புதன், 29 பிப்ரவரி, 2012

தினமும் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் கனிமொழி


Kanimozhi

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகியுள்ள கலைஞர் டி.வி. பங்குதாரரான திமுக எம்பி கனிமொழி வழக்கு விசாரணைக்காக தினமும் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பின் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது. அப்போது ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக தினமும் தவறாமல் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்பன உள்பட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
அதன்படி கனிமொழி டெல்லியிலேயே தங்கியிருந்து தினமும் விசாரணைக்காக சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார்.
இந் நிலையில் கனிமொழி சார்பில் அவரது வழக்கறிஞர் சிபிஐ நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைக்காக தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்த வேண்டும் என்றும், ஒரு குழந்தையின் தாய் மற்றும் அரசியல் தலைவர் என்ற முறையில் தனது கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஓ.பி. சைனி முன் விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, இதற்கு வரும் மார்ச் 14ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக