வியாழன், 16 பிப்ரவரி, 2012

தேசபக்தியை மொத்த குத்தகை எடுத்திருக்கும் இந்துத்துவா கும்பல்


தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் தேசத் துரோக இந்துத்துவா கும்பல் முஸ்லிம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்வதை அம்பலப்படுத்தும் பாடல்









தேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல். நாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.


பாபர், தன் மகன் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற உயிலில் சொல்கிறார். ‘அருமை மகனே, வகை வகையான மதங்களை பின்பற்றுபவர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். நீ உனது மனதை குறுகிய மத உணர்வுகள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது. நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தக் கூடாது. பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.’ இது பாபர் தன் கைப்பட எழுதிய உயில். அர்ஜூனனுக்கு கண்ணன் செய்த கீதோபதேசம் போல புராணக் கட்டுக்கதை அல்ல.
எனினும் அந்த பாபர்தான் கோயிலை இடித்ததாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.
இவர்கள் பழைய வரலாற்றை மட்டுமா திரித்தார்கள்! வெள்ளையனுக்கு எதிராக வீரப் போர் புரிந்து இறந்த முஸ்லீம் போராளிகளின் தியாகத்தையும் மறைக்கிறார்கள், திரிக்கிறார்கள். போர்த்துக்கீசியரை கடற்போரில் வென்ற கேரளத்தின் குஞ்ஞாலி மரைக்காயரையும், முதல் இந்திய சுதந்திரப் போருக்கு தலைமை தாங்கிய மன்னன் பகதூர்ஷாவையும் எத்தனை பேருக்குத் தெரியும்? வெள்ளையர்கள் நடுநடுங்க வீரப் போர் புரிந்த பைசலாபாத் மௌல்வி அகமதுஷாவை வெள்ளையரிடம் கைக்கூலி வாங்கிக் கொண்டு சதி செய்து கொன்றவன் அன்றைய அயோத்தியின் இந்து மன்னன் ஜகன்னாத ராஜா, என்று யாருக்குத் தெரியும்?
முதல் சுதந்திரப் போருக்கு வித்திட்ட வேலூர் கோட்டைக் கலகத்திற்கு தலைமை தாங்கிய முஸ்லீம் தளபதிகள் சவுக்காலும் புளியம் விளாறுகளாலும் அடித்தே கொல்லப்பட்டது யாருக்குத் தெரியும்? பகத்சிங்கைப் போலவே தூக்கு மேடை ஏறிய அவன் தோழன் அஷ்வகுல்லாகானை யாருக்குத் தெரியும்?
தெரியக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறது ஆர்எஸ்எஸ் கும்பல். அதனால்தான் புராணப் புளுகுகளை உண்மை போல சித்தரிக்கும் தொலைக்காட்சியில் திப்புசுல்தானின் வரலாற்றை கற்பனைக் கதை என்று குறிப்பிடுகிறார்கள். இருட்டடிப்பு மட்டுமா, அந்தத் தியாகிகளை துரோகிகள் என்றும் தூற்றுகிறார்கள்.
அவர்களுடைய வாரிசுகளும் இந்த மண்ணின் மைந்தர்களுமான முஸ்லீம் மக்களை அன்னிய கைக்கூலிகள் என்று அவதூறு செய்கிறார்கள். எத்தனை பெரிய துரோகம், உங்கள் இதயம் வலிக்கவில்லையா, கண்கள் பனிக்கவில்லையா இந்த அநீதியைக் கண்டு?www.vinavu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக