வெள்ளி, 24 பிப்ரவரி, 2012

டில்லிக்கு இத்தாலியின் தடாலடி!இந்திய மீனவர் கொலை

இத்தாலியக் கப்பலில் இருந்து இந்திய மீனவர் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர முறுகலை ஏற்படுத்தும் கட்டத்துக்கு சென்றுள்ளது.
கேரள மாநில போலீஸ் இந்த விவகாரத்தில் யாரையும் கைது செய்வதற்கோ, இந்திய நீதிமன்றம் ஒன்று விசாரணை நடத்துவதற்கோ அதிகாரம் ஏதும் கிடையாது என்று இத்தாலிய அரசு இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
இந்திய மீனவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டுள்ள இரு இத்தாலியக் கடற்படையினரின் சார்பில் இத்தாலிய அரசு, கேரள ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமது கடற்படையினர் மீது இந்த விவகாரத்தில் இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும், இந்திய மீனவர்களை கொல்வதற்கு உபயோகிக்கப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிகள் தொடர்பான சோதனைகளுக்கு நிபந்தனையுடன் கூடிய ஒத்துழைப்பு வழங்க தாம் தயாராக இருப்பதாக இத்தாலிய அரசு கூறியுள்ளது. நிபந்தனை என்னவென்றால், துப்பாக்கிகளை சோதனையிடும்போது, இத்தாலிய அரசுப் பிரதிநிதியும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும் என்பதே.
இத்தாலிய கடற்படையினர் மீது இந்தியாவில் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என்று இத்தாலிய அரசு எதை வைத்துக் கூறுகிறது?
இந்த துப்பாக்கிச் சூடு, கேரளாவின் கொல்லம் கடற்கரையில் இருந்து 22.5 கடல் மைல்கள் தொலைவில் நடைபெற்றது என்பது இத்தாலிய அரசின் ஸ்டான்ட். இந்தியக் கரையில் இருந்து கடலுக்குள் 22.5 கடல் மைல்கள் சென்றால், அந்தக் கடல் பகுதி, சர்வதேச கடல் பகுதி ஆகிவிடுகிறது. சர்வதேச கடல் பகுதியில் இந்தியாவுக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதே கேரளா கோர்ட்டில் இத்தாலிய அரசு முன்வைத்துள்ள வாதம்.
மத்திய அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த சங்கடத்தில் உள்ளது. காரணம், இத்தாலிய அரசு, இந்த விவகாரத்தை லேசில் விடுவதாக இல்லை. தமது கடற்படையினர் இருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ள விஷயத்தை அறிந்தவுடன் இத்தாலிய அரசு தமது துணை வெளியுறவு அமைச்சரையே இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இத்தாலிய துணை வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபன் டி மிஸ்துரா, இந்தியாவில் தங்கியிருந்து இந்த விவகாரத்தில் நேரடிக் கவனம் செலுத்துகிறார்.
தற்போதுள்ள நிலையில் இந்திய அரசு, இத்தாலியுடன் ராஜதந்திர முறுகலை வைத்துக் கொள்ள விரும்பவில்லை. இத்தாலியுடன் மோதினால் இந்தியாவுக்கு என்னாகும்?
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர அங்கத்துவம் பெறுவது முதல், ஐரோப்பிய ஒன்றியத்தின் இறக்குமதி வரிவிதிப்பு சலுகை பெறுவது வரை, பல விவகாரங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு சாதகமாக வாக்களிக்க முன்வராமல் போகலாம். இத்தாலியர்கள் எந்த விஷயத்திலும் தமக்கு ஆதரவாக ஆள் சேர்ப்பதில் கில்லாடிகள்.
என்ன செய்வது என்று தெரியாமல் கைகளை பிசைந்து கொண்டு இருக்கிறார் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா!
www.viruviruppu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக