வியாழன், 22 மார்ச், 2012

டெல்லியில் சோலார் ஆட்டோ ரிக்ஷாக்கள் விற்பனைக்கு

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சூரிய சக்தியில் இயங்கும் சோலார் ஆட்டோ ரிக்ஷாக்கள் விரைவில் டெல்லியில் அறிமுகமாகிறது. முதலில் 1000 சோலார் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
நகர்ப்புற போக்குவரத்தில் ஆட்டோ ரிக்ஷாக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதே அளவுக்கு ஆட்டோ ரிக்ஷாக்கள் வெளியிடும் புகையால் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபடுகிறது.
இதை கருத்தில்க்கொண்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் புதிய ஆட்டோ ரிக்ஷாக்கள் டெல்லியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
முதல்கட்டமாக, துவாரகா, டெல்லி பல்கலைகழகம், ரோஹினி, பீதம்புரா மற்றும் டிரான்ஸ்- யமுனா ஆகிய பகுதிகளில் இந்த சோலார் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்க டெல்லி மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது.
சோலேக்ஷாஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த ஆட்டோ ரிக்ஷாவை அறிவியல் கவுன்சில் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி மையம்( சிஎஸ்ஐஆர்), மத்திய மெக்கானிக்கல் எஞ்சினியரிங் ஆராய்ச்சி கழகம்(சிஎமஇஆர்ஐ) ஆகியவை இணைந்து வடிவமைத்துள்ளன.

அரசு அங்கீகரித்துள்ள 6 நிறுவனங்கள் இந்த ஆட்டோ ரிக்ஷாக்களை தயாரித்து வழங்கும். இந்த சோலார் ஆட்டோ ரிக்ஷாக்கள் அதிகபட்சம் மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும் திறனை கொண்டிருக்கும். முதலில் 1000 ஆட்டோ ரிக்ஷாக்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட உள்ளது.

பின்னர் 10,000 ஆட்டோ ரிக்ஷாக்கள் வரை அனுமதிக் கொடுக்க டெல்லி மாநகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்கள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் அலுவலகங்கள் மற்றும் கழிவுப்பொருள் அகற்றம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய சோலார் ஆட்டோ ரிக்ஷாக்கள் மூன்று வேரியண்ட்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. மெட்டல் பாடி ப்ரேம் வொர்க் கொண்ட ஆட்டோ ரிக்ஷா ரூ.45,000 விலையிலும், பிளாஸ்டிக் பாடி ஆட்டோ ரிக்ஷா ரூ.75,000 விலையிலும், பிளாஸ்ட்டிக் ப்ரேம் பாடியுடன், அதிக திறன் கொண்ட பேட்டரி மாடல் ரூ.85,000 விலையிலும் விற்பனைக்கு வர உள்ளது.

மேலும், இந்த ஆட்டோரிக்ஷாவின் விலையில் 15 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்றும், வாட் வரி மற்றும் சாலை வரியிலிருநது விலக்கு அளிக்கப்படும் என்றும் டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக