செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

மாலத்தீவில் போராட்டம்-அதிபர் நஷீத் விலகினார்-புதிய அதிபரானார் வகீத்



Maldives President Mohamed Nasheed
மாலே: மாலத்தீவு நாட்டில் தொடர்ச்சியான போராட்டங்களையடுத்து அதிபர் முகமது நசீத் பதவி விலகியுள்ளார். அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை உள்ளூர் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதகாக தகவல்கள் வந்த நிலையில் புதிய அதிபராக தற்போது துணை அதிபராக இருந்த வகீத் ஹாசன் பொறுப்பேற்றுள்ளார்.
நீதிபதி அப்துல்லா முகமதுவை மாலத்தீவு ராணுவம் அண்மையில் கைது செய்தது. இது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல் என்று முன்னாள் அதிபர் கயூமின் ஆதரவாளர்கள் வீதியில் இறங்கி போராடி வந்தனர்.இந்த விவகாரத்தில் தீர்வு காணுமாறு ஐ.நா. சபைக்கும் கூட மாலத்தீவு அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் அதிபர் நசீத் பதவி விலகி விட்டார்.

நீதிபதி விவகாரம் என்ன?:

மாலத்தீவு நாட்டின் முகமது ஜலில் அகமது என்ற எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்டு அதிபர் முகமது நசீத் அரசுக்கு எதிராக தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்திருந்தார்.

இதையடுத்து முகமது ஜமில் அகமது மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிபதி அப்துல்லா முகமது, பிடியாணை ஏதுமில்லாமல் நசீத்தை கைது செய்தது தவறு எனக்கூறி விடுதலை செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அரசு நீதிபதியை லஞ்ச குற்றச்சாட்டின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தது. இதற்கு நீதித்துறையினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வன்முறையாகவும் வெடித்து தொடர் போராட்டங்களாக உருமாறியது.

அரசுக்கும் ராணுவத்துக்கும் எதிரான போராட்டம் உச்சகட்ட நிலையை அடைந்ததால் அதிபர் நசீத் இன்று பதவி விலகியுள்ளார். துணை அதிபரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இதையடுத்து அவர் அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நசீத் பதவி விலகியதைத் தொடர்ந்து தலைநகர் மாலேயில் காவல்துறையினர் அரசு தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களை கைப்பற்றியுள்ளனர். இதன் பின்னணியில் ராணுவம் உள்ளது. பதவி விலகிய நசீத்தை ராணுவம் தமது தலைமையகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளது.

முன்னதாக நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய நசீத், தாம் ஆட்சியில் தொடர்ந்து நீடித்தால் பிரச்சனைகள் தான் அதிகரிக்கும். மாலத்தீவு மக்களை நான் காயப்படுத்த விரும்பவில்லை. இதனால் நான் பதவி விலகுவதுதான் ஒரே வாய்ப்பு என்று தெரிவித்தார்.

இதையடுத்து பிற்பகலில் துணை அதிபரான முகமது வகீத் ஹாசன், புதிய அதிபராக பதவியேற்றார்.

ராணுவப் புரட்சி இல்லை?

இதனிடையே நசீத்தை ராணுவம்தான் கட்டாயப்படுத்தி பதவி விலக வைத்ததாக வெளியான செய்திகளை முகமது வகீத் ஹாசன் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஹாசனின் செயலாளர் அகமது தெளபீக் இது குறித்து கூறுகையில், இங்கே ராணுவப் புரட்சி ஏதும் நடக்கவில்லை. மக்களின் விருப்பத்தையே நசீத் நிறைவேற்றியுள்ளார்" என்று கூறினார்.

இந்தியா கருத்து

மாலத்தீவு அரசியல் மாற்றம் தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் சையத் அக்பரூதீன், மாலத்தீவில் நிகழ்ந்திருப்பது அந்நாட்டின் உள்விவகாரம். மாலத்தீவுதான் பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். மாலத்தீவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இருப்பினும் அந்நாட்டு நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார்.

கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டம் நடத்திய நசீத்

புவி வெப்பமயமாதலினால் மாலத்தீவு நாடு எதிர்வரும் ஆண்டுகளில் மெல்ல மெல்ல மூழ்கிவிடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர். இதனால் இந்தியா போன்ற வெளிநாடு ஒன்றில் குறிப்பிட்ட நிலத்தை வாங்கி மாலத்தீவு மக்களை குடியேற்றலாம் என்று நசீத் கருத்து தெரிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

புவி வெப்பமயமாதலின் கொடுமையை சர்வதேச சமூகம் உணர வேண்டும் என்பதற்காக கடலுக்கடியில் அமைச்சரவைக் கூட்டத்தையும் நடத்திக் காட்டியவர் தற்போது பதவி விலகியுள்ள நசீத்.

மாலத்தீவின் முக்கியத்துவம்:

இந்திய பெருங்கடலில் மாலத்தீவு சிறு நாடாக இருந்தாலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது.

மாலத்தீவை தங்களது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன.

மாலத்தீவில் சீனா ஏற்கெனவே நீர்மூழ்கித் தளம் அமைத்து தமது நாட்டுக்கு வளைகுடா நாடுகளிலிருந்து எண்ணெய் எடுத்துச் செல்லும் பாதையின் பாதுகாப்பை பலப்படுத்தி இருக்கிறது.

அமெரிக்காவோ மாலத்தீவுக்கு அருகே டிகாகோ கார்சியோ தீவில் பல ஆண்டுகளாக ராணுவ தளம் அமைத்திருக்கிறது.

மாலத்தீவை அரசியல் ரீதியாக நட்பு நாடாக வைத்துக் கொள்ள இந்தியா தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக