புதன், 1 பிப்ரவரி, 2012

கவர்னர் ஆட்சியில் தேர்தலை நடத்துங்க, நான் சந்திக்கத் தயார்-விஜயகாந்த் பதில் சவால்

சங்கரன்கோவிலுக்கு கவர்னரின் ஆட்சியின் கீழ் இடைத் தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தனித்துப் போட்டியிடத் தயார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பதில் சவால் விட்டுள்ளார்.
அதிமுக, தேமுதிக இடையிலான மோதல் பெரிய அளவில் வெடித்துள்ளது.மிக மிக குறுகிய காலத்திற்குள் உடைந்து சிதறிப் போயுள்ள இந்த வித்தியாச கூட்டணி இப்போது அரசியல் அரங்கில் புதிய நாடகங்களை அரங்கேற்றத் தயாராகி வருகிறது என்பதை இன்றைய அரசியல நிகழ்வுகள் காட்டுகின்றன.
சட்டசபையிலிருந்து இன்று விஜயகாந்த்தும், அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து வெளியே வந்த விஜயகாந்த்தை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டு உள்ளே நடந்தது குறித்துக் கேட்டனர்.
அதற்கு விஜயகாந்த் பதிலளிக்கையில், எங்களது உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க சபையில் உரிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு எங்களது உறுப்பினர் சந்திரகுமார் பேசிக் கொண்டிருக்கும்போது அமைச்சர்கள்தான் இடை இடையே குறுக்கிட்டுப் பேசினர்.

சந்திரகுமார் பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு குறித்துப் பேசும்போது முதல்வர் வேறு எதையோ பேசினார். இதனால் நானும் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

நிதியமைச்சர் ஓபிஎஸ்ஸும், வருவாய்த்துறை அமைச்சராக இருக்கிற செங்கோட்டையனும் சொன்னாங்க, நாங்க வந்து உள்ளாட்சித் தேர்தலில் தனியாக ஜெயித்தோம் என்று சொன்னாங்க. ஊர் கூடித்தானே தேர் இழுக்க வேண்டும். ஊர் கூடித்தானே சட்டசபைத் தேர்தலின்போது தேர் இழுத்தோம். அதை அவங்க மறந்துட்டாங்க.

இவங்க மட்டும் தனியா போயிருந்தா, உண்மை நிலை தெரிந்திருக்கும். மக்களுக்கும் அவங்களோட பலம் தெரிந்திருக்கும். அது தெரியாமல் நாங்களாக ஜெயித்தோம் என்று கூறினால் எப்படி.

போன ஆட்சியில் நடந்த ஒரு இடைத் தேர்தலில் கூட அதிமுக ஜெயிக்கவில்லை. பென்னாகரத்தில் டெபாசிட்டே வாங்கவில்லை. ஏன் முன்பு முதல்வராக இருந்த ஜெயலலிதாவே ஒரு தொகுதியில் தோற்றாரே. அது மறந்து விட்டதா.

மந்திரி பேசுகிறார் உட்கார் என்கிறார்கள். ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் நாங்கள் எதையுமே பேசக்கூடாது என்றால் எப்படி. எதிர்க்கட்சித் தலைவர் என்று எனக்கு அந்தஸ்து கொடுத்து விட்டு பேசக் கூடாது என்றால் எப்படி. இதை என்ன சொல்வது.

நான் பேசும்போது ஆளுங்கட்சித் தரப்பில் ஒருவர் சத்தமாக பேசினார். என்னய்யா கையை நீட்டிப் பேசுறே என்று நான் கேட்டால் அதைத் தப்பு என்கிறார்கள். கையை நீட்டிப் பேசினால் எங்க ஆளுங்களும் சும்மா இருக்க மாட்டாங்க. யாருமே சும்மா இருக்க மாட்டாங்க.

தனியா நிக்கிறீங்களான்னு கேட்டாங்க. நாங்க தயார். கவர்னர் ஆட்சியின் கீழ் தேர்தலை வையுங்க, நாங்க சந்திக்கத் தயார். நாங்க தனியாக நிற்க அஞ்சியதில்லை. 2006 தேர்தலில் இவங்கதான் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தப்புன்னு சொன்னாங்க. இப்போது ஏன் மெளனம் சாதிக்கிறாங்க என்று கேட்டார் விஜயகாந்த்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக