வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஆட்டுக் கல், அம்மிக் கல்லுக்கு வந்தது மவுசு பயந்தது நடந்தே விட்டது

இல்லத்தரசிகள் பயந்து கொண்டே இருந்தது நடந்தே விட்டது. இனிமேல், 8 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பால், மிக்சி, கிரைண்டர்கள் ஓடாமல், சமையல் பணி பாதிக்கும் பீதியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் இனிமேல், ஆட்டுரல், அம்மிக்கல் ஆகியவற்றின் துணையை நாட தயாராகி விட்டனர்.

விஞ்ஞான வளர்ச்சியால், நவீன இயந்திரங்கள் அதிகரித்து, மனிதனின் பணிகளை குறைத்து விட்டது. அதே சமயம், இயந்திர உற்பத்தி அதிகரிப்பால், மனிதனை சோம்பேறி ஆக்கி விட்டது என்பதும் நிதர்சனமான உண்மை.

வீசியெறியப்பட்ட அம்மி, ஆட்டு உரல்:முப்பது ஆண்டுகளுக்கு முன், வீடுகள் தோறும் அம்மிக்கல், ஆட்டுரல் இடம் பெற்றிருக்கும். சமையலுக்கு மசாலா பொருட்களை அரைக்க, அம்மிக் கல்லையும், மாவு அரைக்க, ஆட்டு உரல்களையும் பயன்படுத்தி வந்தனர்.
இதற்கு மாற்றாக கண்டுபிடிக்கப்பட்ட, கிரைண்டர், மிக்சி வரத்து துவங்கியதும், பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த அம்மிக் கல்லும், ஆட்டுரலும், பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு தூக்கி வீசப்பட்டன. வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், கணவர்களையும், குழந்தைகளையும், வேலை, பள்ளிக்கு அனுப்பும் இல்லத்தரசிகளுக்கும், மிக்சியும், கிரைண்டரும், பெரும் உபயோகமாக இருந்தது. சமையல் பணியை விரைந்து முடிக்க இவை உதவின.

மின்வெட்டு ஆபத்து:கடந்த ஆட்சியில் மின்சார தேவைக்கு ஏற்ப, உற்பத்தியை பெருக்காததன் விளைவு, இந்த ஆட்சியிலும் எதிரொலிக்கிறது. ஆட்சி மாறியும், மின்தடை நேரம் குறையவில்லை. இரண்டு மணி நேரம், நான்கு மணி நேரம் என இருந்த மின்தடை, தற்போது, 8 மணி நேரமாக அதிகரித்து விட்டது. அதிகாரப் பூர்வமாகவும் இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்படாத மின்வெட்டு இன்னும் கிராம பகுதிகளில் நிலவுகின்றன.

மிக்சி, கிரைண்டர் ஓடாது:மின்தடை செய்யப்படும் நேரங்கள், பெரும்பாலும் சமையல் செய்யும் காலை நேரத்திலும், இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் மாலை நேரத்திலும் தான். இதனால், பெண்களுக்கு சமையல் பணிகள் பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. மிக்சி, கிரைண்டர் இயங்காததால், இனிமேல் அவர்கள், பழைய முறைப்படி, ஆட்டுக்கல், அம்மிக் கல்லை நாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

விற்பனைக்கு தயார்:தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஆங்காங்கே ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை நடைபெறுகிறது. வெளியூர்களில் இருந்து கருப்பு கல்லை வாங்கி வந்து, சாலையோரம் "டெண்ட்' அமைத்து, அம்மிக்கல், ஆட்டுரல்களை விற்பனை செய்து வருகின்றனர்.

திருவள்ளூர், ஜெ.என்.,சாலையில் ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்யும், காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பானம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன், 27, கூறியதாவது:எனது பரம்பரையே, ஆட்டுரல், அம்மிக்கல் விற்பனை செய்வது தான். நான், எங்களது கிராமத்தில் உள்ள கல் குவாரியில் இருந்து கற்களை வாங்கி, இங்கு கொண்டு வந்து அம்மிக்கல், ஆட்டு உரல்களை செய்து விற்பனை செய்கிறேன். ஒரு டன் கல், 20 ஆயிரம் ரூபாய். அவற்றை லாரியில் ஏற்றி, இங்கு கொண்டு வர, 4,000 ரூபாய் வரை வாடகை செலுத்துகிறேன்.பின், அவற்றை பல்வேறு அளவுகளில், அம்மிக்கல், ஆட்டு உரல்களாகத் தயாரித்து விற்பனை செய்கிறேன். சில நாட்களில், வியாபாரமே இருக்காது; சில நாட்களில், இரண்டு, மூன்று உரல்கள் விற்பனையாகும்.சராசரியாக நாளொன்றுக்கு, 400 ரூபாய் கிடைக்கிறது. கிரைண்டர், மிக்சி வந்த பின், எங்களது விற்பனை படுத்துவிட்டது. மின்தடை காரணமாக, இனிமேல் அம்மிக் கல், ஆட்டுரல் விற்பனை அதிகரிக்கும்.இவ்வாறு சீனிவாசன் கூறினார்.

அம்மிக்கல் சிறியது 300 ரூபாய் பெரியது 500 ரூபாய் முதல்
ஆட்டுரல் சிறியது 200 ரூபாய் பெரியது 600 ரூபாய் முதல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக