திங்கள், 6 பிப்ரவரி, 2012

பிரேமலதாவும், சசிகலாவும் நட்பு பாராட்டியதால்தான் தேமுதிகவுக்கு ஜெ. ஆப்பு?


Sasikala, Jayalalitha and Premalatha Vijayakanth
சென்னை: தேமுதிக மீது முதல்வர் ஜெயலலிதா திடீரென கடும் கோபம் அடைய என்ன காரணம் என்று பலரும் மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதற்கு இதுதான் காரணம் என்று பரவலமாக நம்பப்படுவது என்னவென்றால், சசிகலாவும், விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்தும் நெருங்கிய நட்பு பாராட்டி வருவதுதான் என்கிறார்கள்.
எப்போது அதிமுக, தேமுதிக இடையிலான கூட்டணி குறித்த செய்திகள் பரவத் தொடங்கியதோ அப்போதே ஏற்பட்டு விட்டதாம் சசிகலா, பிரேமலதா விஜயகாந்த் நட்பு. இருவரும்தான் முதலில் பேசி நட்பை உருவாக்கி, கூட்டணிக்கான அஸ்திவாரத்தை எழுப்பியவர்களாம்.அடிக்கடி சந்தித்துப் பேசி அதிமுக, தேமுதிகவை அருகருகே இழுத்து வந்தவர்கள் இவர்கள்தானாம். இவர்களது சந்திப்புகளுக்கு அப்போது ஜெயலலிதாவும் சரி, விஜயகாந்த்தும் சரி எதிர்ப்பு தெரிவிக்கவில்லையாம். மாறாக ரகசியமாக அமைந்தது இந்த சந்திப்புகள்.

பின்னர் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வெற்றிகரமாக முடிந்தபோது, இவர்களுக்கிடையிலான நட்பும் கூட மேலும் இறுகியதாம். தமிழக அரசியலின் புதிய உடன் பிறவா சகோதரிகள் என்று கூறும் அளவுக்கு இந்த நட்பு பலம் வாய்ந்ததாக மாறியதாம்.

ஆனால் இந்த நட்பு இப்போதும் கூட பலமாக தொடர்வதுதான் தேமுதிகவுக்கு வினையாகி விட்டதாக கூறுகிறார்கள். சசிகலாவை ஜெயலலிதா கட்சியை விட்டும், போயஸ்தோட்டத்தை விட்டும் விரட்டியடித்து விட்டார். தற்போது தி.நகரில் தங்கியுள்ளார் சசிகலா. அவருடன் தொடர்ந்து பிரேமலதா நல்ல நட்புடன் இருந்து வருகிறாராம்.சசிகலாவும் தொடர்ந்து பிரேமலதாவுடன் தொடர்பில் இருந்து வருகிறாராம். இது முதல்வர் காதுகளுக்குப் போக அவர் கோபமாகி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான் தேமுதிகவை சட்டசபையில் வைத்து காய்ச்சி எடுத்து விட்டார் என்கிறார்கள். இனிமேல் தேமுதிகவால் அதிமுகவுடன் எந்த வகையிலும் நெருங்க முடியாத அளவுக்கு ஜெயலலிதா கடும் கோபத்துடன் இருப்பதாகவும் அதிமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதலில் ஜெயலலிதா, சசிகலாவின் உறவினர்களால் அவர்களது நட்பு கெட்டது. இப்போது சசிகலாவால், அதிமுக, தேமுதிக கூட்டணி கோவிந்தாவாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக