வியாழன், 16 பிப்ரவரி, 2012

அந்த காலத்தில் பெரிய புரட்சி! நாதஸ்வர இசை




நாதஸ்வர மேதை திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை தனது 16 வயதில் 9 வயது நிரம்பிய சாரதம்மாள் என்பவரை திருமணம் முடித்தார்
என்று அந்தக் காலம் இள வயதிலேயே கல்யாணம் முடிக்கும் பழக்கம் விவரிப்போடு, திரு. சாரி அவர்களின் பாரம்பரிய சொற்பொழிவு ஏற்பாட்டில், திரு ஸ்ரீராம் அவர்களின் ஞாயிறு பிரசங்கம் ஸ்வாரஸ்யமாக துவங்கியது. எள் போட்டால் எண்ணெயாகும் கூட்டம்.
பிள்ளை அவர்கள் 58 வருடங்கள்தான் வாழ்ந்தார். ஆனால் என்ன வளமான சாதனை. அவரது முதல் கச்சேரி சென்னை மிண்ட் தெருவில் உள்ள வேதவிநாயகன் கோயிலில், 1919-ம் வருடம் நடந்தது. ஆனால் இப்போது அந்தக் கோயில் அங்கு இல்லை. அதற்குப் பிறகு இப்போது உள்ள சென்னை கேசவ பெருமாள் கோயிலில் அவரது திமிரி வாத்தியத்தின் மதுர ஒலியை கேட்பதற்கு ஜனங்கள் கோயில் வெளியில் நிற்பார்கள். ஏனெனில் திமிரியின் சப்தம் கிட்ட நின்றால் காது அடைக்கும்! அதற்குப் பிறகு தான் அவர் வாத்தியத்தில் மாற்றம் கொண்டு வந்து, அமிர்தமான கானம் நாதஸ்வர குழலியிலிருந்து மென்மையாக வெளிவர வழிசெய்தார். அவருக்குப் பிடித்த ராகம் தோடி. மணிக்கணக்காக வாசிப்பாராம். ராகம் வாசிப்பதும் பாடுவதும்தான் கர்நாடக இசைக்கு அழகு, சாஹித்யம் பிரதானமல்ல என்ற கருத்தைக் கொண்டவர். நாயன வித்வான்கள் வெறும் உடம்போடு வாசிப்பதை மாற்றி சட்டை போட்டு வாசித்தது, அந்த காலத்தில் பெரிய புரட்சி!

காதில் கடுக்கன், கழுத்தில் தங்கமாலை, ஷெர்வாணியில் வைரம் பதித்த பட்டன்கள், பாகவதர் கூந்தல் என்று ராஜரத்தினம் சபையில் வந்தாலே அட்டகாசமாக இருக்கும். ஸ்வாமி ஊர்வலத்தில் தனக்கும் ஊர்தி ஏற்பாடு செய்யச் சொல்லி அதில் அமர்ந்து பக்கவாத்தியங்களோடு வாசிப்பார். நாதஸ்வர வித்வான்களுக்கும் உரிய கௌரவம் அளிக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவரது தலையீட்டால் திருவையாறு தியாகராஜர் ஆராதனையில் நாதஸ்வரமும் சேர்க்கப்பட்டது. பவுன் ரூபாய் 20 விற்ற காலத்திலேயே கச்சேரிக்கு ரூபாய் 1000 வாங்கியவர் இப்போதைய கணக்கில் சுமார் ரூபாய் 20 லட்சம் பெறும்! யாருக்கு அவ்வளவு சன்மானம் கிடைக்கிறது! தனது வித்வத்தில், திறமையில் அவ்வளவு நம்பிக்கை, சாதனையாளர்களுக்கே உரித்தான திமிர்!

திருவாவடுதுறை சமஸ்தானம் சார்பாக தில்லி சென்று சுதந்திரம் அடையப் போவதை முன்னிட்டு நேரு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அந்த புனித தினத்தில் நாதஸ்வரம் தான் வாசிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆகஸ்ட் 15 இரவு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கர்நாடக இசையில் பிள்ளை அவர்கள் நாதஸ்வரம் வாசித்தார் என்பது தமிழகத்துக்குப் பெருமை. ஜி.என்.பி., செம்மங்குடி போன்ற இசை மேதைகள் பிள்ளை அவர்களின் நாயன வாசிப்பைக் கேட்டு அதே போல் ராக ஆலாபனை செய்யப் பழகினார்கள் என்பது பிள்ளையின் திறமைக்குச் சான்று. ‘காளமேகம்’ என்ற படத்தில் நடித்தார். கிட்டப்பா, என்.எஸ்.கிருஷ்ணன், செம்பை, முத்தையா பாகவதர், விஸ்வனாத ஐயர் போன்ற கலை உலகப் பிரமுகர்கள் அவரது நெருங்கிய நண்பர்கள். வேகமான வாழ்க்கை வாழ்ந்தார். உடம்பை வருத்தி கர்நாடக இசைக்குத் தொண்டு புரிந்த நாதஸ்வர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை சுவைபட தொண்ணூறு நிமிடங்களில் நமது க ண்முன் நிறுத்தினார் ஸ்ரீராம்.

எந்த ஒரு விழா துவங்குவதற்கு முன் மங்கள இசைக்கு நாதஸ்வரம் தான் இசைக்கப்படுகிறது. எந்த ஒரு சபாவின் மார்கழி உற்சவத்திற்கு முன் மங்கள இசை வாசிப்பு உண்டு. அதற்குப்பின் ஏதாவது ஒன்று இரண்டு கச்சேரி நடக்கும். அதன் பிறகு அவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் பிரத்யேகமாக நாதஸ்வர இசைக் கச்சேரி பெத்தாச்சி அரங்கில் வருடா வருடம் 10 நாட்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. உபயம் நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள். பிரபல நாதஸ்வர இசைக்கலைஞர்கள், இளம் கலைஞர்கள் இந்த வருட நாதஸ்வர இசை விழாவில் ஜனவரி 21-ல் இருந்து வாசித்தனர். ராக ஆலாபனை பூரணமாக கேட்க வேண்டும் என்றால் நாதஸ்வரம் வாத்தியம் மூலம் கேட்டால்தான் நிறைவுதரும். அரியக்குடி ஜி.என்.பி., செம்மங்குடி மஹாராஜபுரம் போன்ற சங்கீத மேதைகள் திருவாரூர், செம்பனார்கோவில் போன்ற இடங்களுக்குச் சென்று நாதஸ்வர இசைக் கலைஞர்களோடு அவர்கள் வாசிக்க, இவர்கள் தம் குரல் வள அகாரத்தை நாதஸ்வர ஒலிக்கு ஏற்றவாறு பயிற்சி கொடுப்பார்கள்.

நாதஸ்வர உலகில் முஸ்லிம் கலைஞர்கள் பிரகாசிப்பது, இசை என்ற மெய்ஞானம், மொழி, மதம் மற்ற பாகுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பது நிதர்சன உண்மை. ஷேக் சின்ன மௌலானா சாஹிப் இசை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தார். இப்போது அவரால் உருவாக்கப்பட்ட அவரது சந்ததியினர் அந்தக் கலையை பரப்பும் உன்னதப் பணியை ஏற்றுள்ளனர்.
சின்ன மௌலானாவின் பேரன்கள் காசிம், பாபு கச்சேரி கேட்க இனிமையாக இருந்தது. முதலில் தர்பாரியில் வர்ணம். அடுத்து எடுத்துக்கொண்டது சக்கரவாஹம் ராகம். போட்டிப் போட்டுக் கொண்டு இருவரும் பல சங்கதிகளை அழகாக அளித்தனர். ‘சதா சாரங்கா‘ என்ற பாடல் அற்புதமான ரஞ்சனி ராகத்தில் வாசித்தனர். ரஞ்சனி ராகத் தின் மிருதுவான குழைவுகள் நாதஸ்வரத்தில் தான் கொண்டுவர முடியும். மெய்மறந்து கேட்டோம். பிரதான ராகம் காம்போஜி, ‘எவரி மாட‘ தியாகராஜ கீர்த்தனை. விஸ்தாரமான ஆலாபனை. தேஷ், சிந்து பைரவி ராகங்களில் துக்கடா பாடல்கள் என்று கச்சேரி களைகட்டியது. தவில் சப்போர்ட் முத்துகுமாரசாமி மற்றும் தாராபுரம் மணிகண்டன். ‘தனி‘ நன்றாக இருந்தது மெத்தத்தில் அருமையான மங்களகரமான கச்சேரி.

பெண் நாதஸ்வர வித்வான் பார்ப்பது அரிது. நாதஸ்வர தம்பதி ஷேக் மெஹபூப் சுபானி, மனைவி கலாஷா பீ மெஹபூப் கச்சேரிக்கு நிச்சயமாக போக வேண்டும் எ ன்று முடிவு செய்தது நல்லதாய் போயிற்று. அவர்கள் இருவரும் ஷேக் சின்ன மௌலானாவின் சிஷ்யர்கள். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மோஹன ராகம் ஐந்து ஸ்வரங்கள்தான். அதில் தான் எத்தனை கமகங்களை நாதஸ்வரம் மூலம் இந்த தம்பதினர் போட்டிப் போட்டுக் கொண்டு உருவாக்கினார்கள்! ‘ந ன்னு பாலிம்பா‘ தியாகராஜர் கீர்த்தனை வாசித்தார்கள் ரம்மியமாக இருந்தது. அடுத்து ‘தாயே யாசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த’ என்ற ஊத்துக்காடு வெங்கடகவியின் அருமையான பாடல் ரசித்து வாசித்தனர். அசாத்திய வாசிப்பு, ராகத்தின் முழுபரிமாணமும் பாடலின் நயமும் வெளிவந்தது.

ஆந்திர மாநிலம் பிரகாசம், குண்டூர், கோதாவரி மாவட்டங்களில் நாதஸ்வர வாசிப்பு பிரபலம். இங்கிருந்து பல கலைஞர்கள் உருவாகியுள்ளார்கள். குல தெய்வம் முனி மண்டம்மா கருணையால் இந்த மாவட்ட மக்களுக்கு நாதஸ்வர இசை ஞானம் பெற்றிருக்கிறர்கள் என்று நம்பப்படுகிறது. கலாஷா கச்சேரிகளுக்கு குங்குமம் இட்டுக் கொண்டு வாசிக்கிறார். கோயில் திருவிழாக்களில் உற்சவர் புறப்பாட்டிற்கு ‘மல்லாரி‘ வாசிப்பதில் தேர்ந்தவர். முஸ்லிம் மத நிகழ்ச்சிகளுக்கு இஸ்லாமிய மத பாரம்பரிய உடை. ஆனால் நாதஸ்வரத்திலிருந்து வரும் இசை என்னவோ ஒன்றுதான்! இது தானே மத நல்லிணக்கத்திற்குச் சான்று! இந்த ஆஸ்ரய தம்பதியர் வாழ்த்துக்கு ரியவர்கள்.

(மங்கள இசை தொடரும்)
படங்கள் : ஆர்.சண்முகம்
thanks kumudam + devotee of chakrawarthi in washington dc

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக