புதன், 21 மார்ச், 2012

ஓரினச் சேர்க்கையாளர்கள் விவகாரம் :மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி :ஓரினச் சேர்க்கை குறித்த விஷயத்தை, மத்திய அரசு, மிக சாதாரணமாக கையாள்கிறது. இது கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கை தொடர்பான வழக்கு விசாரணை, நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபத்யாயா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் தெரிவித்த கருத்து:ஓரினச் சேர்க்கை குறித்த விஷயத்தை, மத்திய அரசு மிக சாதாரணமாக கையாள்கிறது. மத்திய அரசின் இதுபோன்ற நடவடிக்கை, கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. எங்களின் தீர்ப்பில் இது குறித்து, தெரிவிக்கப் போகிறோம். இந்த விஷயத்தில் அரசு ஏதாவது ஒரு கருத்தைத் தெரிவிக்காமல், நடுநிலையாக இருக்கும் விதமாக, மாறுபட்ட கருத்துக்களை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. ஓரினச் சேர்க்கை இயற்கைக்கு எதிரானது என்றும், ஓரினச் சேர்க்கை குற்றமில்லை என்றும், முரண்பட்ட கருத்துக்களை அரசு தெரிவிக்கிறது.
கடந்த 60 ஆண்டுகளாக, அரசு சார்பில், சட்டப் பிரிவு 377ல் திருத்தம் எதுவும், பார்லிமென்ட்டில் கொண்டுவரப்படாதது வருத்தம் அளிக்கிறது. சட்டக் கமிஷன் இது குறித்து பரிந்துரை அளித்தும், அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதற்காக, மக்கள் எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும்?இவ்வாறு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.முன்னதாக, எய்ட்சால் பாதிக்கப்பட்டோரின்
மறுவாழ்வுக்காக சேவை செய்யும் தன்னார்வ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில்,"வயதுக்கு வந்த இருவர், தங்களுக்குள் பரஸ்பர சம்மதத்துடன் ஈடுபடும் நடவடிக்கைகளில், சட்டம் தலையிடக் கூடாது'என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக