சனி, 18 பிப்ரவரி, 2012

அழகிரி: சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்.. வெற்றி திமுகவுக்கே!


Azhagiri
சென்னை: சங்கரன் கோயில் இடைத்தேர்தலில் திமுக ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்போம் என்றும், திமுக வேட்பாளர் வெற்றி நிச்சயம் என்றும் மத்திய அமைச்சர் முக அழகிரி கூறினார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிட விரும்பும் தி.மு.க. வேட்பாளர்களுக்கான நேர்காணல், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி நேர்காணல் நடத்தினார். அன்பழகன், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, ஆற்காடு வீராசாமி, துரை முருகன், சற்குணபாண்டியன், வி.பி. துரைசாமி, கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 10 பெண்கள் உள்பட 41 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. பின்னர் நெல்லை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, “சங்கரன் கோவில் தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார்” என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் அன்பழகன், மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி உள்ளிட்டவர்களிடம் வாழ்த்து பெற்றார்.

அழகிரி பேட்டி

பின்னர் தென்மண்டல தி.மு.க. அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி நிருபர்களிடம் கூறுகையில், "தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்யும் தேதி குறித்து மாவட்ட செயலாளர் மற்றும் தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவு செய்வோம். அதன் பிறகு வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும். தி.மு.க. அரசு செய்த சாதனைகளையும், அ.தி.மு.க. அரசு செய்யாத சாதனைகளையும் சொல்லி ஓட்டு கேட்போம். காங்கிரஸ் ஆதரவு எங்களுக்கு உண்டு. அதனால்தான் நான் மத்திய அமைச்சராக இருக்கிறேன்.

சங்கரன் கோயில் இந்த முறை திமுகவுக்குதான்," என்றார்.

தி.மு.க. வேட்பாளர் ஜவகர் சூரியகுமார் நிருபர்களிடம் கூறுகையில், "சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட தி.மு.க. தலைவர் கருணாநிதி எனக்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார். அவருக்கு எனது நன்றி.

தேர்தல் பிரசாரத்தின் போது, தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளையும், முதல்- அமைச்சராக இருந்தபோது, கருணாநிதி புரிந்த சாதனைகளையும் மக்களிடம் சொல்லி ஓட்டு கேட்பேன். தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். வெற்றிக்கனியை தி.மு.க. தலைவர் காலடியில் சமர்ப்பிப்பேன்," என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக