செவ்வாய், 17 ஜனவரி, 2012

Velmurugan:ராமதாஸ் பேச்சை தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டு

பா.ம.க.வில் இருந்து வெளியேற்றப் பட்டதும், வேல்முருகனுக்குக் கிடைத்த ஆதரவு ராமதாஸே எதிர்பாராதது. கட்சியில் இருந்து விலகி மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், புதிதாக கட்சித் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார் வேல்முருகன்.
வன்னியர் மக்கள் அதிகம் நிறைந்த கடலூர் மாவட்டம் ‘தானே’ புயலால் தலைகுப்புறக் கிடக்க, அவர்களுக்கு உதவி செய்ய பா.ம.க.வினர் ஒருவரையும் காணோம். வேல்முருகன் மட்டும் மோட்டார் சைக்கிளில் பரபரப்பாக சுற்றிக்கொண்டே நிவாரணப் பணிகளில் மக்களோடு மக்களாக இருக்கிறார். அவரை சந்தித்தோம்...
புதிய கட்சியைத் தொடங்கும் வேலைகள் எப்படி இருக்கிறது? பா.ம.க.வினர் யாராவது உங்களோடு வருகிறார்களா? ‘‘பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் எங்களோடு இருப்பார். கடலூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பலர் எங்கள் கட்சியில் சேர இருக்கிறார்கள். தவிர, தென் மாவட் டங்களில் பல்வேறு கட்சியிலிருந்தும் பலர் சேர விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் எந்தக் கட்சியையும் சாராத தமிழின உணர்வாளர்களும் எங்கள் கட்சியில் சேர ஆர்வம் தெரிவித்துள்ளனர்.’’

‘எங்களோடு சேருங்கள்’ என வேறு கட்சிகளில் இருந்து உங்களுக்கு அழைப்பு வந்ததா?

‘‘மாநிலக் கட்சிகள் மட்டுமில்லாமல் தேசியக் கட்சிகளிலிருந்தும் எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் எனக்கு விருப்பமில்லை. எங்கள் புதிய கட்சி, தமிழகத்தில் உள்ள மற்ற கட்சிகளோடு பகைமை கொள்ளாமல் நட்புணர்வோடுதான் இருக்கும்.’’

நீங்கள் ஆரம்பிக்கப்போகும் கட்சியில் வன்னியர்களுக்கு மட்டும்தானா முக்கியத்துவம்?

‘‘வன்னியர் சமுதாயம் தமிழகத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே, அவர்களுக்காகவும் தமிழகத்தில் உள்ள மற்ற பாதிக்கப்பட்ட சாதி மக்களுக்காகவும் எங்கள் கட்சி பாடுபடும். அது தவிர, தமிழக நதிநீர்ப் பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, மீனவர் பிரச்னைகளில் தீவிரமாக கவனம் செலுத்துவோம். ஈழப் பிரச்னையிலும் எங்கள் கட்சியின் குரல் ஓங்கி ஒலிக்கும். தற்போது கடலூர் மாவட்டம் பெரிய சேதத்திற்கு உட்பட்டிருக்கிறது. அவர்களது வாழ்க்கையை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதுதான் எங்கள் கட்சியின் முதல் வேலை.’’

இதற்கு முன் பா.ம.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை. உங்கள் தனிக் கட்சி தாக்குப்பிடிக்குமா?

‘‘பா.ம.க.விலிருந்து எத்தனையோ தலைவர்களை ராமதாஸ் வெளியேற்றியிருக்கிறார். ஆனால் கட்சிக்காரர்களும் ஊடகங்களும் எனக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, தமிழகத்தில் பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன். என்னைப் புரிந்து கொண்டவர்களும், நேசித்தவர்களும் ஏராளம். ஆகவே, எனக்கு ஆதரவளித்தவர்கள் எங்களது புதிய கட்சியையும் ஆதரிப்பார்கள் என நம்புகிறேன்.’’

ஒரு கட்சியை வெற்றிகரமாக நடத்த வசதி வேண்டுமே?

‘‘லட்சக்கணக்கான மக்களைத் திரட்டி, ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக கட்சியை ஆரம்பிக்கப் போகிறோம். மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடுவோம். ஏற்கெனவே இதேபோல் என்.எல்.சி. பிரச்னைக்காகப் போராடினேன்; உரிமை களை பெற்றுக் கொடுத்தேன். ஈழத்தில் நடந்த கொடுமைகளை துணிச்சலோடு சட்டமன்றத்தில் பேசியிருக்கிறேன். என்னிடம் உண்மையான உழைப்பும், நேர்மையும், துணிவும், சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும் உள்ளது. கட்சி நடத்த பணத்திற்காக யாரிடமும் வசூல் செய்ய மாட்டேன். என்னுடைய தொண்டர்கள் மூலமாக நிதி திரட்டி கட்சியை நடத்துவேன். ஆகவே பணம் ஒரு பிரச்னையே இல்லை.’’

உங்கள் கட்சியின் எதிர்கால திட்டம் என்ன?

‘‘முதலில் தமிழகம் முழுவதும் எங்கள் கட்சியை பலப்படுத்த வேண்டும். இளைஞர் அணி, மாணவர் அணிகளை உருவாக்குவது, தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைப்பது, விவசாயிகளை அணி திரட்டுவது, மீனவர்களை ஒருங்கிணைப்பது என பல்வேறு தளங்களில் எங்களின் கவனம் இருக்கும். இப்படி மக்களை ஒருசேர அணி திரட்டிய பின்புதான் தேர்தலைச் சந்திப்பது பற்றி முடிவெடுப்போம். கண்டிப்பாக எங்கள் கட்சி இரண்டு ஆண்டுகளில் வரும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும்.’’

ராமதாஸ் ‘திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே வைக்கமாட்டேன்’ என்று கூறியிருக்கிறாரே?

‘‘ராமதாஸ் பேச்சை தண்ணீரில்தான் எழுதி வைக்க வேண்டும்! பென்னாகரம் இடைத் தேர்தலில், ‘இனி எந்த திராவிடக் கட்சிகளுடனும் கூட்டணி இல்லை’ என்று சத்தியம் செய்து வாக்கு கேட்டார். ‘தி.மு.க.வை அழிப்பதுதான் என்னுடைய முதல் வேலை’ என்றார். ஆனால், தனது மகன் அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று என்னையும் ஜி.கே.மணியையும் விட்டு பேசச் சொன்னார். தி.மு.க.வினர் சொன்னபடி அன்புமணிக்கு ராஜ்யசபா சீட் தரவில்லை. உடனே கருணாநிதியை மோசடிப் பேர்வழி, நம்பிக்கை துரோகி என்றெல்லாம் அர்ச்சனை செய்தார் ராமதாஸ். சட்டமன்றத் தேர்தலில் பணம் தருகிறோம் என்று தி.மு.க. சொன்னதும் அவர்களோடு மீண்டும் கூட்டணி வைத்துக்கொண்டார். ஆகவே, அவருக்கு எது பிரதானம் என்பது அவரது மனசாட்சிக்குத் தெரியும்’’.

சங்கரன்கோயில் இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், அதில் போட்டியிடப் போகிறீர்களா?

‘‘தென் மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களைக் கேட்ட பிறகே அதுகுறித்து முடிவெடுப்போம்.’’

ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது பற்றி?

‘‘ராமதாஸ் மீது போடப்பட்டுள்ள வழக்கு உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. என்னைப் பொறுத்தவரையில் தவறு செய்யாதவர்கள் தண்டிக்கப்படக் கூடாது. அதே நேரத்தில் தவறு செய்திருப்பது நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை அவர்கள் அனுபவித்துதான் ஆகவேண்டும்.’’

படங்கள் : கணேஷ்
thanks kumudam + raju ipoh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக