செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

மெரினா: பசங்க மீது பச்சாதாபம், பெண்கள் மீது வெறுப்பு

தோனி, மெரினா படங்களாவது உங்களுக்கு பிடித்திருக்கிறதா?
-டி.விஜய், திருச்சி.
தோனி படம் பார்க்கவில்லை.
சென்னையை கிரிமனல்களின் கூடாரமாக, ஏமாற்றுக்கார்களின் புகலிடமாக சித்திரிக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையிலிருந்து விலகிய, ‘மெரினா’ ஒரு ஆறுதல்.‘வணக்கம் வாழ வைக்கும் சென்னை’ என்கிற முத்துக்குமாரின் வரிகளை எளிய மக்களின் வாழ்க்கையோடு காட்சிபடுத்தியிருந்தது பிடித்திருந்தது.மெரினாவில் வேலை செய்கிற சிறுவர்களின் சிரமத்தை, மகிழ்ச்சியை இயல்பாகவும், செயற்கையாகவும் கலந்து காட்டியிருந்தாலும் தவறாக ஒன்றும் தெரியவில்லை.

ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கர் விருது பெற்று ‘தந்த ஸ்லம் டாக் மிலினியர்’ படத்தில் மும்பை சிறுவர்களை மிக கேவலமாக சித்திரித்துக் காட்டியதோடு ஒப்பிட்டால் மெரினா அந்த படத்தை விட சிறப்புதான்.
ஆனால், படத்தில் ஆண்களை அப்பாவிகளாகவும், நல்லவர்களாகவும் பெண்களை ஏமாற்றுக்காரர்களாக, சந்தர்ப்பவாதிகளாக காட்டியதுதான் மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருக்கிறது.
ஒரே ஒரு பெண் காதாபத்திரம் கூட நல்ல பாத்திரமாக காட்டவில்லை.
நாயகி ஓவியா, நாயகனை ஏமாற்றித் தின்பதும், ஓவியாவின் செயலுக்கு அவர் தாயார் உடந்தையாக இருப்பதும்; ‘அப்பாவிற்கு தெரியவேண்டாம். அவருக்கு தெரிஞ்ச அவ்வளவுதான்..’ என்று காட்சியிலேயே வராத தந்தையை (ஆண்) நியாயமானவராக சித்திரிப்பதும்; நாயகி, காதலனை விடுத்து, வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு மெரினாவிற்கு வரும்போது, ‘நான் மெரினாவிற்கு வருவது இதுதான் முதல் முறை..’ என்று வசனம் பேசுவதும் நியாயமாக இல்லை.
நாயகன் வேறு பெண்ணை மெரினாவிற்கு கூட்டி வந்தபோதும், அந்த பெண்ணும் ஓட்டலுக்கு போய் சாப்பிடுவதற்காக அவரிடம் பேசுவதுபோல் காட்டுவதும்; ‘காதலில் பெண்கள் ஆண்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்’ என்றே அடையாளப்படுத்தப்படுகிறது.
திண்டுக்கலில் இருந்து மெரினாவிற்கு வரும் சிறுவனுக்கான பின்னணி, அவன் தாயார் அவனை தனியாக விட்டுவிட்டு வேறு ஒரு ஆணோடு ஒடிப்போனதாக சொல்வதும், முதியவர் பிச்சைக்காரனாக மாறியதற்கு மருமகளின் கடுமையான பேச்சு வசனமாக பெண் குரலில் ஒலிப்பதும்,
மெரினாவில் ஒரு ஆள் செல்போனில், ‘நான் உனக்காகதான் காத்திருக்கேன். சீக்கிரம் வாடி.. என்னது உன் புருசன் வீட்ல இருக்கானா? அவன கொன்னுட்டுவாடி’ என்று பேசுவதும் அப்பட்டமாக பெண்கள் மீதான காழ்ப்புணர்ச்சி காட்சிகளாக, வசனங்களாக இருக்கிறது.
மனநிலை பாதிக்கப்பட்டவராக வரும் பாத்திரம் இயக்குநர் பாண்டிராஜனின் மனசாட்சியாக தெரிகிறார்.
பெண்களை பாராட்டி காதலில் உருகும்போது, அதை காறித்துப்பி திட்டுவதும், பெண்களை திட்டும்போது அதை கைதட்டடி மகிழ்வதுமாக இருக்கிறார் பைத்தியக்காரன்.
குறிப்பாக, ‘பெண்கள் 100 சதவீதம் அழகானவர்கள் நீ அதுக்கும் மேல’ என்று சொல்லும்போது பக்கத்தில் அமர்ந்து அதை கேட்கிற மனநிலை பாதிக்கப்பட்டவர் காறி உமிழ்கிறார். ‘மொத்தததில் பெண்கள் 420’ என்று சொல்லும்போது கைதட்டி மகிழ்கிறார்.
‘அடிடா அவள.. குத்துற அவள..’ என்று பெண்களுக்கு எதிராக பாடல்கள் பிரபலமாகி கொண்டிருக்கும்போது, இதுபோன்ற காட்சிகள் மீண்டும் பெண்களுக்கு எதிரான வன்முறையை தூண்டும் காட்சிகளாக பயன்பட வாய்ப்புண்டு.
மெரினா படம் சொல்லவந்த விசயத்துக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத இதுபோன்ற காட்சிகளை. வசனங்களை தவிர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
mathimaran.wordpress.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக