வியாழன், 16 பிப்ரவரி, 2012

Free Condom சொந்த செலவில் "காண்டம்' பெட்டி அமைக்கும் எச்.ஐ.வி., பாதித்த வாலிபர்

காரைக்குடி:தன்னைப் போன்று, பிறரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்படக் கூடாது எனக்கருதி, காரைக்குடியைச் சேர்ந்த 36 வயது இளைஞர் "காண்டம்' பாக்கெட்கள் உள்ளடக்கிய பெட்டிகளை தன் சொந்த செலவில் பொது இடங்களில் அமைத்துள்ளார்.
கட்டட பணி செய்து வரும் இவருக்கு, 2000ல் திருமணம் நடந்தது. இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், பல பெண்களுடன் தகாத உறவு வைத்துக் கொண்டதால், 2008ம் ஆண்டு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்தார். எச்.ஐ.வி., பாதித்திருப்பது தெரியவந்தது. இந்த விபரம் மனைவிக்கு தெரியவர அவர் விவாகரத்து பெற்று பிள்ளைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.மனைவி, பிள்ளைகளை இழந்த சோகத்துடன் கடந்த சில ஆண்டுகளாக தனிமையில் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளை செய்து வருகிறார்.

தன்னைப்போன்று யாரும் எச்.ஐ.வி.,யால் பாதிக்கக்கூடாது என எண்ணி சொந்த செலவில் பெட்டி வாங்கி அதில் தொண்டு நிறுவனம் மூலம் பெறப்பட்ட"காண்டம்' பாக்கெட்களை போட்டுள்ளார். அப்பெட்டியில், சுய பாதுகாப்பு... சுய கட்டுப்பாடு இருந்தால் மட்டுமே "எய்ட்ஸ்' நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என, வாசகம் எழுதி வைத்துள்ளார். காரைக்குடி புதிய, பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் இப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

அவர் கூறுகையில், "" அர்ப்ப ஆசையால் அழகான குடும்பத்தை பறி கொடுத்தேன். என்னால், முடிந்த உதவியை இச்சமுதாயத்திற்கு செய்ய வேண்டும் என கருதி நான்கு இடங்களில் "காண்டம்' பாக்கெட் அடங்கிய பெட்டிகளை சொந்த செலவில் அமைத்துள்ளேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக