திங்கள், 27 பிப்ரவரி, 2012

அழகிரி நெசமாகவே ரெடியாகிறார்!


Viruvirupuமு.க.அழகிரி, “தி.மு.க.-வின் தலைமைப் பதவி கொடுத்தால், வாங்கிக்கொள்ள தயார்” என்று கூறியது, தி.மு.க.வுக்குள் இப்போது மற்றொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரி கூறியது, “சும்மா அந்த நேரத்தில் ஒரு ஃப்ளோவில் வந்துவிட்டதுதான்” என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலின் தரப்பு, அதை இப்போது வேறு விதமாக பார்க்கத் தொடங்கியிருக்கிறது.

காரணம், அழகிரியின் ஆட்கள் கட்சிக்குள் துப்பறியும் நடவடிக்கை ஒன்றை துவங்கியிருக்கிறார்கள்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் வீரபாண்டியார் பேசும்போது ஆர்ப்பாட்டம் செய்த ஆட்கள் தமது ஆதரவாளர்கள் அல்ல என்று ஸ்டாலின் கருணாநிதியிடம் விளக்கம் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. “அப்படியென்றால் சரி” என்று கருணாநிதியும் அதை அத்தோடு விட்டுவிட்டதாக சொல்கிறார்கள்.
ஆனால், அதை அப்படியே விட்டுவிட அழகிரி தயாராக இல்லையாம்.
அன்றைய தினத்தில் கலாட்டா செய்த ஆட்கள் யார் என்ற முழு விபரத்தையும் சேகரித்து தருமாறு அழகிரி தனது ஆட்கள் சிலரை இறக்கி விட்டிருப்பதாக தி.மு.க. வட்டாரங்களில் சொல்கிறார்கள். சுமார் 40 பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை தயாரித்த அழகிரியின் ‘துப்பறியும்’ ஆட்கள், மாவட்டம் வாரியாக பிரித்து, முழுமையான விபரங்களுடன் லிஸ்டை அழகிரியிடம் கொடுத்திருக்கிறார்களாம்.
இந்த லிஸ்ட்தான் அழகிரியின் கையில் உள்ள ட்ரம்ப் கார்டு என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.
ஏனென்றால், கலாட்டா செய்தவர்கள் என்று இவர்கள் வைத்திருக்கும் பட்டியலில் உள்ள 40 பேரும், ‘பொதுக்குழு உறுப்பினர்கள்’ என்ற முறையான அழைப்பில் அன்றைய கூட்டத்துக்கு வரவில்லை என்பதை அழகிரியின் ஆட்கள் எஸ்டாபிளிஷ் பண்ணியுள்ளார்களாம்.
தி.மு.க. பொதுக்குழு கூட்டங்களுக்கு, மாவட்ட ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டுமே உறுப்பினர்கள் என்ற முறையில் அழைப்பிதழ் பெறுவார்கள். இவர்களைவிட, கட்சிக்கு முக்கியமான, ஆனால் தேர்ந்தெடுக்கப்படாத சிலருக்கு சிறப்பு பார்வையாளர்கள் என்ற பிரிவில் அழைப்புகள் போகும். வழமையாக தலைமைக் கழகத்தில் இருந்தே இந்த சிறப்பு அழைப்புகள் அனுப்பி வைக்கப்படும்.
முன்பெல்லாம் மிஞ்சி மிஞ்சிப் போனால், 100 சிறப்பு அழைப்புகள் போனாலே பெரிய விஷயம் என்கிறார்கள்.
ஆனால் இம்முறை, சுமார் 400 சிறப்பு அழைப்புகள் போயிருக்கின்றன. தலைமைக் கழக நிர்வாகம் ஸ்டாலினின் கைப்பிடிக்குள் இருப்பதால், இந்த மேலதிக அழைப்புகள் ஓசைப்படாமல் பெறப்பட்டு, ஸ்டாலினுக்கு வேண்டிய 4 மாவட்டச் செயலாளர்களிடம் கொடுக்கப்பட்டது என்கிறார்கள் அழகிரி ஆதரவாளர்கள்.
பொதுக்குழுவில் ஒருவேளை தலைமைப் பதவிக்கான பலப்பரீட்சை நடந்தால், ஸ்டாலின் ஆட்கள் அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்பதற்காக வழங்கப்பட்ட பாஸ்கள் இவை என்பது அழகிரிக்கு சொல்லப்பட்டிருக்கிறது.
குறிப்பிட்ட 4 மாவட்டச் செயலாளர்களால் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்ட ‘சிறப்பு பார்வையாளர்களில்’ கலாட்டா செய்த 40 பேரும் உள்ளனர் என்பதுதான்அழகிரி ஆட்கள் துப்பறிந்து கண்டுபிடிதத உண்மை! அழகிரிக்கு கொடுக்கப்பட்டுள்ள லிஸ்டில், 40 பேருடைய பெயர்கள், அவர்களது கட்சி உறுப்பினர் இலக்கம், சொந்த மாவட்டம், அவர்களை கூட்டத்துக்கு அழைத்து வந்த மாவட்ட செயலாளரின் பெயர் என்று பக்காவாக தயார் செய்து சொடுத்திருக்கிறார்கள்.
இந்த லிஸ்டின்படி, ஸ்டாலினின் ஆதரவாளர்களான இரு மாவட்ட செயலாளர்களின் கைவரிசைதான் அதிகமாம். மற்றைய இரு மாவட்ட செயலாளர்கள் அழைத்து வந்த ஆட்கள், ‘ஜென்டில்மேனாக’ இருந்துவிட்டு போய்விட்டார்களாம்.
நாம் தென்மாவட்ட முன்னாள் அமைச்சர் (அழகிரி ஆதரவாளர்) ஒருவருடன் பேசியபோது, “அன்னிக்கு கூட்டத்துக்கு வந்த யாரையும் கேட்டு பாருங்க.. கலாட்டா பண்ணின ஆளுங்க இரண்டு மாவட்டத்துக்காராங்க மட்டும்தான். ஒரு வேகத்தில வேறு யாராவது ஓரிருவர் சவுண்டு விட்டிருக்கலாம். ஆனா, மெயின் கலாட்டாக்காரங்க இரு மாவட்ட ஆளுங்கதான்” என்றார்.
“சரி. அதெல்லாம் முடிஞ்சுபோன சமாச்சாரமாச்சே.. இப்போது இந்த லிஸ்டை வைத்து அழகிரி என்னதான் செய்யப் போகிறார்?” என்று அழகிரியின் நிழல் என்று அறியப்பட்ட அந்த முன்னாள் அமைச்சரிடம் கேட்டோம்.
“என்ன செய்யப் போகிறாரா? தலைவர் பதவிக்கு நான் ரெடி என்று சொன்னது அண்ணன் சும்மா தமாஷ் பண்ணினார் என்று நினைக்கறீர்களா? அண்ணன் நெசமாகவே ரெடியாகிறார்” என்று கூறி நம்மை அதிர வைத்தார் அந்த தென்மாவட்ட வி.ஐ.பி.
ஏங்க.. நெசமாலுமே சொல்லுறீகளா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக