புதன், 8 பிப்ரவரி, 2012

வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்பின் உச்சத்தில் மக்கள்!

சென்னை: தலைநகர் சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் வரலாறு காணாத மின்வெட்டு நிலவுகிறது.
கோவை, ஈரோடு, காஞ்சிபுரம் போன்ற தொழில்வளம் மிக்க மாவட்டங்கள் இந்த மின்வெட்டு காரணமாக கடும்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
திமுக ஆட்சியின் இறுதிக் கட்டத்தில் சென்னையில் 1 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 3 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது. ஆட்சி மாற்றத்துக்கு பிரதான காரணமாக அமைந்ததே இந்த மின்வெட்டுதான்.
ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களுக்குள் மின்வெட்டை சீராக்கிவிடுவோம் என அதிமுக உறுதியளித்தது. ஆட்சியில் அமர்ந்த பிறகு, மின்வெட்டுக்கான காரணங்களை மட்டுமே அடுக்கினார்களே தவிர, அதைத் தீர்ப்பதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதிமுக ஆட்சி அமைந்து 8 மாதங்களாகியுள்ள நிலையில் மாநிலம் முழுவதும் மின்வெட்டு தாறுமாறாக உள்ளது.
சென்னையில் 1 மணி நேரம் மின்வெட்டு என்று சொன்னாலும், அறிவிக்கப்படாமல் கூடுதலாக அரை மணி அல்லது 1 மணிநேரத்துக்கு மின் வெட்டு நிலவுகிறது. எப்போது கேட்டாலும் பராமரிப்பு என காரணம் கூறுகிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.

8 மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரை...

கிராமப் புறங்களின் நிலைமைதான் சொல்லத் தரமற்றுப் போயுள்ளது. சில பகுதிகளில் 6 மணி நேரம், சில மாவடங்களில் 8 மணி நேரம், வேலூர் போன்ற வட மாவட்டங்களில் சில நாட்களில் 12 மணி நேரம் கூட மின்வெட்டு நிலவுகிறது.

பொங்கல் பண்டிகை சமயத்தில் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 8 மணி நேரம் மின்சாரமின்றி மக்கள் அவதிப்பட்டதை நேரில் பார்க்க முடிந்தது.

முன்பெல்லாம் என்னதான் மின் தட்டுப்பாடு இருந்தாலும், மழைக்காலத்தில் மின்வெட்டு என்பதே இருக்காது. கடந்த திமுக ஆட்சி முழுவதுமே, மழைக் காலங்களில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த ஆண்டோ, 'மழையாவது வெயிலாவது... கட் பண்ணு கரண்டை' என்கிற ரீதியில் நிலைமை உள்ளது. மழை வெளுத்தெடுத்த அக்டோபர், நவம்பர் மாதங்களில் கூட சென்னையில் 2 மணி நேரமும், பிற பகுதிகளில் 6 மணி நேரமும் மின்வெட்டு நிலவியது.

குறிப்பாக மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வுகள் நடக்கும் இந்தத் தருணத்தில் மின்சாரம் அடியோடு இல்லாமல், மக்கள் லாந்தர்கள், மெழுகுவர்த்திகள், சிம்னி விளக்குகளுக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, இன்றிலிருந்து அதிகாரப்பூர்வமாகவே 8 மணி நேர மின்வெட்டை சென்னை தவிர்த்த பிற பகுதிகளில் அமல்படுத்த மின்வாரியம் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நகரம், கிராமம் என்ற பேதமின்றி இந்த 8 மணி நேர மின்வெட்டு இருக்கும்.

மின்வெட்டு நேரங்கள்:

காலை, 6 முதல், 9 மணி வரை, 3 மணி நேரமும்; பகல், 12 முதல், மாலை, 3 மணி வரை, 3 மணி நேரமும்; மாலை, 6 முதல், இரவு, 7 மணி வரை மற்றும் 8 முதல், 9 வரை, தலா 1 மணி நேரம் என, மொத்தம், 8 மணி நேரமும் மின்வெட்டு இருக்கும்.

சில பகுதிகளில் காலை, 9 மணி முதல், 12; மாலை, 3 முதல் 6; இரவு, 7 முதல், 8 மற்றும் 9 முதல், 10 என, 8 மணி நேரம்.

சென்னையில் மட்டும் 2 மணி நேரம் கூடுதலாக மின்வெட்டு நீடிக்கும் எனத் தெரிகிறது.

தொழில்துறை முடங்கும் நிலை

இந்த மின் வெட்டு காரணமாக தொழில்துறை அடியோடு முடங்கும் சூழல் உருவாகியுள்ளது. ஏற்கெனவே கோவையில் 40000 தொழிற்சாலைகளில் 80 சதவீத உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் சிறு தொழில்கள், விசைத் தறிகள் இயக்கம் முடங்கியுள்ளது. ஈரோட்டிலும் நிலைமை மோசமாகியுள்ளது.

அதேநேரம் பெரும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி மின்சாரத்தை தனி வழியில் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது!

திமுக ஆட்சிக் காலத்தில் போடப்பட்டுள்ள 4 புதிய மின் திட்டங்களும் செயல்பாட்டுக்கு வர 2013 அல்லது 2014 ஆகலாம். அந்தத் திட்டங்கள் வந்தால் மட்டுமே தமிழக மக்களின் இருட்டுக்கு ஓரளவு விடிவு பிறக்கும். அதுவரை?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக