புதன், 22 பிப்ரவரி, 2012

'ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா?பணயக் கைதி எம்.நடராஜன்?

ண்டை, சச்சரவு, பிரிவு, கைதுப் படலங்களுக்கு மத்தியில் பெங்களூருவில் நடந்து வரும் சொத்துக் குவிப்பு வழக்கும் அதிரடித் திருப்பங்களை எட்டி உள்ளது. நீதிப் போராட்​டமாக மட்டுமே இதுவரை கவனிக்கப்பட்ட வழக்கு, இப்போது பாசப் போராட்டமாகவும் மாறி இருக்கிறது.
'ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சில விஷயங்​களைச் சொல்லப் போகிறார்’ என்று ஒரு குரூப்பும், 'அவர் எந்தக் காலத்திலும் ஜெயலலிதாவுக்குஎதிராகப் பேச மாட்டார்’ என்று இன்னொரு குரூப்பும் சொல்லி வந்த நிலையில், கடந்த 18-ம் தேதி பெங்களூரு நீதிமன்றப் படிக்கட்டு ஏறினார் சசிகலா. அதே தினத்தில்தான் சென்னையில் நடராஜன் கைது செய்யப்பட்டார். 'சசிகலாவின் மனதை மாற்றுவதற்கு நடராஜன் முயற்சி செய்தது தெரிந்துதான் இந்தக் கைது நடந்துள்ளது’ என்று உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். 'சரியான வாக்குமூலத்தைக் கொடுப்​பதற்காகத்தான் நடராஜனைக் கைது செய்து பணயக் கைதியாக வைத்துள்ளார்கள்’ என்றும் சிலர் சொல்கிறார்கள். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் முறையான வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் எம்.நடராஜன், திவாகரன், ராவணன் ஆகிய மூவரது கைது நடவடிக்கைகளும் நடந்துள்ளது என்பது இவர்களது வாதம்.
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருக்கிறது. குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 313-ன் படி கடந்த அக்டோபர் மாதம் ஜெயலலிதா, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் நீதிபதி கேட்ட கேள்விகளுக்கு நான்கு நாட்கள் விளக்கம் அளித்தார். அடுத்து, சசிகலா விளக்கம் அளிக்க வேண்டும். 'சசிகலாவுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே, தமிழில்தான் அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று அவரது தரப்பில் மனு போடப்பட்டது. ஆனால், நீதிமன்றங்கள் அதை ஏற்கவில்லை.
அதனால், கடந்த 18-ம் தேதி பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார் சசிகலா. இதற்காக கடந்த 17-ம் தேதி மாலையே இளவரசி, தனது உதவியாளர் மற்றும் உறவினருடன் பெங்களூரு அட்ரியா ஓட்டலில் தங்கினார். காலை 10.30 மணிக்கு சுதாகரன், இளவரசி சகிதமாக கோர்ட் படி ஏறியவர் சோகமயமாகவே காணப்பட்டார். குற்றவாளிக் கூண்டில் அமர்ந்த சசிகலா முகத்தில் கூடுதல் பதற்றம் தெரிந்தது. சரியாக 11 மணிக்கு நீதிபதி மல்லிகார்ஜூனையா வந்தவுடன், 'தமிழில் பதிவு செய்யக் கோரும் எங்கள் அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இருக்கிறது. எனவே, தீர்ப்பு வரும் வரை வாக்குமூலம் பெறக் கூடாது’ என்று சசிகலா வக்கீல் மனு போட்டார். இதனைக் கடுமையாக ஆட்சேபித்த அரசுத் தரப்பு வக்கீல் ஆச்சார்யா, 'தனிக் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தச் சொல்லவில்லை. எனவே, இன்றே வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வேண்டும்’ என்று அழுத்தம் கொடுத்தார். அதனால், சசிகலா தரப்பின் கோரிக்கையைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி மல்லிகார்ஜூனையா.
அடுத்து, வாக்குமூலக் காட்சி அரங்கேறியது. நீதிபதிக்கு முன்னால் ஒரு டேபிளும் சேரும் போடப்பட்டு சசிகலா உட்கார வைக்கப்பட்டார். மொழிபெயர்ப்பாளரும் வழக்கறிஞருமான ஹரீஸ், சசிகலாவுக்கு முன்பு அமர்ந்து, நீதிபதி ஆங்கிலத்தில் கேட்கும் கேள்விகளைத் தமிழில் மொழிபெயர்த்து சசிகலாவிடம் சொன்னார். சசிகலா தமிழில் கூறும் பதிலை ஆங்கிலத்தில் நீதிபதியிடம் கூற, அப்போதே நீதிபதி பதிவு செய்துகொண்டார். கோர்ட் எழுத்தர் பிச்சமுத்து, நீதிபதியின் கேள்விகளையும் சசிகலாவின் பதில்களையும் அருகில் இருந்தே எழுதிக்கொண்டார்.
சசிகலா ஒவ்வொரு முறை பதில் அளித்த பிறகும் அந்தப் பதிலை, சசிகலாவின் வக்கீலிடம் ஆங்கிலத்தில் வாசித்துக் காட்டி உறுதிப்படுத்திக்கொண்டார் நீதிபதி. மொழிபெயர்ப்பில் ஏதேனும் தவறு இருந்தால், உடனே தவறுகள் சரி செய்யப்பட்டன. சசிகலாவும் கூடுதல் கவனத்தோடு, தனது பதில்களையும், கேள்விகளையும் எழுதிக்கொண்டார். அவரது உதவியாளரும், ஜூனியர் வழக்கறிஞர்களும் எழுதிக்கொண்டே இருந்தனர்.
சசிகலாவுக்குக் கண் வலி மிக நீண்ட காலமாகவே இருக்கிறது. எனவே, அவர் அடிக்கடி கண்ணைத் துடைத்துக் கொண்டே இருந்தார். அதை அழுகை என்று பலரும் தவறாக எடுத்துக்கொண்டார்கள். சசிகலா மிகவும் மெதுவாகவே பேசினார். நீதிபதியின் கேள்விகளை ஒரு முறைக்கு இரண்டு முறை தெளிவாகக் கேட்ட பின்னரே, 'எழுதிக்கோங்க’ என மொழி பெயர்ப்பாளர் ஹரீஸிடம் கூறிவிட்டு, தனது வக்கீல் அணி தயாரித்துத் தந்த பதிலை, கவனமாக வாசித்தார். ஒவ்வொரு முறை ஜெயலலிதா பெயரைச் சொல்லும் போதும் 'செல்வி ஜெயலலிதா’ என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார். பதில் அளித்த பின்னர் தனது வக்கீலைப் பார்ப்பதும், கொஞ்சம் தள்ளி குற்றவாளிக் கூண்டில் அமர்ந்து இருந்த சுதாகரனைப் பார்ப்பதுமாக இருந்தார். வழக்கமாக, வாட்ச் அணிந்திருக்கும் சசிகலா, இம்முறை மந்தரித்த சிவப்புக் கயிறு கையில் கட்டி இருந்தார். அதனால், ரொம்பவே சிரமப்பட்டு பின்னால் திரும்பி, 'இன்னும் டைம் ஆகலையா’ என்று வக்கீலைக் கேட்டுக்கொண்டே இருந்தார்.
காலை 11.30 மணிக்கு ஆரம்ப​மான கேள்விகள், மதியம் 2 மணி வரை நீடித்தது. அதுவரை 25 கேள்விகளுக்கு மட்டுமே பதில் அளித்திருந்தார். ஜெயா பப்ளி​கேஷன், சசி எண்டர்பிரைசஸ், நமது எம்.ஜி.ஆர்., சிக்னோரா என்டர்பிரைசஸ் நிறுவனங்களின் வர்த்தகப் பண பரிவர்த்தனை பற்றிய கேள்விகளுக்குநீண்ட பதிலை விளக்கமாகச் சொன்னார்.
நிறுவனங்களின் கேள்விகளுக்​கான பதில்களில், ''செல்வி ஜெயலலிதா, செயல்படாத பங்கு​தாரராகவே இருந்தார். அவருக்கு ஒன்றும் தெரியாது. எல்லாவற்றையும் நானே கவனித்து வந்தேன். எனவே, அவருக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது' என்பதை அழுத்தமாகவே குறிப்​பிட்டார். இதனை எல்லாம் ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார் கவனமாகக் குறித்துக்கொண்டு, சில வார்த்தைகளுக்கு சரியான ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தக் கோரினார்.
கேள்விகளுக்கு பதில் அளிக்​கையில் தண்ணீர்கூட குடிக்காததால், சோர்வு அடைந்தார் சசிகலா. அவருக்கு அட்ரியா ஹோட்டல் சாம்பார் சாதம் தயாராக இருந்தது. உணவு இடைவேளை முடிந்து சரியாக 3 மணிக்கு கோர்ட் கூடியது. மீண்டும் கேள்விகளை கோர்ட் முடுக்கிவிட, 'ஆம்’ 'இல்லை’ 'எனக்குத் தெரியாது’ போன்ற ஒரு வரி பதில் செஷனாக இருந்தது. சரியாக 4 மணி ஆகும்போது குறுக்கிட்ட சசிகலாவின் வக்கீல் மணிசங்கர், 'நாங்கள் சென்னையில் இருந்து வரும்போதே, இன்று மாலை 6 மணிக்கு ஃபிளைட் டிக்கெட் புக் பண்ணிவிட்டோம். எனவே, இப்போது கிளம்பினால்தான் சரியாக இருக்கும். மீதம் இருக்கும் கேள்விகளை அடுத்த வாரம் கேட்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
'வரும் திங்கள்கிழமை ஓகேவா?’ என்று நீதிபதி கேட்க, 'திங்கள்கிழமை சிவராத்திரி. அரசு விடுமுறை’ என்று சசிகலா தரப்பில் கூறப்பட்டது. 'செவ்வாய்?’ என நீதிபதி கொக்கி போட, 'நைட் எல்லாம் சிவராத்திரியில் விழித்திருக்க வேண்டும். கோர்ட்டுக்கு வர முடியாது’ என்று பதில் வந்தது. அப்போது கோர்ட் சிரிப்பில் மிதந்தது.
உடனே எழுந்த ஜெயலலிதாவின் வக்கீல் பி.குமார், ''நாங்கள் வேறு மாநிலத்தில் இருந்து வருகிறோம். எங்களுக்கு இந்த ஊர் ஹோட்டல் உணவு செட் ஆகாது. அப்படியே தொடர்ந்து சாப்பிட்டால் சிக் ஆகி விடுவோம். அப்புறம் வழக்கை நடத்த முடியாது. அதுமட்டுமின்றி, சென்னையில் நிறைய கோர்ட் வேலைகள் இருக்கின்றன. எனவே, விசாரணையை இடைவெளிவிட்டு நடத்த வேண்டும்'' என்று சீரியஸாகச் சொல்ல, இதற்கும் கோர்ட் முழுவதும் சிரிப்பலை. நீதிபதி மல்லிகார்ஜூனையாவின் முகத்திலும் சிரிப்பு ரேகைகள்.
உடனே, சுதாகரனின் வக்கீல் சரவணகுமார் எழுந்து, ''ஆமாம். சுதாகரனுக்கு சென்னையிலும் வழக்கு இருக்கிறது. இந்த ஊர் ஹோட்டல் உணவை எப்படித் தொடர்ந்து சாப்பிட முடியும்? அது மட்டும் இல்லாமல் சீனியர் அட்வகேட்டான ஆச்சார்யாவுக்கும் நிறைய வேலை இருக்கும்'' என்று கூறினார்.
''எனக்கு வேலை இருப்பதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்'' என்று எழுந்த ஆச்சார்யா, ''இதுபோன்ற சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் கோர்ட்டின் நேரத்தை வீணடிக்கக் கூடாது. இது கோர்ட்டை அவமதிக்கும் செயல். வழக்குக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டே கூறி இருக்கிறது' என்று ஆவேசமாகவாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மல்லிகார்ஜூனையா, வரும் 23-ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தார்.
ஒரே நாளில் ஜெயலலிதாவிடம் 400 கேள்விகள் வரை கேட்கப்பட்டது. ஆனால் சசிகலாவிடமோ 40 கேள்விகள்தான் கேட்க முடிந்தது.
மீடியாக்கள் எவ்வளவோ கேள்விகள் கேட்டார்கள். எதற்கும் பதில் சொல்லாமல் கார் ஏறினார் சசிகலா. சுதாகரனைக் கேட்டபோது, ''நோ கமென்ட்ஸ்'' என்று சொல்லிச் சென்றார். திடீரென ஒரு டி.வி. கேமராமேன், ''உங்க பேர் என்ன சார்?'' என்று எடக்குமடக்காகக் கேட்க முறைத்தபடி கார் ஏறினார் சுதாகரன்.
- இரா.வினோத், படங்கள்: ரவிராஜ்
''செல்வி ஜெயலலிதாவுக்குத் தொடர்பு இல்லை!''
நீதிபதி மல்லிகார்ஜூனையா கேட்ட கேள்விகளுக்கு சசிகலா அளித்த சில பதில்கள்.
''இதயம் பேசுகிறது பப்ளிகேஷன் நிறு​வனத்தின் தலைவர் மணியனுக்குச் சொந்த மான நிலத்தை, ரூ 12 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து, ஜெயா பப்ளிகேஷனுக்காக ஜெயலலிதாவும் நீங்களும் வாங்கினீர்களா?''
''ஜெயா பப்ளிகேஷன் என்பது ஒரு கூட்டு நிறுவனம். அதை நான் நிர்வகித்து வருகிறேன். இந்த நிறுவனம் தொடர்பான எந்தப் பரிவர்த்தனையிலும், அலுவலிலும் செல்வி ஜெயலலிதா ஈடுபட்டது இல்லை. ஜெயலலிதா இந்த நிறுவனத்தில் செயல்படாத பங்குதாரராக மட்டுமே இருக்கிறார். நிறுவனத்தின் வங்கிக் கணக்கு உட்பட அனைத்துக்கும் நான்தான் பொறுப்பு. அந்த நிலத்தை ஜெயா பப்ளிகேஷன் நிறுவனம் என்ற பெயரில் பதிவு செய்துள்ளேன்.''
(இதனை, மொழி பெயர்ப்பாளர் ஹரீஸ், 'டார்மென்ட் பார்ட்னர்’ என்று கூற, ஜெ. வக்கீல் பி.குமார், 'சைலன்ட் பார்ட்னர்’ என்று திருத்தினார்)
''இந்தச் சொத்து வாங்கியதற்கு பணம் எப்படிக் கொடுக்கப்பட்டது?''
''ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு மயிலாப்பூரில் கனரா வங்கி, அபிராமபுரத்தில் இந்தியன் வங்கி ஆகியவற்றில் கணக்கு இருக்கிறது. கனரா வங்கி மூலம் 2.60 லட்சம் ரூபாயும் இந்தியன் வங்கி மூலம் 10 லட்சம் காசோலையாகவும் வழங்கினோம். ஜெயா பப்ளிகேஷன் மூலம் நடத்திவரும், நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் சந்தாதாரார் மூலமாக 6 லட்சமும் வழங்கினோம். இந்தப் பணம் விளம்பரம் மற்றும் அச்சுக் கட்டணம் மூலம் கிடைத்தது.''
''ஜெயா பப்ளிகேஷன் நிறுவனத்துக்கு டான்சி நிலத்தை வாங்கியது எப்படி?''
''டான்சி நிறுவனத்தின் இயக்குந‌ர் சீனிவாசன், திரு.வி.க. தொழிற்பேட்டையில் 55 கிரவுண்ட் நிலத்தைத் தாமாக முன்வந்து வழங்கினார். அதற்குரிய பத்திரப்பதிவுச் செலவை நாங்கள் செலுத்தினோம். இதற்காக, இந்தியன் வங்கியில் 10 கோடி ரூபாய் கடன் பெற்றோம். ஜெயா பப்ளிகேஷனில் வந்த லாபத்தையும் விளம்பரக் கட்டணத்தையும் சேர்த்து செலவு செய்தோம்.
7.10.1992 அன்று டான்சி நிலம், சசி எண்டர்பிரைசஸ் சார்பாக எனது பெயருக்குப் பதிவு செய்யப்பட்டது. சசி எண்டர்பிரைசஸின் பங்குதாரர் என்ற முறையில் அதன் நிர்வாக இயக்குனர் பொறுப்பை நான் கவனித்தேன். அதில் செல்வி ஜெயலலிதாவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. அலுவலக ரீதியாகக்கூட அவருக்குத் தொடர்பு இல்லை. சசி எண்டர்பிரைசஸ் பெயரில் பதிவு செய்யப்பட்ட 75 லட்சத்தை சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலும், நமது எம்.ஜி.ஆர். சந்தா மூலம் 5 லட்சமும், ஜெயா பப்ளிகேஷன் கணக்கில் இருந்து 20 லட்சமும் எடுக்கப்பட்டது.''
''எண்.21 பத்மநாபன் தெரு தி.நகர் வீட்டை, சந்தை மதிப்பைவிட‌க் குறைவான விலைக்கு உங்களுக்காக சுதாகரன் வாங்கியது உங்களுக்குத் தெரியுமா?''
''அதுபற்றி எனக்குத் தெரியாது.'' (இது போன்ற ஓரிரு வார்த்தைப் பதில்களை ஹரீஸ் எழுதாதபோது, 'இதையும் எழுதிக்கோங்க. நீங்க எழுதலைன்னா எப்படி?’ என்று சொன்னார் சசிகலா.)
THANKS VIKATAN + SASIVARNA THEVAR TOKYO

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக