செவ்வாய், 21 பிப்ரவரி, 2012

பரிசுப் பொருள் வழக்கு: ஜெ. உள்பட 3 பேருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

முதல்வர் ஜெயலலிதா மீதான பரிசுப் பொருள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கூறி சிபிஐ தாக்கல் செய்த மனுவை ஏற்று இது குறித்து விளக்கம் கேட்டு அவருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 1992ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவருக்கு பரிசாக ரூ. 2 கோடி அளவுக்கு காசோலைகள் கொடுக்கப்பட்டன.
இவற்றை தனது வங்கி கணக்கில் ஜெயலலிதா சேர்த்துக் கொண்டதாக சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தது.
சுமார் 2 கோடி மதிப்புள்ள காசோலைகளை தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் ஜெயலலிதா, அப்போதைய அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு (இவர் இப்போது திமுகவில் இருக்கிறார்) ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
இந்த வழக்கு சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்று 3 பேரும் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அதே சமயம், 10 ஆண்டுகள் காலதாமதத்துடன் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்று உயர் நீதிமன்றம் வழக்கை 30-9-2011 அன்று ரத்து செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கை விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மனு நீதிபதிகள் அல்டமாஸ் கபிர் மற்றும் எஸ்.எஸ்.நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இது குறித்து விளக்கம் கேட்டு முதல்வர் ஜெயலிலதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இது குறித்து ஜெயலலிதா, செங்கோட்டையன் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் இன்னும் 4 வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

1992ல் ஜெயலிலதாவுக்கு காசோலை கிடைத்தாலும் அது 1996ம் ஆண்டில் தான் வருவாய்த்துறையின் கவனத்திற்கு வந்தது என்றும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இது குறித்து விசாரணை நடத்தியதால் தான் கால தாமதம் ஆனதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் இந்த பணம் சட்டவிரோதமாக வந்துள்ளதாகவும் அது தெரிவி்ததுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக