திங்கள், 26 மார்ச், 2012

இனி அத்தனையும் இலவசம்!1-10 வரை மாணவர்களுக்கு செருப்பு முதல் பென்சில் வரை


Students
சென்னை: 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியருக்கு அத்தனையும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:
12-ம் வகுப்பு படிப்பவர்களுக்கு 2,000 ரூபாய் அரசு நிதி நிறுவனத்தில் வைப்பீடு செய்யப்பட்டு அவர்கள் பள்ளிப்படிப்பை முடித்தபின் வட்டியுடன் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 313.13 கோடி ரூபாய் மாணவர்கள் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.


வரும் நிதியாண்டில் 21.36 லட்சம் மாணவ- மாணவிகள் பயனடையும் வகையில் இத்திட்டத்திற்கு இந்த வரவு- செலவுத் திட்டத்தில் 366.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டவாறு இந்த அரசு 2012-2013ம் ஆண்டிலிருந்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலை ஏதுமின்றி நான்கு ஜோடி சீருடைகளை வழங்கும்.மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டவாறு 6-ம் வகுப்பில் இருந்து பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும், பெண்களுக்கு சல்வார் கமீசும் வழங்கப்படும். 48.63 லட்சம் குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்குவதற்காக இந்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீடுகளில் 329.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல், 1-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து பள்ளிக் குழந்தைகளுக்கும் விலையில்லாக் காலணிகள் வழங்கும் திட்டத்தையும், 2012-2013-ம் ஆண்டிலிருந்து இந்த அரசு தொடங்கி செயல்படுத்தும். இத்திட்டத்திற்காக இந்த வரவு - செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் 81 லட்சம் குழந்தைகள் பயன் அடைவார்கள்.

1-ம் வகுப்பில் இருந்து 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு புத்தகப்பைகளும், 6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு ஜியாமெட்ரி பெட்டிகளும், ஒன்றாம் வகுப்பில் இருந்து 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வண்ணப் பென்சில்களும், 6-ம் வகுப்பில் இருந்து 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு உலக வரை படம் புத்தகமும் வழங்கப்படும்.

இதற்காக இந்த வரவு- செலவு திட்டத்தில் 136.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கம் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட அத்தனைப் பொருள்களும் விலையில்லாமல் மாணவர்களுக்கு வழங்கிய பிறகு, மாணவர் தேவைக்கு எஞ்சியிருப்பது நோட்டுப் புத்தகம் மட்டுமே. எனவே, நோட்டு புத்தகங்களையும் விலையில்லாமல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கென 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்தில் பிற துறைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையைவிட அதிகமாக, எப்போதும் வழங்கப்படாத உயர் அளவாக, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த 2012-2013ம் ஆண்டு வரவு- செலவு திட்டத்தில் 14, 552.82 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளோம் என்றார் அவர்.

இதன் மூலம் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை மாணவர்கள் முற்றிலும் இலவசமாக படிப்பு தொடர்பான பொருட்களைப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக