வியாழன், 23 பிப்ரவரி, 2012

SRM மாஜி மாணவன்!கொள்ளைக் கும்பல் தலைவனான

சென்னை வங்கிக் கொள்ளைகளுக்கு மூல காரணமாக, தலைவனாக செயல்பட்டு தற்போது போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானவன், சென்னை காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்த வினோத்குமார் என்பது தெரிய வந்துள்ளது.
வினோத்குமார் குறித்த தகவல் போலீஸாருக்கு தற்செயலாகத்தான் கிடைத்தது. கொள்ளை நடந்த இரு வங்கிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. இதனால் துப்பு துலங்குவது பெரும் சிக்கலாக இருந்தது. இந்த நேரத்தில்தான் போலீஸாருக்கு இன்னொரு யோசனை தோன்றியது. இரு வங்கிகளிலும் ஒரே மாதிரியாக கொள்ளை நடந்திருப்பதால் நிச்சயம் நோட்டம் பார்த்துதான் இந்தக் கொள்ளையில் திருடர்கள் இறங்கியிருப்பார்கள் என்று அவர்கள் நினைத்தனர்.
இதனால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட புறநகர்ப் பகுதி வங்கிகளை அணுகி அங்குள்ள கேமராக்களில் பதிவானதைப் பார்த்தனர். பின்னர் அந்தக் காட்சிளை சம்பந்தப்பட்ட இரு வங்கிகளின் ஊழியர்களிடமும் காட்டினர். அதில் யாரையாவது அடையாளம் தெரிகிறதா என்று கேட்டபோது ஒரு நபரை வங்கி ஊழியர்கள் சுட்டிக் காட்டினர். இவன்தான் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலுக்குத் தலைவன் போல வந்து துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்று அத்தனை ஊழியர்களும் ஒட்டுமொத்தமாக கூறினர்.

இதையடுத்து போலீஸாருக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டது. கொள்ளைக் கும்பலின் தலைவனாக இவன் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு வந்த போலீஸார் அவன் குறித்த தகவலை சேகரித்தபோது அவனது பெயர் வினோத்குமார் என்றும், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பொறியியல் படிப்பை முடித்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து கல்லூரிக்கு ஒரு தனிப்படை விரைந்து வந்தது. வினோத்குமார், 9 ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் சேரும்போது கொடுத்த புகைப்படத்தைப் பெற்று, அதை வீடியோ கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்துடன் ஒப்பிட்டபோது இருவரும் ஒருவரே என்பது தெரிய வந்தது.
  Read:  In English 
இதையடுத்து இவன்தான் அவன் என்பது உறுதியானது. வினோத்குமார் படிப்பை முடித்ததும் தனது சொந்த ஊருக்குப் போகவில்லை. மாறாக சென்னையிலேயே தங்கியிருந்துள்ளான். கல்லூரிக்குப் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளான். அதாவது தங்களது மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களை இந்தக் கல்லூரியில் சேர்த்து விட்டால் அதற்கு புரோக்கர் கமிஷனாக கல்லூரி நிர்வாகம் இவனுக்கு கணிசமாக பணம் கொடுக்குமாம். இந்த வேலையை இவன் செய்து வந்துள்ளான்.

இந்த நிலையில்தான் அவன் தனது மாநிலத்தைச் சேர்ந்த சிலரை இங்கு வரவழைத்து வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளான் என்பது தெரிய வந்துள்ளது.

கல்லூரிக்கு புரோக்கர் வேலை பார்த்ததன் மூலம் மிகப் பெரிய அளவில் பணம் கிடைத்ததால் இங்கேயே தங்கி வேறு வேலை பார்க்காமல் புரோக்கராகவே மாறிப் போயிருந்தான். தற்போது வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டு போலீஸாரின் புல்லட்டுகளுக்கு இரையாகி விட்டான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக