செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

காஞ்சி சங்கராச்சாரி மீதான கொலை வழக்கை விசாரித்த நீதிபதி 'டிரான்ஸ்பர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், இளையவர் விஜயேந்திரர், அப்பு, சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யர் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
ஜெயேந்திரரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் இருந்து புதுச்சேரி செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றபட்டது. வழக்கின் சாட்சி விசாரணை நடைபெற்று வருகிறது. இந் நிலையில் அதிமுக ஆட்சிக்கு வந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதி ராமசாமியுடன் ஜெயேந்திரர் பேரம் பேசுவது போன்ற தொலைபேசி உரையாடல் கொண்ட சிடி வெளியானது.
அதில் நீதிபதிக்கு ஜெயேந்திரர் பணம் கொடுப்பது குறித்து பேசுவதாக தகவல் இருந்தது.

இதையடுத்து நீதிபதி ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சுந்தர்ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மேலும் சங்கரராமனின் மனைவி பத்மா, மருமகன் கண்ணன் ஆகியோரும் இது தொடர்பாக தாக்கல் செய்த மனுவில், நீதிபதி ராமசாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், சங்கரராமன் கொலை வழக்கில் சாட்சிகளுக்கும் பணம் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதனால் மறு விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரினர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, புதுச்சேரி நீதிமன்றத்தில் நடக்கும் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தார். மேலும் அந்த சி.டி. உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பு குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர் இந்த வழக்கு, நீதிபதிகள் கே.என்.பாஷா, என்.பால்வசந்தன் ஆகியோர் கொண்ட சென்னை உயர் நீதிமன்ற பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களான பத்மா, கண்ணன் ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிகண்டன், இந்த விவகாரத்தில் புதுச்சேரி நீதிபதி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டுமென்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் புகார் கொடுத்தேன். எப்.ஐ.ஆர். பதிவு செய்வதற்கு தலைமை நீதிபதி உத்தரவிடுவதற்கு அதிகாரம் அளித்து சுப்ரீம் கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் அந்த அதிகாரத்தை தலைமை நீதிபதி பயன்படுத்தவில்லை.

எனவே நீதிபதி ராமசாமி மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து, அவர் மீது சிறப்பு விசாரணை அமைக்க வேண்டும். அவர் நடத்திய சாட்சி விசாரணை முழுமையையும் ரத்து செய்து மறுபடி சாட்சி விசாரணை நடத்த வேண்டும்.

நீதிபதி ராமசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி உத்தரவிடவேண்டும். சிறப்பு புலனாய்வு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.

இதையடுத்து உயர் நீதிமன்ற பதிவகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்து வாதாடிய வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கூறுகையில், நீதித்துறை ஊழியர் மீது லஞ்ச ஒழிப்பு வழக்கு பதிவு செய்ய முடியாது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். சங்கரராமன் கொலை வழக்கை விசாரித்த புதுச்சேரி நீதிபதி ராமசாமி பெரம்பலூர் மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்ட நீதிபதி முருகன் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான மாற்றல் உத்தரவு இரு மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி அரசின் கருத்து பெறப்பட வேண்டும். புதுச்சேரி அரசின் கருத்து பெறப்பட்டதும் விரைவில் பணியிட மாற்றத்துக்கான அரசாணை வெளியிடப்படும் என்றார்.

இதைத் தொடர்ந்து, நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக