வியாழன், 22 மார்ச், 2012

இடிந்தகரைக்கு பால், குடிநீர், மின்சாரம்,செல்போன் ரத்து.இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது

இடிந்தகரை: உதயக்குமாரைக் கைது செய்தவற்காக ஒட்டுமொத்தமாக இடிந்தகரை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது தமிழக அரசு. அந்தக் கிராமம் முழுமைக்கும் பால் விநியோகம், மின்சாரம், குடிநீர் விநியோகம் ஆகியவற்றை துண்டித்துள்ளனர். மேலும் செல்போன் டவர்களையும் செயலிழக்க வைத்துள்ளனர்.
இதனால் தமிழகத்தின் இதர பகுதிகளிலிருந்து இடிந்தகரை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களையும் பெரும் அவதிக்குள்ளாக்கியுள்ள அரசின் செயல் மனிதநேயமற்றது என்ற கடும் கண்டனம் கிளம்பியுள்ளது.
உண்மைகள் வெளியுலகுக்குத் தெரிந்து விடாமல் தடுப்பதற்காக பத்திரிக்கையாளர்களையும் இடிந்தகரைக்கு செல்ல விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை திறக்க தமிழக அரசு முடிவு செய்ததை தொடர்ந்து அங்கு வரலாறு காணாத போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது. போராட்ட குழுவை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். அரசின் முடிவை கண்டித்து இடிந்தகரையில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரும் உறுப்பினர் புஷ்பராயனும் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினர். இதனால் கூடங்குளம் மற்றும் கடலோர கிராமங்களில் மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.

இடிந்தகரைக்கு வரும் அனைத்து வழிகளிலும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சரண் அடைய வேண்டும் என போலீஸ் அதிகாரிகள் விடுத்த வேண்டுகோளை உதயகுமார் நிராகரித்து விட்டார். எங்களை மட்டும் கைது செய்யாதீர்கள். எங்களுடன் இருக்கும் 5000 மக்களையும் கைது செய்யுங்கள், நாங்கள் சிறைக்கு வரத் தயார் என்று அவர் கூறி விட்டார். இதனால் போலீஸார் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

உதயக்குமாரை போலீஸார் பிடித்துச் சென்று விடாமல் தடுக்க இடிந்தகரைக்கு வரும் அனைத்து சாலைகளிலும் தடுப்பை ஏற்படுத்தியுள்ளனர் கிராம மக்கள். மேலும் விடிய விடிய தூங்காமல் உதயக்குமாருக்கு அரண் போல உள்ளனர்.

இந்தநிலையில் இன்றுகாலை முதல் மின்விநியோகம், குடிநீர் விநியோகம், பால் விநியோகம் ஆகியவற்றை அதிகாரிகள் துண்டித்துள்ளனர். செல்போன் டவர்களும் செயல் இழந்துள்ளன. இதனால் இடிந்தகரை, நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏதோ போர் நடக்கும் பூமி போல அந்தப் பகுதியை போலீஸார் சுற்றி வளைத்து துப்பாக்கி சகிதம் காத்துள்ளனர்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் போராட்டம் நடத்திய தேனி மாவட்ட மக்களை தடியடி நடத்தி்க கலைத்து விரட்டியது போல செய்ய முடியாது என்பதாலும், இங்கு போராட்டத்தில் குதித்துள்ளவர்கள் மிகத் தீவிரமாக இருப்பதாலும் என்ன செய்வது என்று காவல்துறை எஸ்.பிக்களுடன், கூடுதல் டிஜிபி ஜார்ஜ், தென் மண்டல ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இதில் உதயக்குமாருக்கு கடைசிக் கெடு விதித்து எச்சரிப்பது அதற்கு அவர் பணியாவிட்டால் அதிரடியாகப் புகுந்து கைது செய்வது என்ற முடிவுக்கு காவல்துறை வந்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்று காலை முதல் கலவரத் தடுப்புப் போலீஸார், இடிந்தகரை அருகே முற்றுகையிட்டுள்ளனர்.

வரலாறு காணாத வகையில் போலீஸார் துப்பாக்கிகள், நவீன ஆயுதங்கள், கலவரத் தடுப்பு வாகனங்களுடன் முற்றுகையிட்டுள்ளதாலும், பொருளாதாரத் தடை நடவடிக்கையைப் போல பால், குடிநீர், மின்சாரம் ஆகிய அத்தியாவசியப் பணிகளை நிறுத்தியுள்ளதாலும் இடிந்தகரை மக்கள் பெரும் கொந்தளிப்புடன் உள்ளனர்.

இன்று இரவுக்குள் உதயக்குமார் கைதுப் படலம் அரங்கேறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக