வியாழன், 26 ஜனவரி, 2012

எம்.எல்.ஏ.,விடம் விசாரணை அதிகாரி பவ்யம் குற்றம்சாட்டப்பட்ட MLA

திருச்சி மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது இரண்டாவது திருமணம் செய்து பணம், நகை மோசடி செய்ததாக பெண் டாக்டர் கொடுத்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் உதவி கமிஷனரின், "பவ்யமான' செயல்பாடுகளால், விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, எம்.எல்.ஏ., பரஞ்ஜோதி மீது, தேர்தலுக்கு முன் அரசு பெண் டாக்டர் ராணி பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்."பரஞ்ஜோதி தன்னை இரண்டாவது திருமணம் செய்து, தன்னிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகையை வாங்கி ஏமாற்றி விட்டார்' என்று அவர் புகார் கூறினார். ஆனால், அந்த புகார் எடுபடவில்லை. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பரஞ்ஜோதி, இந்து அறநிலைத் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றார்.
அதன்பின், போலீசில் பரஞ்ஜோதி குறித்து டாக்டர் ராணி புகார் செய்தார். புகாரை போலீசார் ஏற்கவில்லை. இதையடுத்து ராணி, திருச்சி ஜே.எம்., 4 நீதிமன்றத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில், விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த டிசம்பர் 7ம் தேதி சட்டத்துறை அமைச்சராக இருந்த பரஞ்ஜோதி உள்ளிட்ட மூவர் மீது, பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் விமர்சனத்துக்கு இடம்கொடுக்காத வகையில், உடனடியாக பரஞ்ஜோதியை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயலலிதா நீக்கி உத்தரவிட்டார். பரஞ்ஜோதி மீதான வழக்கு விசாரணை அதிகாரியாக, ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் வீராச்சாமி உள்ளார். இவர் தலைமையில் தான் புகார் கொடுத்த பெண் டாக்டர் ராணி, அவர் தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன்பின், ஒருமுறை எம்.எல்.ஏ.,வாக இருக்கும் பரஞ்ஜோதியிடம் விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. பரஞ்ஜோதி மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஜாமீனில் வெளிவரமுடியாத பிரிவுகளில், நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்து, 45 நாட்களுக்கு மேலாகியும், விசாரணை என்ற பெயரில் அடுத்த கட்ட நடவடிக்கை அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஸ்ரீரங்கம் தொகுதி பொறுப்பாளராகவும், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., வாகவும் உள்ள பரஞ்ஜோதியிடம், அவர் மீதான வழக்கை விசாரிக்கும் அதிகாரியான, போலீஸ் உதவி கமிஷனர் வீராச்சாமி காட்டும் பவ்யம், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், திருச்சி புத்தூர் தனியார் பள்ளியில் காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடிக்க பரஞ்ஜோதி உத்தரவிட, அதை கைகட்டி, வாய்பொத்தி, போலீஸ் உதவி கமிஷனர் வீராச்சாமி கேட்டவிதம் உடன் இருந்த போலீசாரையே முகம் சுளிக்க வைத்தது. இதனால், வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடக்குமா என்று டாக்டர் ராணி தரப்பும் சந்தேகிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக