட்டின் உரிமையாளர் ரூ 1000 முதல் 2000 வரை வாடகையை ஏற்றிவிடுகிறார். இப்பொழுது யாரையும் அதிக நாட்கள் தங்க விடுவதில்லை (அப்போது தானே வாடகையை அடிக்கடி உயர்த்த முடியும்) அப்படியே அனுமதித்தாலும் வாடகை உயர்வு முன்பு போல இல்லாமல் அதிகளவில் இருக்கும். ஒத்துக்கொள்ளவில்லை என்றால் பேசாமல் வீட்டை காலி செய்ய வேண்டியதுதான், அடுத்த நபர் தயாராக இருக்கிறார், நீங்கள் எப்போது கிளம்புவீர்கள் என்று.

எனவே வீட்டு உரிமையாளருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. குழந்தைகளின் பள்ளி மற்றும் அலுவலக இடம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு அடிக்கடி மாற்ற முடியாத நடை முறை சிக்கல் இருப்பதால் அவர்கள் கேட்பதை அழுது தொலைக்க வேண்டியுள்ளது.

அட்வான்ஸ் எனும் பகல் கொள்ளை

அதிலும் வீட்டு உரிமையாளர்களின் இந்த அட்வான்ஸ் கொள்ளை இருக்கிறதே... வடிவேலு சொல்வதுபோல, கேட்டதும் கண்ணைக் கட்டும் சமாச்சாரம்.

சென்னையில் பெரும்பாலும் 10 முதல் 15 மாத வாடகை அட்வான்ஸாக தரவேண்டும். அதாவது வட்டியில்லாத கடன்!

சிலர் 20 மாத வாடகையைக் கூட அட்வான்ஸாக கேட்பதும் உண்டு. இந்தப் பணம் அப்படியே திரும்ப கிடைக்கும் என்பதற்கும் உத்தரவாதமில்லை. என் வீட்டு பெயின்ட் நீ குடியிருந்ததால மங்கலாயிடுச்சி, அதுக்கு மூணு மாச வாடகையை பிடிச்சிக்குவேன் என்று கடைசி நேரத்தில் கழுத்தறுக்கும் ஹவுஸ் ஓனர்கள் நிறையப் பேர்!

பலர் இந்த அட்வான்ஸுக்கு ரசீதுகூட கொடுப்பதில்லை. அக்ரிமெண்டும் எழுதுவதில்லை. பெரும்பாலும் காலி பண்ணும்போது, ஹவுஸ் ஓனருக்கும் குடித்தனக்காரர்களுக்கும் நல்ல உறவும் இருக்காது. அந்த நேரத்தில் இந்தப் பணம் வருமா என்பதே கேள்விக்குறியாகிவிடும்.

வாடகை வீடு... என்று யோசிக்க ஆரம்பித்தாலே தலை கிர்ரடிக்குதே என்பதுதான் இன்றைய நிலை.

கண்டிப்பாக என்றாவது ஒரு நாள் இந்த வாடகைப் பிரச்சனை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும். இதில் அரசு தலையிட்டு இந்த வசதிகள் இருந்தால் மட்டுமே இந்த வாடகையை வசூலிக்கலாம் என்று வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் இல்லை என்றால் இதற்கு விடிவே வராது.

ஏற்கெனவே வாடகைக் கட்டுப்பாட்டு சட்டமெல்லாம் இருந்தாலும், அதன் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று பார்த்தால், விரல் விட்டு எண்ணிவிடலாம்.

எனவே அரசு கொஞ்சம் சீரியஸாக தலையிட்டால் மட்டுமே இதை கட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவரை வேற என்னங்க! புலம்பிக் கொண்டே எடுத்து நீட்ட வேண்டியதுதான், பணத்தை!

குறிப்பு: வீட்டு வாடகை பற்றி மட்டும்தான் இங்கே சொல்லியிருக்கிறோம். வீட்டு உரிமையாளர்கள் இதில் போடும் அக்கிரம கண்டிஷன்கள், என்ன சாதியாக இருக்க வேண்டும், எந்த வகை உணவு (சைவம் - அசைவம்) போன்றவற்றை இன்னும் நான்கைந்து கட்டுரைகளாக எழுதலாம்!

-கிரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக