திங்கள், 27 பிப்ரவரி, 2012

என்கவுண்டர் அரசியல் – ஐந்து கொலைகள் போதுமா?

தேர்தலில் ஜெயித்த பிறகு ஆட்சி நடத்த போலீஸ் மட்டுமே போதும் எனும் எண்ணத்தில் இருக்கும் ஜெயலலிதா. எதிர்க்கும் துணிவில்லாத மனிதர்களை மட்டும் கொஞ்சமும் இரக்கமில்லாமல் தாக்குவதற்கு பயிற்றுவிக்கப்பட்ட காவல்துறை. செய்திகளில்கூட சுவாரஸ்யத்தை எதிர்பார்க்கும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள். வெற்றிகரமான என்கவுண்டர், சுட்டு வீழ்த்தப்பட்ட கொள்ளையர்கள் என்பன போன்ற வர்ணனைகளை கொடுக்கும் பாக்கெட் நாவல் தரத்திலான ஊடகங்கள். இந்தக் கூட்டணி இருக்கும் வரை தமிழ்நாட்டில் என்கவுண்டர்கள் தொடர்கதையாகவே இருக்கும்.
அரசாங்கத்தின் தேவைக்காக என்கவுண்டர் செய்யும் பழக்கத்தை வீரப்பன் கொலை மூலம் ஆரம்பித்து வைத்தவர் ஜெயலலிதாதான். அதன் பிறகு இது ஒரு தொடர் நிகழ்வாகிவிட்டது. அதிகமாக ஜெய்சங்கர் படம் பார்க்கும் பழக்கம் இருக்கிறதா அல்லது அப்பிராமணர்கள் சொம்பு திருடியதற்காக கொல்லப்பட்டாலும் அதனை ஆதரிக்கும் சோ ராமசாமியை நண்பனாக கொண்டிருக்கும் பழக்கதோஷமா தெரியவில்லை, படுகொலைகள் வாயிலாகவே சட்டம் ஒழுங்கை காப்பாற்ற இயலும் என நம்புபவர் ஜெயா. அவரது ஆட்சியில் என்கவுண்டர்கள் அதிகமாக நடக்கும்.  எனது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் என்று அவர் பெருமிதம் கொள்வதும் நடக்கும்.
இந்தத் தருணத்தில் நாம் அச்சமடைய வேண்டியது ஜெயலலிதா பற்றியோ அல்லது போலீஸ் பற்றியோ அல்ல. அவர்கள் எதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு அதிகாரமிருக்கையில் என்ன நடக்குமோ அதுதான் நடந்திருக்கிறது. ஆனால் “இப்படி சுட்டாத்தான் அடுத்து கொள்ளையடிக்கனும்னு நினைக்கிறவனுக்கு பயம் வரும்” எனும் வாசகங்களோடு இதை ஆதரிக்கும் பொதுமக்கள்தான் அதி அபாயகரமானவர்களாக தெரிகிறார்கள். இவர்களில் பலர் எவன் தாலியறுந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கூடங்குளம் மின்சாரம் வேண்டும் என்று சொல்பவர்கள்.

வங்கிக் கொள்ளைக்கு பதிலடியாக ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலரது புரிதல் இத்தோடு முடிந்துவிடுகிறது. ஒருவன் குற்றவாளியா இல்லையா என்று உறுதியாகும் முன்பே, குற்றத்துக்கு கொலைதான் தண்டனையா எனும் பரிசீலனைகூட செய்ய விரும்பாது அவன் கொல்லப்படுவது இவர்களுக்கு சம்மதம் என்றால், ஒன்று இவர்கள் கொலையை ரசிக்க பழகியிருக்க வேண்டும். அல்லது தன்னோடு தொடர்பில்லாத யாரோ ஒருவன் கொல்லப்படுவது பற்றி கவலையற்றவர்களாக இருக்கவேண்டும். சமூகத்தால் புறந்தள்ளப்படவேண்டிய இவர்களது கருத்து சமூகத்தின் பொதுக்கருத்தாக கட்டமைக்கப்படுகிறது. கருத்து ஏதுமில்லாதவர்கள் இதன் மூலம் இதனை தங்கள் கருத்தாக வரித்துக்கொள்ளும் நிலைக்கு ஆளாகிறார்கள்.
சென்னை வேளச்சேரி என்கவுண்டர் ஒரு போலி என்கவுண்டர் என்பதை தினமலரின் “சிறப்பு நிருபரே” கிட்டத்தட்ட ஒத்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் அவர் எழுப்பும் கேள்வி சுருக்கமானது. போலியா இருந்தாத்தான் என்ன? படம் நல்லாயிருக்கான்னு பாரு, டிவிடி போலியா இருந்தா உனக்கென்ன? மனித உரிமை ஆர்வலர்களைத் தேச விரோதிகளாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்துவரும் இந்த வகை பத்திரிகைகள் அதற்காக சாதாரண மக்களை ரத்த வெறியர்களாக மெல்ல மெல்ல மாற்றுகின்றன. அதன்படியே மக்களில் பலரும் போட்டு தள்ளுடா அவனை என கவுதம் மேனன் படத்து வில்லனைப் போல கூவி குதூகலிக்கிறார்கள்.
அவர்கள் பேசுவதற்கான பாயிண்டுகளையும் இந்த ஊடகங்களே வழங்குகின்றன. கொள்ளைக்காரர்கள் கொல்லப்பட்டால் அடுத்து கொள்ளையடிப்பவனுக்கு பயம் வரும். சட்டம் அதிகமான வாய்ப்புக்களை குற்றவாளிகளுக்கு வழங்கி அவர்களைச் சுதந்தரமாக உலவவிடுகிறது. ஆகவே மக்களை பாதுகாக்க இந்த வழியை போலீஸ் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கிறது. இதெல்லாம் போலி என்கவுண்டர் ஆதரவாளர்களின் வாதங்கள். இந்த வேட்டுச் சத்தத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நம் கண்ணில்படாது மறைந்து போயிருக்கிறது. இதுவரை ரவுடிகள் மற்றும் கொடூரமான கொலைகாரர்கள் எனும் பட்டியலில் வந்தவர்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட வாசகங்கள் இப்போது கொள்ளையர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.
நல்லது, தமிழகத்தை கொள்ளையர்களிடமிருந்தும் காப்பாற்றும் வெறி காவல்துறைக்கு வந்து விட்டதாக வைத்துக்கொள்வோம். ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மீதான எல்லா வழக்குகளும் நிரூபணம் இல்லாமல் தோற்றுவிட்டன. ஆகவே தங்கள் முயற்சிகள் வீணாகிவிட்டதாக பொங்கியெழுந்து ஒரு தோட்டாகூட காவல்துறையில் இருந்து புறப்படவில்லையே ஏன்? வங்கிக்கொள்ளையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மக்களை நேரடியாக கொள்ளையடித்த ஃபைனான்ஸ் நிறுவனங்களின் முதலாளிகளில் ஒருவனும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பணத்தை மீட்டுத்தா என்று சொல்லி வீதிக்கு வந்த மக்கள் மீது தடியடி நடந்திருக்குமேயன்றி அந்த நிறுவன முதலாளிகள் எவன்மீதேனும் போலீசின் லத்திக் கம்புகள் தொட்டுப்பார்த்திருக்குமா? இந்தக் கேள்விகள் எழ குற்றவாளிகள் மீதான இரக்கம் தேவையில்லை, குறைந்தபட்ச அறிவு போதும். அறிவு அதிகமாக இருந்தும் இந்த வினாக்கள் ஒருவனுக்கு வரவில்லை எனில் அவன் கொலைகளை நேசிக்கும் ஹிட்லர்தனத்துக்கு ஆட்பட்டிருக்கிறான் என்று பொருள் (உதாரணம் ரொம்ப பழசு என கருதினால் மோடித்தனம் என மாற்றிக்கொள்ளவும். நடுநடுவே இந்துத்வா, சர்வாதிகாரம் எல்லாம் போட்டுக்கொள்ளலாம்).
சமீபகால என்கவுண்டர்கள் அரசியல் காரணங்களுக்காகவே செய்யப்பட்டிருக்கின்றன. கோவை மோகன்ராஜ் என்கவுண்டர் திமுக அரசின் மீது இருந்த கடுமையான அதிருப்தியை தண்ணீர் தெளித்து ஆற்றுவதற்காகச் செய்யப்பட்டது. இப்போது நடந்த சம்பவம் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக காட்டுவதற்கு நட்த்தப்பட்டிருக்கிறது. இதில் மக்கள் நலன் என்று எதுவுமே இல்லை. மக்கள் சிலரை மகிழ்விக்க என்று வேண்டுமானால் சொல்லலாம். குற்றங்கள் பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வளர்பவை. அதனை கட்டுப்படுத்த ஒருங்கினைந்த நடவடிக்கைகள் தேவையேயன்றி காவல்துறைக்கு கொலை செய்யும் அதிகாரம் வழங்கப்படுவது காவல்துறை மேலும் குற்றமிழைக்கவே வழிசெய்யும்.
சட்டத்தால் தண்டிக்க முடியாது என்பதால் காவல்துறைக்கு அதிகாரம் வழங்குவது சரியென்பது இந்திய சட்டங்களை அவமதிக்கிற செயல்தான். காவல்துறைக்கு அதீத சுதந்தரம் தருவது கொள்ளையர்களுக்கு சுதந்தரம் தருவதைவிட அபாயகரமானது. இருளர் இன பெண்கள் கற்பழிக்கப்பட்ட விவகாரத்தில் இன்னமும் சம்பந்தப்பட்ட போலீசாரை சம்பிரதாயமாகக் கூட கைது செய்யவில்லை. இதுவரை நடந்த லாக்அப் மரணங்கள் எதற்காவது தண்டனை தரப்பட்டிருக்கிறதா? குற்றவாளிகளுக்கும் காவல்துறைக்கும் உள்ள பிணைப்பு என்பது எல்லா என்கவுண்டர் ஆதரவாளர்களுக்கும் தெரியும். பிறகும் இவர்கள் என்கவுண்டரை ஆதரிக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவர்களது கொலைரசனையன்றி வேறொன்று இருக்க இயலுமா?
கொலைகாரன் கொல்லப்படவேண்டும் என்று இதற்கு முன்பான என்கவுண்டர்களில் வசனம் பேசப்பட்டது. இப்போது கொள்ளையர்கள் சாகட்டும் என அது வளர்ந்திருக்கிறது. நாளை அந்த விதி எந்த எல்லைக்கும் செல்லலாம். ஒருவன் கொல்லப்பட்ட பிறகு அவனை குற்றவாளி என நிரூபணம் செய்தால் போதும் எனும் நிலை முழுமையான ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு நம்மை இட்டுச்செல்லும். சன்மானத்துக்காக சாதாரண ஆடு மேய்க்கும் நபர்களை கொன்று அவர்களை தீவிரவாதிகள் என கணக்கு காட்டிய சம்பவங்கள் ஆந்திராவில் நடந்திருக்கின்றன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்த வேலையை ராணுவம் செய்கிறது. கொள்ளையனை கொல்வது சரி என்று அனுமதிக்கும் மனம் உங்களுக்கிருந்தால், கொல்லப்பட்டவனை கொள்ளையனாக்கும் ஆற்றல் அவர்களுக்கு இருக்கிறது.
துப்பாக்கி போலீசின் கையிலிருக்கு ஒரு கருவியென்றால், போலீஸ் அரசாங்கத்தின் கையிலிருக்கும் ஒரு கருவி. என்ன சிக்கலென்றால் அரசின் கருவிக்கு சொந்த விருப்புவெறுப்பு உண்டு. ஆயுதத்துக்கு அதிகாரம் தந்தால் அது எஜமானனின் இலக்குகளை மட்டுமே தாக்கும். இலக்கு எப்போதும் நமக்கு பிடிக்காதவர்களாகவோ அல்லது தேவையற்றவர்களாகவோ இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நமக்கு ஒரு வங்கிக்கொளையன் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றினால் நம் மகனுக்கு மதிப்பெண் போடாத ஆசிரியர் கொல்லப்படுவது நியாயம் என்று தோன்றலாம். நம் எண்ணத்தில் வன்மத்தை சுமந்துகொண்டு பிள்ளைகளிடம் நேர்மையாக நடக்கும் பழக்கத்தை நாம் எதிர்பார்க்க இயலாது. எல்லோரிடத்திலும் மனிதாபிமானம் இருக்கவேண்டும் என நினைப்பது பேராசையாக இருக்கலாம். ஆனால் எல்லோரும் மனிதர்களாக இருக்க வேண்டும் என நினைப்பது நிச்சயம் பேராசையல்ல. கொலையை விரும்புவது மனிதத்தன்மையற்ற செயல், அதை அரசாங்கம் செய்தாலும் இந்த விதி பொருந்தும்.
0
வில்லவன் www.tamilpaper.net

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக