ஞாயிறு, 18 மார்ச், 2012

தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் சர்வேயில் வெட்ட வெளிச்சம்

திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.
17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.

சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.

கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.

கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.

- நமது சிறப்பு நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக