புதன், 15 பிப்ரவரி, 2012

சென்னை கொலை போல் நடக்கும்': ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள்

நரிக்குடி: சென்னையில் நடந்த ஆசிரியை கொலை சம்பவத்தை நினைவுபடுத்தி, விருதுநகர் மாவட்டம் நரிக்குடி மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளியில், ஆசிரியருக்கு கொலை மிரட்டல் விடுத்த பிளஸ் 2 மாணவர் இருவரை, போலீசார் கைது செய்தனர்.
மருது பாண்டியர் அரசு மேல் நிலைப் பள்ளியில் நேற்று காலை 9.25 மணிக்கு, "பிரேயர்' நடந்தது. பிளஸ் 2 மாணவர்கள் இருவர் பிரேயருக்கு வராமல், வகுப்பறையில் பெஞ்சில் தாளம் போட்டு இடையூறு செய்தனர். இதை ஆசிரியர் சுப்பிரமணி கண்டித்தார். ""சென்னையில் ஆசிரியரை கத்தியால் குத்தி கொன்றது போல் இங்கும் நடந்து விடும்,''என, மிரட்டினார். இதை தொடர்ந்து ஆசிரியர்கள், " உயிருக்கு பாதுகாப்பு இல்லை,' எனக் கூறி, வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால், பள்ளியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.
தலைமையாசிரியர் உஷா சாந்த ஜாய் கூறுகையில், "" செய்முறை தேர்வு நடந்ததால், பிரச்னைக்குரிய மாணவர்களை தேர்விற்கு அனுமதித்தோம்,'' என்றார். ஆசிரியர் சுப்பிரமணி புகார்படி, திருச்சுழி டி.எஸ்.பி., மோகன், நரிக்குடி இன்ஸ்பெக்டர் சண்முகம், மாணவர்களை கைது செய்து, அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர் . சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். மேலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், "ஆசிரியர்களை கேலி செய்வது, திட்டுவது போன்ற அநாகரிக செயல்களில் பிளஸ் 2 மாணவர்கள் ஈடுபடுகின்றனர். பொதுத்தேர்வு எழுதப் போவதை கருதி, சகித்து கொள்கிறோம். கொலை செய்து விடுவேன் என மிரட்டியதால், உயிருக்கு பாதுகாப்பு கருதி போலீசில் புகார் செய்தோம்,' என்றனர்.

முதன்மை கல்வி அதிகாரி சசிகலா, ""பள்ளி ஒழுங்கு நடவடிக்கை குழுவால் , மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். செய்முறை தேர்வு முடிந்ததால், அவர்கள் நேரடியாக பொதுத்தேர்வினை எழுத வேண்டியதுதான்,'' என்றார். பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் அதிக சதவீதத்தில் தேர்ச்சி பெறும் விருதுநகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மாணவர்களின் மிரட்டல் போக்கு குறித்து, விருதுநகர் அரசு மன நலமருத்துவர் கணேசன் கூறுகையில், ""சமுதாயத்தில் ஒழுக்கம், நியாயம், லஞ்சமற்ற நிர்வாகம் , கட்டுப்பாடுகள் குறைந்து வருகின்றன. இதன் வெளிப்பாடு தான், இது போன்ற சம்பவங்களுக்கு காரணம். குழந்தை பருவத்திலே ஒழுக்கம், கட்டுப்பாடுகளை , பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும். பள்ளியில் ஒழுக்கம், கட்டுப்பாடு குறித்துஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். இவற்றை முறையாக செய்யாததால், இது போன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக