வியாழன், 23 பிப்ரவரி, 2012

மாணவர்களை புரோக்கர்களாக்கும் கல்லூரிகளால்தான் குற்றங்கள் பெருகின்றது

சென்னையில் உள்ள பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்த்து விடுவோருக்கு கணிசமான தொகை புரோக்கர் கமிஷனாக தரப்படுவதால் சென்னை நகரில் வட மாநில மாணவர்களால் பல குற்றச் செயல்கள் நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு புரோக்கர் மாணவர்தான் இன்று இரு வங்கிகளில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டு கடைசியில் போலீஸாரின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு இரையாகியுள்ளான்.
தமிழகத்தில் கல்வி வியாபாரமாகி விட்டது என்று உரத்த குரல்கள் தொடர்ந்து கேட்டவண்ணம் உள்ளன. இருந்தாலும் இதுகுறித்து யாரும் அலட்டிக் கொள்வதாகவே தெரியவில்லை. ஆனால் இந்த வியாபாரம் இன்று கடும் போட்டியும், குற்றச் செயல்களும் நிறைந்ததாக மாறி தமிழக கல்வித்துறைக்குப் பெரும் சாபக்கேடாக மாறி நிற்கிறது.
தமிழகத்திலேயே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில்தான் ஏராளமான தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இந்தப் பொறியியல் கல்லூரிகளில் தமிழக மாணவர்களை விட வெளி மாநில மாணவர்கள்தான் அதிகம் படிக்கின்றனர். குறிப்பாக சமீப காலமாக வட மாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.

லட்சம் லட்சமாக பணம் கொடுத்து கல்லூரிகளில் இவர்கள் சேருகிறார்கள். பெரும் பணம் கொடுத்து கல்லூரிகளில் சேரும் இவர்கள், தங்களது கல்லூரிகளில் படிக்கும் தமிழக மாணவர்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபடுவதும், மிரட்டுவதும், தாக்குவதும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக பல வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. பெரும் கலவரமே ஏற்பட்ட சம்பவங்களும் கூட உண்டு.

இந்த வட மாநில மாணவர்கள் பெரும்பாலும் விடுதிகளில் தங்குவது கிடையாது. மாறாக, நான்கைந்து பேராக சேர்ந்து வீடு பிடித்து தங்கிக் கொள்கிறார்கள். இல்லாத சேட்டைகளையெல்லாம் இவர்கள் செய்கிறார்கள். சின்னச் சின்ன குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு, கொலை வரைக்கும் கூட இவர்கள் போயுள்ளனர்.

இவர்கள் இப்படி தலைவிரித்தாடுவதற்குக் காரணமே தனியார் பொறியியல் கல்லூரிகளின் பணத்தாசைதான்.தங்களது கல்லூரிகளில் படிக்கும் வெளி மாநில மாணவர்களிடம், குறிப்பாக வட மாநில மாணவர்களிடம், உங்களது மாநிலத்து மாணவர்களைச் சேர்த்து விட்டால் குறிப்பிட்ட தொகையை கமிஷனாக தருவதாக அவர்கள் கூறுகின்றனர். இதனால் படிக்கும் காலத்திலேயே இவர்கள் புரோக்கர்களாக மாற்றப்படுகிறார்கள். நல்ல பணம் கிடைப்பதால் அவர்களும் தங்களது மாநிலத்திலிருந்து பலரை கல்லூரியில் சேர்த்து விடுகிறார்கள்.

படிப்பை முடித்த பிறகும் கூட பலர் இதுபோல புரோக்கர்களாக செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட ஒருவன்தான் சென்னையில் இன்று சுட்டுக் கொல்லப்பட்ட வினோத்குமார். எஸ்.ஆர்.எம். கல்லூரிக்கு இவன் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளான். தனது மாநிலத்தைச் சேர்ந்த பலரையும் இவன் கல்லூரியில் சேர்த்து விட்டு கமிஷன் வாங்கி வந்துள்ளான்.

இப்படி மாணவர்களை சேர்த்து விடுவதில் மாணவர்களுக்குள் பலமுறை மோதல்கள் மூண்டதுண்டு. சில வருடங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த பிரபலமான தனியார் பொறியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வட மாநில மாணவர்களிடையே பெரும் மோதல் வெடித்தது. இதற்கு புரோக்கர் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம். இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.

அதேபோல ஒரு சம்பவத்தில் புரோக்கர் கமிஷன் பெறுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு வட மாநில மாணவரை, இன்னொரு வட மாநில மாணவர் கும்பல் கடத்திச் சென்ற சம்பவமும் நடந்தது. அந்த மாணவரை போலீஸார் சென்னை அருகே மீட்டனர்.

இப்படி தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடத்தி வரும் புரோக்கர் விளையாட்டால் மாணவர்களின் கல்வித்தரம் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, குற்றச் செயல்களிலும் அவர்கள் ஈடுபட காரணமாகி வருகிறது.

தமிழக அரசு இதில் கடுமையாக நடந்து கொண்டு இதுபோல புரோக்கர்களை வைத்து மாணவர்களை சேர்க்கும் கொடிய பழக்கத்திற்கு முடிவு கட்டினால்தான், குறிப்பாக வட மாநில மாணவர்களைக் கட்டுப்படுத்தினால்தான் கொள்ளை, கொலை, ஆள் கடத்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு முடிவு கட்ட முடியும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக