வியாழன், 15 மார்ச், 2012

உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ சசிகலாவுக்கும் புதிய சிக்கல்

ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்களில் ஒருவராக இருந்தவர் என்று சொல்லப்பட்டவர் வெற்றிவேல். இவர் கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே ராவணன் மீது ஒரு புகார் கொடுத்தார். அந்த வழக்கு இப்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் இருக்கிறது. இதுகுறித்து, 20.2.2008 தேதியிட்ட ஜூ.வி. இதழில், 'கோடிகளுக்காக என்னைக் கடத்தினார்கள்! உயிர் பயத்தில் ஜெ. ஜோதிடர்!’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம். அந்தப் புகார் என்ன ஆனது என்றே தெரியாத நிலையில், இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளார் வெற்றிவேல்.
''எனது புகார் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்'' என்று தனது வழக்கறிஞர் குமாரதேவனுடன் கடந்த 12-ம் தேதி வந்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் வெற்றிவேல் மனு கொடுத்துள்ளார்.
வெற்றிவேலை சந்தித்துப் பேசினோம். ''எனக்கு சொந்த ஊர் திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி. 98-ம் வருஷம் பெரியம்மாகிட்ட (ஜெயலலிதா) அறிமுகம் ஆனேன். பெரியம்மா அப்போது வழக்கு விவகாரங்களுக்காக அலைஞ்சுட்டு இருந்த நேரம். நான் அவரோட அரசியல் எதிர்காலம், வழக்குகளின் நிலை சம்பந்தமாகத் தெளிவா கணிச்சுச் சொன்னேன். அதனால, அவங்களோட நம்பிக்கைக்கு உரிய ஆஸ்தான ஜோதிடர்களில் நான் முன்னணியில் இருந்தேன். பெரியம்மா, சின்னம்மா (சசிகலா) மற்றும் அவரோட குடும்பத்தினர் அத்தனை பேருக்கும் நான்தான் ஜோதிடம் பார்த்தேன். 2004-ம் வருஷம், சின்னம்மா என்கிட்ட, 'பெரியம்மாவுக்கு அடுத்து அ.தி.மு.க-வில் முதல்வர் ஆகும் யோகம் யாருக்கு இருக்கு?’னு கணிச்சுத் தரச் சொன்னாங்க. அதுக்காக அவங்க குடும்பத்துல இருக்கிற அத்தனை பேர் ஜாதகமும் கொடுத்தாங்க.

அத்தனை பேர் ஜாதகத்தையும் பார்த்த நான், 'உங்க குடும்பத்துல ஒருத்தருக்குக்கூட கட்சியில் பொதுச்செயலாளர் ஆகும் யோகமோ, தமிழகத்தின் முதல்வர் ஆகும் யோகமோ கிடையாது. இது மாற்ற முடியாத உண்மை’னு கணிச்சு சொன்னேன். இந்த விஷயத்தை நான் பெரியம்மாகிட்டேயும் அப்படி​யே சொல்லிட்டேன். இதுதான் கார்டனுக்கும் எனக்கும் விரிசல் விழக் காரணமான சம்பவம். அன்றுமுதல், சின்னம்மா என்னை எதிரியா நினைச்சிட்டார். உண்மையைச் சொல்லப்போனால், சின்னம்மாவை என் அம்மா மாதிரி நினைச்சு இருந்தேன். எங்க அம்மா இறந்தப்​பகூட நான் அழுதது இல்லை. ஆனா, சின்னம்மா கஷ்டப்பட்டப்ப எல்லாம் அழுதேன். கிராமத்துல செம்மறி ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்த என்னை கார்டனுக்குக் கூட்டிவந்து பெரிய ஆள் ஆக்கினதே சின்னம்மாதான். ஆனா, அவங்களே எனக்கு எதிரியா மாறிட்டாங்க.

அப்ப இருந்து என்னை விரட்ட ஆரம்பிச்சவங்க... இப்ப வரைக்கும் விடாம விரட்டிக்கிட்டு இருக்காங்க. உண்மையில் நான் சாதாரண ஆளுங்க. கார்டன்ல ஜோதிடத்தைத் தாண்டி எதையும் எப்பவும் பேசியது இல்லை. அரசியல்னா என்னன்னு எனக்கு எதுவுமே தெரியாது. நான் சொன்ன ஜோதிடக் கணிப்புகளை வைச்சு, சின்னம்மாவும் ராவணனும் என்னை அவங்களுக்குப் போட்டியா, எதிரியா நினைச்சுப் பழிவாங்க ஆரம்பிச்சிட்டாங்க.

2007-ம் வருஷம் ராவணன் என்கிட்ட என் சொத்து விவரங்களை கேட்டு, ஈரோட்டில் இருந்து கோவைக்கு கார்லயும் கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்துலயும் கடத்​திட்டுப் போனார். அங்கே தகாத வார்த் தைகளில் பேசி வெற்றுப் பேப்பர் களிலும் பத்திரங்களிலும் கையெழுத்து வாங்கினார். அதுதொடர்பா தேனாம்பேட்டை போலீஸில் புகார் கொடுத்து, பிறகு அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஆனால், கடந்த தி.மு.க. ஆட்சியிலேயே அளவுக்கு அதிகமான செல்வாக்குடன் இருந்தார் ராவணன். அதனால், அந்த வழக்கில் ஒரு துரும்பைக்கூட போலீஸார் கிள்ளிப் போடலை.

கடந்த தி.மு.க. ஆட்சியில் ராவணன் எனக்குக் கொடுத்த துன்பங்களுக்கு அளவே இல்லை. 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி என் அம்மாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளுக்காக வீட்டில் ஹோமம் வளர்த்துட்டு இருந்தேன். அப்போது ராவணனுக்கு நெருக்கமான வருமானவரித்துறை அதிகாரியை வைச்சு என் வீட்டில் ரெய்டு நடத்தினார். அதே வருஷம் திருப்பூர் செங்கப்பள்ளியில் ஒரு சொத்தை வாங்க, 1 கோடியே 1 லட்சம் ரூபாய் முன் பணத்தை செங்கப்பள்ளி தி.மு.க. ஒன்றியச் செயலாளராக இருந்த ராவணனின் நண்பர் சண்முகத்திடம் கொடுத்து, அவரது மனைவி ஈஸ்வரி பெயரில் ஒப்பந்தம் போட்டேன்.

ராவணன்கூட பிரச்னை ஏற்பட்ட பிறகு, அந்த இடத்தை அவங்க தரலை. கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டா, 'ராவணன்கிட்ட போய் வாங்கிக்​கோ’னு மிரட்டுறாங்க. இதுசம்பந்தமா, கடந்த தி.மு.க. ஆட்சியில் முக்கியமான நான்கு அமைச்சர்களை நேரில் சந்தித்து உதவி செய்யும்​படி கேட்டேன். ஆனா, அமைச்சர்கிட்ட போன ரெண்டு மணி நேரத்துல எனக்கு போன் வரும். 'அமைச்சர்கிட்ட போனா உன் பணம் கிடைச் சிடுமா? டேய், நீ எங்க போனாலும் என்னை ஒண்ணும் செய்ய முடி யாது’னு ராவணனும் அவரோட ஆட்களும் மிரட்டுவாங்க.

சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் எனக்கு இடம் இருந்துச்சு. 2009-ம் வருஷம் அந்த இடத்தை வைச்சு, ஒரு தேசிய வங்கியில் 35 லட்சம் ரூபாய் கடன் வாங்கினேன். அந்தக் கடனைக் கட்ட முடியாம வட்டியோடு சேர்த்து 65 லட்சம் ரூபாய் பாக்கி இருந்தது. ஆனா, எனக்கு எந்தத் தகவலும் தெரிவிக்​காமல் சுமார் மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள அந்தச் சொத்தை, ஒரு கோடி ரூபாய்க்கு வங்கி ஏலம் விட்டுருச்சு. இது எப்படி சாத்தியம்? முதல் தவறு எனக்குத் தகவல் தெரிவிக்காமல் ஏலம்விட்டது. அடுத்தது, மூணு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை ஒரு கோடிக்கு விற்று வங்கிக்கு நஷ்டம் ஏற்படுத்தியது. எனக்குத் தகவல் தெரிவிச்சதுக்கு ஆதாரம், அந்த சொத்தை யாருக்கு வித்தாங்க? அந்த ஏலத்தில் யார் எல்லாம் கலந்துக்கிட்டாங்க?ன்னு பல கேள்விகளைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மனு போட்டேன். இப்ப வரை சரியான தகவல் கொடுக்கலை. இதன் பின்னணியிலும் ராவணன்தான் இருக்கார்.

இதுமாதிரி ஒண்ணு, ரெண்டு இல்லை. இப்படி சுமார் எட்டு கோடி ரூபாய் அளவுக்கு என் பணம், சொத்துகளை ராவணன் மோசடி செய்து இருக்கார். 2007-ம் ஆண்டு என்னைக் கடத்திட்டுப் போன சம்பவத்துக்குப் பிறகு ராவணனுக்குப் பயந்து, டெல்லிக்குப் போய் செட்டில் ஆகிட்டேன். அங்கேயும் ராவணன் என்னை விடலை. டெல்லியில் ஒரு அ.தி.மு.க. வக்கீல் என் மீது பொய்ப் புகார் கொடுத்து, ஒரு உதவி கமிஷனர்கிட்டேயே, 'சார், இது தமிழ்நாடு டெபுடி சி.எம். ராவணனின் ஆர்டர். உடனே அரெஸ்ட் பண்ணுங்க’னு டார்ச்சர் பண்ணினார். நான் அந்த போலீஸ் அதிகாரிகிட்ட, 'தமிழ்நாட்டுல டெபுடி சி.எம்-னு போஸ்ட்டிங்கே இல்லை’ன்னு ஆதாரபூர்வமாப் புரிய வைச்சுத்தான் தப்பிச்சேன்.

இப்ப ராவணன் மீது படிப்படியா நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னாலதான், சென்னை வந்து இருக்கேன். ஜோதிடர்களைக் கடவுளின் தூதர்கள்னு சொல்லுவாங்க. நான் கடவுள்கிட்ட கேட்டு, அங்க இருந்து எனக்கு என்ன தகவல் கிடைச்சதோ, அதைத்தான் ஜோதிடக் கணிப்புகளாகச் சொல்லிட்டு இருக்கேன். 2011-ம் வருஷத்துக்குப் பிறகு ராவணன் அரசியல்ல இருக்க மாட்டார். அவரோட அழிவுகாலம் தொடங்கிடும்னு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்சிக்காரங்க, என் நண்பர்கள், ராவணன் நண்பர்கள்னு சுமார் 100 பேர்கிட்ட சொல்லி இருக்கேன். இப்பவும் சொல்றேன். ராவணனுக்கு அழிவு நிச்சயம். இத்தனை நாள் அவர் மீது கொடுக்கப் பட்ட புகார்களைவிட, ஆணித்தரமான ஆதாரங்கள் கொண்ட புகார்கள் நிறைய என்கிட்ட இருக்கு. ஒவ்வொரு புகாரா போலீஸில் கொடுத்து, ராவணன் அழியறதை என் கண்ணால பார்க்கப்போறேன். இது என் ஆசை எல்லாம் கிடையாது. இதுதான் ராவணனின் ஜாதகம்!'' - ஆவேசமாக முடிக்கிறார் ஜோதிடர் வெற்றிவேல்!

வெற்றிவேல் பணம் கொடுத்ததாகக் கூறும் செங்கப்பள்ளியை சேர்ந்த தி.மு.க. பிரமுகர் சண்முகத்திடம் பேசினோம். ''வெற்றிவேலிடம் சொத்தை விற்க முன் பணம் வாங்கியது உண்மைதான். ஆனால், அதன் பிறகு சொத்தைக் கிரையம் செய்ய பலமுறை அழைத்தும் அவர் வரவில்லை. அவர் மீதான வருமான வரித்துறை நடவடிக்கைக்குப் பிறகு, அவர் வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய பாக்கித் தொகைக்காக இந்த நிலத்தையும் பணத்தையும் வழக்கில் சேர்த்து விட்டார்கள். ராவணன் என் நண்பர் இல்லை. அவரை நான் பார்த்ததுகூட கிடையாது...'' என்றார்.

ராவணன் மீதான பிடி இறுகுவதற்கு வெற்றிவேல் புகார் கூடுதல் வலையாக மாறிக்கொண்டு இருக்கிறது!

- டி.எல்.சஞ்சீவிகுமார், படம்: என்.விவேக்
thanks vikatan+ sethupathy ohio

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக