செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

சங்கரராமன் கொலை வழக்கு: உயர்நீதிமன்றம் தீர்ப்பு


சென்னை, பிப். 27- காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்குத் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் சைபர் கிரைம் காவல்துறையினரைக் கொண்டு விசாரிக்க தமிழக டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.
2004 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் வரதராச பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்.

இக்கொலையில் சம்பந்தப்பட்ட சங்கராச்சாரி ஜெயேந்திரர்  சிறையில் அடைக்கப்பட்டார்.
பிறகு பிணையில் வெளிவந்த சங்கராச்சாரியார்,
தமிழகத்தில் இவ்வழக்கு நடைபெற்றால் ஒரு சார்பாக நடைபெறும் என்று தெரிவித்ததால், புதுவை மாநிலத்தில் இக்கொலை வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது.

இவ்வழக்கிற்கு நீதிபதியாக இருக்கும் இராமசாமியோடு ஜெயேந்திரர் தொலைப்பேசியில் உரையாடியது வெளிவந்து மிகப்பெரிய சர்ச்சையைக் கிளப்பியது.


நீதிபதி இராமசாமி இக்கொலை வழக்கினை விசாரிக்கக் கூடாது என்று சுந்தரேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  வழக்குத் தொடர்ந்தார்.

பிறகு சங்கரராமன் கொலை வழக்கிற்கு தடை விதிக்கப்பட்டு, விஜிலென்ஸ் பதிவாளர்மூலமாக விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இன்று இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இக்கொலை வழக்குத் தொடர்பாக சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் நீதிபதி இராமசாமியோடு உரையாடினாரா என்பது குறித்து விசாரிக்க சைபர் கிரைம் காவல்துறையினர் கொண்டு விசாரிக்க டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டனர் நீதிபதிகள்.

மேலும், புதிய நீதிபதியைக் கொண்டு புதுவை மாநிலத்தில் கொலை வழக்கு விசாரணையைத் தொடரவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக