புதன், 15 பிப்ரவரி, 2012

தூதரக கார் தகர்ப்புக்கு நவீன ரக காந்தக்குண்டுகள்: முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிப்பு

: டில்லியில், இஸ்ரேல் தூதரக அதிகாரி கார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விசாரிக்க, தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. குண்டுவெடிப்புக்கு நவீன ரக காந்த குண்டு பயன்படுத்தப்பட்டுள்ளது, முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிரதமர் வீட்டருகே, இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் கார் நேற்று, திடீரென வெடித்து தீப்பிடித்தது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தை, தேசிய புலனாய்வு படையினர் ஆய்வு செய்தனர். கார் வெடித்த இடத்தில் காந்த துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. செங்கல் அளவு கொண்ட இந்த குண்டு, காந்தத்தின் மூலம், கார் செல்லும் போதே ஒட்ட வைக்கப்பட்டுள்ளது. அதன் பின், கடிகாரம் மூலமோ, ரிமோட் மூலமோ இந்த குண்டை வெடிக்கச் செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. எனினும், இந்த குண்டில் பயங்கரவாதிகள் புதிய முறையில் குண்டு வெடிப்பு தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக, விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கருதுகின்றனர்.

ரெட் அலர்ட்: குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததும், டில்லி மாநகரமே அலர்ட் செய்யப்பட்டது. குறைந்த கட்டணத்தில் லாட்ஜ்கள் நிறைய இருக்கும் பாகர்கஞ்ச் பகுதியில், தீவிர சோதனை நடைபெற்றது. இங்குள்ள 300க்கும் அதிகமான லாட்ஜ்களில், போலீசார் புகுந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.வெளிநாட்டினர், குறிப்பாக ஈரான் நாட்டவர் யாராவது தங்கியுள்ளனரா என்று விசாரணை நடத்தினர்.

இஸ்ரேல் குழு வருகை: டில்லியில் குண்டுவெடிப்பு நடந்த அதே நேரத்தில், ஐரோப்பாவின் ஜார்ஜியாவில் உள்ள பிபிளிசி என்ற இடத்திலும், இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.இதனால், இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இந்த குண்டுவெடிப்பு நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உளவுப் பிரிவினருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையில், இஸ்ரேல் நாட்டிலிருந்து சிறப்பு புலனாய்வு குழு இந்தியாவுக்கு வரவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கண்காணிப்பு கேமரா: டில்லியில் உள்ள சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், போலீஸ் துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.இஸ்ரேலிய தூதரக அதிகாரியின் காரில் நேற்று முன்தினம் குண்டு வெடித்தது. டில்லி ஐகோர்ட்டில், கடந்த ஆண்டு செப்டம்பரில் குண்டு வெடித்த போது, கோர்ட் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியது. தற்போது, அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே, சாலையில் நடக்கும் சம்பவங்களை துல்லியமாக அறியும் பொருட்டு, சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும்படி, டில்லி போலீசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஐ.நா., கண்டனம்: ஜார்ஜியா மற்றும் இந்தியாவில், இஸ்ரேல் தூதரகங்களை தாக்க முற்பட்ட செயலுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் பான் கி மூன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களுக்கு காரணமானவர்கள், சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்' என, அவர் தெரிவித்துள்ளார்."இந்த இரு சம்பவங்கள் குறித்து, தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை' என, அமெரிக்கா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக