சனி, 18 பிப்ரவரி, 2012

தலிபானை உடனடியாகக் கொண்டு வா Karzai பாகிஸ்தானிடம் ஆவேசம்

இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, பாகிஸ்தான் தனது நாட்டில் பதுங்கியுள்ள தலிபானையும் கொண்டு வர வேண்டும் என, ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆவேசமாக பாக்., தரப்பிடம் தெரிவித்ததாகவும், அவரது ஆவேசம் கண்டு, பாக்., தரப்பு அதிர்ந்து போய் இருப்பதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கனில், தலிபானுக்கு எதிரான அமெரிக்கக் கூட்டு நாடுகளின் போர், பெரிய அளவில் பலனைத் தராத நிலையில், தலிபானுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது தான் சிறந்தது என, ஆப்கன், அமெரிக்க நாடுகள் முடிவெடுத்துள்ளன. இதற்கு, பாக்., ஒத்துழைப்பும் அவசியம் என, அவை கூறி வருகின்றன. ஆப்கனின் முன்னேற்றம் குறித்து, நேற்று முன்தினம், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஆப்கன், பாக்., மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் முத்தரப்பு சந்திப்பு துவங்கியது.

இதில், முதல் நாள் பேசிய ஆப்கன் அதிபர் ஹமீத் கர்சாய், ஆப்கன், தலிபான் மற்றும் அமெரிக்கா இடையே, முறையான தகவல் தொடர்பு பேணப்பட்டு வருவதாகவும், பேச்சுவார்த்தைக்கு வர தலிபான் விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு, தலிபான் தரப்பு, நேற்று மறுப்பு தெரிவித்தது. அதே நேரம், பேச்சு நடப்பதாக ஆப்கன் ஒப்புக் கொண்டிருப்பதை, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் லியோன் பனெட்டா வரவேற்றுள்ளார்.

ஆப்கனுக்குப் பதிலாக, அமெரிக்கா தலிபானுடன் பேச்சு நடத்த முடியாது என்பதையும், கர்சாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கர்சாய், பாக்., வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர் ஆகிய இருவரின் தலைமையிலான உயர்மட்டக் குழுக்களிடையே, நேற்று பேச்சு நடந்தது. தலிபான் தலைவர் முல்லா முகமது ஒமர் உள்ளிட்ட, தலிபான் முக்கிய நபர்கள், பாகிஸ்தானில் ஒளிந்திருப்பதாக, ஆப்கன் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், பாக்., அதை மறுத்து வருகிறது.

இதைச் சுட்டிக் காட்டிப் பேசிய கர்சாய், "பாகிஸ்தானில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண் குழந்தைகளைப் படிக்க விடாமல், நீங்கள் தடுப்பீர்களா? பாகிஸ்தானில் உள்ள தலிபான் அமைப்பினரை, பேச்சில் கலந்து கொள்ள வைக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்' என, கடும் கோபத்துடன் பேசினார்.

அவரது ஆவேசம் கண்டு, பாக்., தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்தது. இதுகுறித்து, பின்னர், கர் அளித்த பேட்டியில், "உங்களுக்கு (ஆப்கன்) என்ன தேவையோ, அதற்கான விளக்கத்தைப் பெறலாம் எனக் கூறினோம். நல்லிணக்க வாழ்விற்குத் தடையாக, பாக்., இருக்காது. இந்தப் பேச்சு, சற்றே காரசாரமாகவும் தீவிரமாகவும் இருந்தது. பேச்சில் கலந்து கொள்ள வைக்க, எங்களிடம் முல்லா ஒமர் இல்லை. அவர், பாக்.,ல் இருப்பதாகக் கூறப்படுவது கேலிக் கூத்தானது' என்றார்.

இதற்கிடையில், பாக்., ஈரான் இடையிலான உறவுகள், சர்வதேச நெருக்கடிகளால் பாதிக்கப்படாது என, பாக்., அதிபர் சர்தாரி நேற்று உறுதியாகத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக